Social Icons

Friday, 23 November 2012

நான்காம் நம்பர் .இக்ராம் – முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல்.

இந்த உஸூல் இஸ்லாம் வலியுறுத்திய ஒரு விடயம் என்பதில் சந்தேகமுமில்லை . ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பது நபிமொழி . ஒரு முஃமினுக்கும் மற்ற முஃமினுக்குமுரிய உதாரணம் ஒரு கட்டடத்தைப் போன்றது அதன் ஒவ்வொரு பகுதியும் மற்றப் பகுதியைப் பலமாகப் பிடித்திருக்கின்றது என்றும்,  முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கொண்டிருக்கும் நட்பு பாசம் என்பவற்றுக்கு உதாரணம் ஒரு உடம்பின் பல பகுதிகளைப் போன்றது . அவற்றில் ஒருபகுதி நோயால் பீடிக்கப்படும் போது ஏனைய உறுப்புக்கள் அனைத்துமே துன்பம் அனுபவிக்கின்றன என்பது போன்ற நிறைய நபிமொழிகளும் இது விடயமாக நிறையவே வந்துள்ளன .

தப்லீக் சகோதரர்களுக்கு அல்லாஹ் றஹ்மத்துச் செய்வானாக . மற்றவர்களை விட இவர்கள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது . இருப்பினும் இவர்களது இக்ராம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதுதான் வருத்தமான விடயமாக இருக்கின்றது .
ஒரு முஸ்லிம் பள்ளிக்கு வர வேண்டும் தொழுகையாளியாக மாற வேண்டும் என்பதில் இவர்கள் தமது சொந்த வேலையைக் கூட விட்டு விட்டுச் செயற்படுவது பாரட்டத்தக்கதே . ஆனால் இவர்களது இந்த எண்ணத்தில் இப்போது தவறானதொரு கருத்துக் கண்ணோட்டம் உருவாகி விட்டது . அதாவது இவர்களது உதவியை, உபசரிப்பை, இக்ராமை ஒருவர் பெற வேண்டுமானால் அவர் தப்லீக் ஜமாஅத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்,  அல்லது அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் எதிலும் சம்பந்தப்படாதவராக ஒரு அப்பாவி மகனாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் தப்லீக்கில் செல்லாதவராக அதனை விமர்சிப்பவராக,  அல்லது வேறு ஒரு அமைப்பில் இருப்பவராயின் அவர்களுக்கு தப்லீக் அமைப்பினர் இக்ராம் செய்வது ஒரு புறமிருக்க அவர்களை எதிரிகளை,  காபிர்களைப் பார்ப்பது போல் ஒருவித விரோதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை சாதாரணமாக நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .
அது மாத்திரமல்ல தப்லீக் அமைப்பினரிடம் உள்ள இஸ்லாமிய முரண்பாடுகளை ஏனைய உலமாக்கள் சுட்டிக்காட்டிய சமயம் அதனை ஏற்றும் கொள்ளாது,  அல்லது அவர்களிடம் அறிவு ரீதியாக தம் அமைப்பின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்புமளிக்காது அவர்களை அச்சுறுத்தல்,  ஆள்வைத்துத் தாக்குதல் போன்ற ரவுடிச் செயல்களில் ஈடுபடுவதையும் மேலிடம் இதைக் கண்டும் காணாமல் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது .
இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் எதிரிகளை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போர் என்ற கருத்தோட்டம் மேலிடங்களிலிருந்தே இவர்களுக்குப் போதிக்கபடுவது தான் வருந்தத்தக்க உண்மை.
இவர்கள் இலங்கையில் மாத்திரம் மேற்கொண்ட தாக்குதல்கள், கத்திக்குத்துக்கள், வாள்வெட்டுக்கள்,படுகொலை மிரட்டல்களைத் திரட்டினால் தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் .
இதனாலேயே இதன் வளர்ச்சி ஏனைய நாடுகளை விட இலங்கையில் அதிக வீறு நடை போடுகின்றது . காரணம் இவர்களை விமர்சிக்கவே அறிஞர்கள் பயப்படுகின்றனர் . தமக்கும் மிரட்டல் வருமோ, தாக்குதல் நடக்குமோ ஓதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தால் அதிகம் பேர் பேசாமடந்தைகளாக வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். இன்று உலக அளவில் இலங்கையை தப்லீக்கின் துரித வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படுகின்றது .’இந்த வேலையைச் செய்யும் முறையைச் சரிவரப் படிப்பதென்றால் சிலோனுக்குச் செல்லுங்கள்’ என்று டில்லிப் பெரியார்களே சிலோனை முன்னுதாரணமாகக் காட்டுவதன் ரகசியம் இதுதான். இங்கு தப்லீக்குக்கு எதிராக மறுபேச்சுப் பேச முடியாது மீறிப் பேசினால் இருட்டடி,  இனந்தெரியாத நபரின் தாக்குதல்,  அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் . இந்த அராஜகப் போக்கே இலங்கையின் குறிப்பாக கொழும்பு போன்ற பகுதிகளின் தீவிர தப்லீக் வளர்ச்சியின் ரகசியம் .
எனக்குத் தெரிந்த ஒருவர்தான் றம்ஸான் மௌலவி. கொழும்பைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் இதன் தீவிர கார்க்கூனாக இருந்தவர் .4 மாதங்கள் இந்தியா பாக்கிஸ்தான் சென்று வந்ததன் பின் தஃலீம் புத்தகத்தில் வரும் ‘கப்ரில் தொழுத பெரியார்’ சம்பவம் கூட சாத்தியம் தான் என் பயான் செய்தவர் பின்னர் மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி கற்றதன் பின் தப்லீக்கிலிருந்து விலகிக் கொன்டவர் . இவரை அந்த பகுதி மஸ்ஜிதின் நிர்வாகிகள் ஜூம்ஆ குத்பா நிகழ்த்துமாறு வேண்டினர் .
அவர் அதற்குத் தயாராக இருந்த வேளை அன்றிரவு சில தப்லீக் இயக்கத்தினர் இவர் வீடு வந்து ‘ நாளை நீங்கள் குத்பா நிகழ்த்தினால் நாங்கள்தான் உங்களுக்கு ஜனாஸா தொழுவிக்க வேண்டி வரும்’ என இரு தடவைகள் மிரட்டினர் . இதற்குப் பயந்து அவர் அன்று குத்பா நிகழ்த்தவில்லை .
இவர் இன்று ஹயாத்தாக இருக்கின்றார் முடிந்தால் அவரைக் கேளுங்கள் முகவரி தருகின்றேன் . ( இப்படி உண்மையில் நடந்ததா? என அவரிடம் அன்று நான் உறுதிப்படுத்தியதற்கு ஆச்சரியத்துடன் ‘இதிலென்ன சந்தேகம் என்றதுடன், இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன என்றார் .
இப்படி நிறைய சம்பவங்களைச் சொல்ல முடியும் .
எனவே இவர்களிடத்தில் இக்ராமுல் முஸ்லிமீன் – முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல் எனும் விடயம் உஸூலில் ஒன்றாக இருந்தாலும் ‘முஸ்லிம் ‘ என்பதன் பொருளையே இவர்கள் சுருக்கி குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விட்டார்கள் . இந்த அமைப்பைக் குறைகூறும், எதிர்க்கும் நபர் எவ்வளவுதான் பெரிய தக்வாதாரியாயினும் படித்தவராயினும் அவர் இவர்கள் வரையறுத்த முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டு வெளியேறி விட்டவராகவே கருதப்படுகின்றார் . போத்தலும் கையுமாகத் திரியும் ரவுடி – காவாலிகளைக் கூட இவர்கள் அனுதாபக் கண் கொண்டு பார்ப்பார்கள் . அவனுக்கு இக்ராம் செய்து அவன் வீடு சென்று சந்திப்பார்கள். அனால் இவர்களை விமர்சிப்போரை இஸ்லாத்தின் விரோதியாகச் சித்தரித்து தமது கார்க்கூன்களுக்கும் அவ்வாறே அறிமுகம் செய்து விடுவார்கள் . அதுமட்டுமன்றி அவர்மீது இல்லாத குற்றச்சாட்டுக்களையும் பொய்களையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் தயங்க மாட்டார்கள் . உண்மையில் இவர்களது நடவடிக்கைகள் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இருக்குமாயின் குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ரீதியாக, குர்ஆன் ஹதீஸிலிருந்து பதிலளிக்க ஏன் தயங்குகின்றார்கள் ?? இல்மு திக்ரை முக்கிய உஸூலாக்கிப் போதிப்பவர்கள் இல்மின் மூலம் பதிலளித்தால் என்ன ? அரிவாளை வீசி விட்டு அறிவால் பதிலளிக்க முடியாதா? தூய இஸ்லாமிய அறிவு இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தால் இந்த நிலைநிச்சயம் ஏற்பட்டிருக்காது .
உதாரணத்துக்கு மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ இஸ்லாமியா இஸ்லாமியக் கலாபீடம் இவர்களுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுக்கும் விடயம் . காரணம் தமது தப்லீக் அமைப்பில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த எத்தனையோ மத்ரஸா மாணவர்கள் — தப்லீக்கின் எதிர்கால வாரிசுகள் என முக்கியஸ்த்தர் மனப்பால் குடித்துக் கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் மதீனாவுக்கு ஓதச் சென்ற பின்னர் தலைகீழாக மாறி விட்டார்கள் . இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் அம்மாணவர்கள் தப்லீக் அமைப்போடு இணைந்து செயற்படாததன் நியாயங்களை -அவர்களின் குற்றச் சாட்டுக்களை ஏற்றும் கொள்ளாது,  அதற்கு அறிவியல் ரீதியாக மறுப்பும் தெரிவிக்காது பல்வேறு அபாண்டங்களை ஜாமியா மீதும் அம்மாணவர்கள் மீதும் இன்றும் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள் .
உலக வங்கியிலிருந்து அது ஒதுக்கும் வட்டிப்பணத்திலேயே ஜாமிஆ இயங்குகின்றதென்றும், இங்கு படித்துக் கொடுப்பவர்கள் யஹூதிகளும் நஸாராக்களுமாவார்கள் என்றும்,  யஹூதிய்யத்தையும் நஸ்ரானிய்யத்தையுமே இங்கு போதிக்கின்றார்கள் என்றும், அதனாலேயே இவர்கள் தப்லீக்கை எதிர்க்கின்றார்கள் என்றும், இங்குள்ள ஆசிரியர்கள் தாடியில்லாமல்,  ட்ரவுஸர் அணிந்து சிக்ரேட் புகைத்தவர்களாகவே படிப்பிப்பார்கள் என்றும் மாணவர்களுக்கு பணத்தாசை காட்டி கிருஷத்தவப் பிரச்சாரர்களாக மாற்றுகின்றார்கள் என்றும், எனவே ஹராத்தையே ஊட்டப்பட்டு ஹராத்திலேயே வளர்ந்த இவர்களிடமிருந்து ஹராமான விடயங்களே வெளிப்படுகின்றன என்றும் எத்தனையோ அபாண்டங்களைக் கட்டவிழ்வித்து விட்டிருக்கின்றார்கள் .
இது வெறும் ஆதாரமற்ற பேச்சில்லை . மாறாக பல கார்க்கூன்களுக்குரிய விஷேட பயான்களில் இது கூறப்படுகின்றது . அது மட்டுமின்றி இவ்வாறு கூறித்திரிந்த ஒரு தப்லீக் முக்கியஸ்த்தர் ஒருவரை அணுகி இது பற்றி விசாரித்தவிடத்து அவர் சிரித்துக் கொண்டே மௌனம் சாதித்தார் அவரிடமிருந்து நேரடியாக இதைக் கேட்ட சாட்சிகளும் இன்றும் உள்ளனர் .
ஐந்தாம் நம்பர் .இக்லாஸ் : மனத் தூய்மை.
இக்லாஸ் எனும் சொல் மனத்தூய்மை, கலப்பற்ற எண்ணம் போன்ற பொருள்களைக் கொண்டிருக்கின்றது மார்க்க சம்பந்தப்பட்ட விடயத்தைச் செய்யும் போது அதில் முகஸ்த்துதியோ,  உலக நோக்கங்களோ இல்லாது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செய்யப்படும் போதே அது இக்லாஸான அமல் எனும் பெயரைப் பெறுகின்றது .
அல்லாஹ் சொல்கின்றான்…
நாம் அவர்கள் செய்த அமல்களின் பக்கம் வந்து நோட்ட மிட்டு விட்டு (அவை இக்லாஸூடன் செய்யப்படாததன் காரணமாக) அவற்றை வீசியெறியப்பட்ட புழுதியைப் போன்று ஆக்கி விட்டோம்’ என்கின்றான் . (ஸூரத்துல் புர்க்கான் வசனம் 23)
எனவே ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட ஒரு இபாதத்தை இறைவனுக்காக இக்லாஸூடன் செய்கின்றானா? அல்லது அவனது எண்ணத்தில் முகஸ்த்துதி கலந்து விட்டதா?,  அல்லது உலக இலக்கை மையமாக வைத்துச் செய்கின்றானா? என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விடயம். அல்லாஹ்வைத் தவிர உள்ளத்தில் உள்ளதை அறிவோர் யாருமில்லை .இருப்பினும் ஒருவரின் புறச் செயற்பாடுகள் நடவடிக்கைகளின் மூலமாக அவரது நோக்கம் என்னவென்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும் .
தப்லீக் அமைப்பினரைப் பொறுத்த வரைக்கும் அவர்களை இந்த இக்லாஸ் விடயத்தில் நடுத்தர தப்லீக் பொறுப்புதாரிகள், அதியுயர் தப்லீக் முக்கியஸ்த்தர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கலாம் .
இவர்களில் நடுத்தர மட்டத்தில் உள்ள கார்க்கூன்கள் மஹல்லா, ஏரியாப்பொறுப்புதாரிகள் போன்றோர் பாமர மக்களைப் பள்ளியுடன் தொடர்பு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தூய்மையாக இக்லாஸூடன் நடந்து கொள்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது .
மக்கள் நல்வழி நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களது வீடு வரை தேடிச்சென்று அவர்களிடம் உரையாடல்,  குஸூஸி உமூமி கஸ்த்துக்களில் ஈடுபடுவதற்காக தமது அந்தஸ்த்து தொழில் வர்த்தகம் அனைத்தையும் தியாகங்செய்து நேரமொதுக்கல், அலைந்து திரிந்து மூலை முடுக்குகளெல்லாம் செல்வதால் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொள்ளல்,  எவ்வித சுயநல உலக நோக்கமுமின்றி தன்னை விடப்படிப்பில் அந்தஸ்த்தில் செல்வ நிலையில் தாழ்ந்தவர்களிடத்தில் கூட அவர்களின் காலடிக்குச் சென்று பள்ளிக்கு அழைத்தல்,  ஒரு காரியத்தைத் திட்டம;ட்டு மஸூரா அடிப்படை யில் செய்தல் போன்ற விடயங்களைச் சொல்லலாம் . இவர்களிடம் இவ்விடயங்களில் உலக நோக்கங்கள் எதுவும் இல்லை- இவற்றை இவர்கள் பூரண இக்லாஸூடனேயே செய்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன . இதற்காக இவர்களை அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
ஆனால் இவர்கள் தமது ஆத்மீக வழிகாட்டிகளாக அல்குர்ஆன்-ஹதீஸை நம்பியிருக்காமல் இதை விடுத்து இவர்களது மேலிடத்து உத்தரவுகளையும் வழிகாட்டல்களையுமே நூற்றுக்கு நூறு நம்பியிருப்பதால் இவர்களிடம் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் பல இவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தப்லீக் பெரியார்களின் வேத நூலான அமல்களின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு, ஸதக்காவின் சிறப்பு போன்றவற்றிலுள்ள அனைத்து விடயங்களையும் இவர்கள் உண்மைப்படுத்துவதால், சரியானவையென உறுதிப்படுத்துவதால் அதிலுள்ள நான் முன்னர் சுட்டிக்காட்டிய காட்டாத அனைத்தையும் நம்பித்தொலைத்து விடுவதால்; அதன் மூலம் பலவித பித்அத்தானஷிர்க்கான நம்பிக்கைகள் இவர்களிடம் தோன்றி விடுகின்றன .
எனவே இவர்களைப் பொறுத்த வரைக்கும் அல்குர்ஆனுக்கோ ஹதீஸூக்கோ முரணான எந்தவொரு விடயத்தையும் இவர்கள் செய்வதில்லை அதைத் தமது மேலிடத்துப் பெரியார்கள் வலியுத்தினாலும் சரிதான்,  மேலும் அவர்கள் சொல்பவை இஸ்லாத்துக்கு மாற்றமானதா இல்லையா? எனப் பார்த்தே எடுத்து நடப்போம் என இவர்கள் முடி வெடுத்தால்தான் இவர்கள் புரியும் இக்லாஸான தப்லீக் நடவடிக் கைகளுக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கொடுக்கப்படுமென அடித்துச் சொல்ல முடியும் . ஏனெனில் நாம் புரியும் ஒரு இபாதத்து ஸாலிஹான அமலாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அது முழுக்க இக்லாஸூடனும் செய்யப்பட வேண்டும் . அதேபோல் நபியின் வழிகாட்டல்ப்படியும் செய்யப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன .
இவர்களில் அடுத்த வர்க்கத்தினர் தப்லீக் உயர்மேலிடங்கள் . டில்லி ட்ரைவிந் போன்ற மர்க்கஸ்களின்; முக்கியஸ்தர்கள் . இவர்களில் சுயரூபம் தப்லீக் கார்க்கூன்களான பக்தர்களுக்கே சரிவரத் தெரியாது . இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டுமெனப் போதிப்பார்கள். ஆனால் தாம்சொல்பவைதான் இஸ்லாம் என வாதிப்பார்கள். நபிவழிதான் நம்வழியென பயான்களில் முழங்குவார்கள் ஆனால் முதலாம் நம்பர் ஹனபி மத்ஹபு வெறியர்களாக இருப்பார்கள் . ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவது வாஜிப் என்பார்கள் . அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்தவன் ரிஸ்க் அளிப்பவன் அனைத்து சக்தியுமுள்ளவன் – வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை என பயான்களில் சொல்வார்கள்,  ஆனால் மறுபக்கம் தமது விஷேட பயான்களில் தம் ஷேக்மார், குருமார்களுக்கு அற்புதங்கள் எனும் பேரில் நடந்த இஸ்லாத்தையே அழிக்கும் ஷிர்க்கான விடயங்களைக் கராமத் எனும் பெயரில் கட்டவிழ்த்து விட்டு கப்ர் வழிபாட்டுக்கு நியாயம் கற்பிப்பார்கள் அதன் பக்கம் மக்களை அழைக்கவும் செய்வார்கள் . பாமர அறபியல்லாத மக்களுக்கு வாசிக்க அமல்களின் சிறப்பு . .அறபிகளைக் கண்டால் றியாலுஸ் ஸாலிஹீன் ஹதீஸ்க் கிதாபைக் காட்டி நடிப்பு . ஏன் இது வரை இந்த அமல்களில் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவை இத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டது போன்று அறபியில் பெயர்க்கப்படவில்லை தெரியுமா? . அங்குதான் ரகசியமுள்ளது . முழு அறபு உலகத்தின் எதிர்ப்பையும் அதனால் சம்பாதித்து தமது திட்டங்கள் செயலற்றுவிடும் என்ற பயம்தான் காரணம்
ஸஹாபாக்களின் வாழ்க்கை எம்மிடம் வரவேண்டுமெனக் கூறி விட்டு தமது தஃலீம் புத்தகத்தில் ஏதேதோ சிர்க் நிறைந்த குப்பைகளை யார்யாருக்கோ நடந்ததாக எழுதி வைத்திருக்கின்றார்கள் . எனவே இவர்களுக்கு இரு பக்கமுண்டு .இரட்டை வேடமுண்டு . இவர்கள் தம்மை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களது உண்மையான நோக்கம் இவர்கள் சொல்வதைக் கேட்டு அதே போன்று செயற்படக்கூடிய ஒருபக்தர் கூட்டத்திற்கு இவர்கள் தலைமை வகிப்பதே. யதார்த்தத்தில் இவர்கலெல்லாம் சூபிகள், தரீக்காவாதிகள் . வாழையடி வாழையாக சூபித்துவக் குருக்களிடம் பைஅத் பெற்று ஆயிரக் கணக்கான மக்களிடமிருந்து பைஅத்தும் வாங்கியுள்ளனர் . சூபித்துவம், தரீக்கா என்றெல்லாம் மக்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்தினால் போதிய ஆதரவு கிடைக்காது எனும் காரணத்தால் இப்போதுள்ள புதிய பெயரில் தமது தரீக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்கள் இக்லாஸூடன் செயற்படுகின்றார்கள் என்று பாமரர்கள் நம்புவது வேடிக்கையான விடயம் .
இத்தகவல்கள் சிலருக்கு வியப்பைத் தரலாம் .அப்படிப்பட்டவர்கள்; மேற்கொண்டு இது சம்பந்தமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தியதன் பின்- தப்லீக் முக்கியஸ்த்தர்களிடமே இது பற்றி வினாவெழுப்பி தப்லீக்கின் நடவடிக்கைகள் அனைத்தையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக்கூறி நிரூபிக்குமாறு வலியுறுத்தி சரியானமுடிவெடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . மற்றும் சிலருக்கு இது ஆத்திரத்தையளிக்கலாம் . அப்படிப்பட்டவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விடாமல் ஆத்திரத்தைத் தூக்கியெறிந்து விட்டு அமைதியடைந்து மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தப்லீக் அமைப்பில் இருக்கின்றதா? என அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . நபிவழிதான் நம்வழி எனும் கொள்கையை ஏற்றவர்களாயிருந்தால் நீங்கள் நிச்சயம் இப்படிச் செய்வீர்கள் . இதற்கு மாற்றமாக குருவழியே குடியானவன்; வழி ஆசான்வழியே அடியேன்வழி எனும் கொள்கையில் வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் பயனளிக்காது . அல்லாஹ் நாடினால் – அவனாக இவர்களுக்கு நேர்வழிகாட்டினால்த்தான் உண்டு . அதற்காகவும் நாம் பிரார்த்திப்போம் .

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்