Social Icons

Thursday 29 November 2012

வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?


 "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?
முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப் பட்டன.
(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)
"இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்'' என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?
மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?'' என்று கேட்ட போது, "வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.
எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்