பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்
வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில்
இருந்து ஊகிக்க முடிகிறது.
இருந்து ஊகிக்க முடிகிறது.
ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை
தாங்க முடியாமல் உயிருக்காக
காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு ‘சிங்கேரி அம்மா’ என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.தாங்க முடியாமல் உயிருக்காக
விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.
இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை ‘பரசுராமனாகவும்’ பத்மாவதியை ‘பகவதியாகவும்’ (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் (‘மாத்ருபூமி’ மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.
சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.
இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?
அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.
அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று ‘ப்ளீனி’(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.
அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.
ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை ‘கலாசிகள்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் ‘மகா பிள்ளை’ (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி ‘மாப்பிள்ளை’ என்றாகிவிட்டது.
இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் ‘மகா பிள்ளை’ என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).
இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.
இந்தியாவில் அரேபியர்களின் காலனி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அரபு நாட்டில் இஸ்லாத்தின் ஏக இறைக் கொள்கையை போதிக்க துவக்கிய நேரம் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் வியாபாரத் தொடர்புடைய
அரேபியர்களில் பலர் புது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள (அந்த நாட்டு) தங்கள் மனைவி மக்களிடம் புது மார்க்கத்தை எடுத்துக் கூறினர். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இஸ்லாம் பரவிய அதே காலத்திலேயே மாலத்தீவு, இலங்கை, சீனா, மலேசியா போன்ற இடங்களிலும் இஸ்லாம் இதுபோன்று பரவிவிட்டது.
“Before the end of the Seventh century, a colony of Mualim Merchants had established themselves in Ceylone” (History of South India – Dr. V. Krishnamurthi P-19)
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்ப்பட்டினம், விழிஞ்ஞம் அல்லது பூவார், கொல்லம் முதலிய துறைமுகப்பகுதிகளில் அரேபியர்கள் காலனி அமைத்து விட்டனர். இப்பகுதிகளில் வியாபார நிமித்தம் தங்கி வந்த அரேபியர்களுடைய வித்தியாசமான வணக்க முறையும், நேர்மையும், ஒழுக்கமும், அன்பும், பணிவான செயல்களும் அங்குள்ள மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தன. இஸ்லாம் இங்கு பரப்பப்படவில்லை. அன்றைய முஸ்லிம்களின் செய்கைகளால் இஸ்லாம் இயல்பாக பரவியது.
“Arab settlements after the introduction of Mohammedanism were made inseveral places on the coast (west coast) whose principal objects was mainly TRADE for which the Hindu state of the interion apparently gave all facilities” (South India under the Mohammadan Invades-S.Krishnaswamy Iyengar p-69)
இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய பின் இங்கு வந்த அரேபியர்கள் வர்த்தக கண்ணோட்டத்தோடு அல்லாமல் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இங்கு வரவில்லை என்பதை பார்த்தோம்.
இங்கு வந்த அராபியர்கள் தம் கலாச்சாரத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை எதையுமே இங்குள்ள மனைவி பிள்ளைகளிடம் திணிக்க முற்படவே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களையே முன்போல் கடைப்பிடித்து வந்தனர். தம் தாய் மொழியிலேயே பேசி வந்தனர். உள்நாட்டு முறைப்படியே உடை உடுத்தி வந்தனர்.
இதனால் அரேபியர் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு கோட்பாட்டை கடைப்பிடித்து வந்த மக்களிடையே பரவி இருந்த இஸ்லாம் பிறர் கவனத்தை அன்று ஈர்க்கவில்லை.
கி.பி.636-லேயே முஸ்லிம்களின் கப்பல்கள் இந்திய பெரும் கடலில் காணப்பட்டதாக திரு. தாராசந்த் அவருடைய புகழ்பெற்ற நூலான Influence of Islam on Indian Culture…. என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் வி.ஏ.கபீர் தம்முடைய Kerala Muslim Monuments…. என்ற நூலில் எழுதியுள்ளார்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலம் முதல் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இஸ்லாம் இங்கு பரவலாக வளரவில்லை என்பது ஓர் அளவு உண்மையாகும். சில துறைமுகப் பகுதிகளிலும், அதை ஒட்டிய சில உட்பகுதிகளிலும் மட்டும்தான் பரவியிருந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதிகளான நாகப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களிலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், தேங்காய்பட்டினம், கொல்லம், கொடுங்கல்லூர், கள்ளிக்கோட்டை முதலிய இடங்களிலும் செல்வாக்கு மிகுந்த சமுதாயமாகவே புகழ்பெற்று விளங்கியது.
“இருண்ட நூற்றாண்டுகள்” என வரலாற்று பக்கங்களில் இடம் ஒதுக்கப்படாத இந்நூற்றாண்டுகளில் இஸ்லாம் ஓசை எழுப்பாமல் மெதுவாக அடி எடுத்து வைத்து பெற்ற வளர்ச்சியும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புத்த சமண மதத்தினருடைய மண்வாசனையைக் காட்டும் தோற்றமும் அவ்வப்போது இங்கு வந்த பயணிகளின் பயணக்குறிப்புகளில் இங்கு வாழ்ந்திருந்த முஸ்லிம்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டது. அன்றைய பயணக் குறிப்புகளை ஆவணமாக ஏற்று வரலாறுஇயற்றுகையில் இருண்ட நூற்றாண்டில் தோன்றி இங்கு மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் போய்விட்டன.
ஒன்பதாம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் இங்கு வருகை தந்துள்ள பயணிகளின் பயணக் குறிப்புகளிலோ, இலக்கியங்களிலோ முஸ்லிம்கள் இங்கு இருந்தனர் என்று தகவல் எதுவும் இல்லையே என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாம் இங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியிருக்க வேண்டுமென்று சில வரலாற்று ஆசிரியர்கள் வாதாடுகின்றனர். இவர்களுடைய வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுவது ‘சுலைமான்’ என்ற பாரசீக நாட்டு வர்த்தகருடைய பயணக் குறிப்பேயாகும்.
பயணக் குறிப்புகள்:
சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் கி.பி.851ல் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தம்முடைய பயணக் குறிப்பான ‘சில்சிலத்து – தவாரிக்’ எனும் நூலில் கீழ் கொடுத்தள்ளபடி குறிப்பிட்டுள்ளார்.
சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் கி.பி.851ல் இங்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தம்முடைய பயணக் குறிப்பான ‘சில்சிலத்து – தவாரிக்’ எனும் நூலில் கீழ் கொடுத்தள்ளபடி குறிப்பிட்டுள்ளார்.
“……I know not that there is any one of either nation (Chinese and Indian) that has embraced Muhammadanism or Speaks Arabic ‘ (Malabar – W.Logan P.295)
“இந்தியா, சீனா, இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இஸ்லாத்தைத் தழுவியவரோ அல்லது அரபி பேசுபவரோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார் சுலைமான். இவருடைய இந்த கூற்றை வைத்துக் கொண்டுதான் இஸ்லாம் இங்கு 9-வது நூற்றாண்டுக்குப் பிறகு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறிக் கொண்டனர்.
அரபி பேசி வந்தவர்களையும், அரபிகளுடைய தோற்றத்தில் இங்குள்ளவர் இருந்ததையும் சுலைமான் பார்த்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை அன்று, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், தம் நாட்டு உடையிலும் தம் தாய்மொழியில் பேசியும் வந்தது மட்டுமின்றி, தாம் முன் கொண்டிருந்த புத்தமத நெறியை பின்தொடர்ந்து தலையை மொட்டை அடித்திருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பயணி அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் சுலைமான் என்பவர் இந்தியாவைப் பார்த்ததில்லை என்று பெரும்பான்மையினரான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலே குறிப்பிட்ட வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது. எனக்குத் தெரியாது (I Know not) என்று தான் குறிக்கின்றாரே தவிர, ‘நான் பார்க்கவில்லை’ என்று குறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்திருப்பாரேயானால் ‘பார்க்கவில்லை’ என்று குறிப்பிட்டிருப்பார். இந்தியாவைப் பற்றிய பயணக் குறிப்பு எழுதியவர்களில் முதல் முஸ்லிம் பயணி இவராகவே இருக்க வேண்டும். சுலைமான் வெளியிடும் நிலையில் வைத்திருந்த தம்முடைய பயணக் குறிப்பு அவரிடமிருந்து தவறிவிட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின் அபூஸைய்து அல்ஹஸன் இப்னு அல் எஸீது என்பவர் சுலைமானுடைய கைக்குறிப்பை பரிசோதனை செய்து நூல் வடிவில் எழுதி வெளியிட்டதுதான் இன்று சுலைமானுடைய பயண நூலாக அறியப்படும் – சில்சிலத்து தவாரிக்.
கற்பனையான பயண நூல்கள்
சென்ற இதழில் சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் எழுதிய சில்சிலத்து தவாரிக் என்ற நூலைக் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
சுலைமானுடைய
நூலில் அவருடைய சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி கி.பி. 851-க்கு முன் அரேபியர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்துள்ள தகவல்கள் முழுவதும் அதில் காணப்படுகின்றன. அதனாலேயே சில வரலாற்று அறிஞர்கள் சுலைமான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று ஊகிக்கின்றனர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பாகம் 1, பக்கம் 78-79)
சுலைமானுடைய நூலை மட்டும் ஆதாரம் காட்டி இந்தியாவிலோ குறிப்பாக தென்னிந்தியாவிலோ இஸ்லாம் கி.பி 851-க்குப் பிறகுதான் வந்திருக்கக் கூடும் என்று நம்புபவர்கள் அந்தப் பயண நூலில் வேறு ஒரு இடத்தில் காணும் செய்தியை அப்படியே விட்டுவிடவோ அல்லது கவனம் செலுத்தாமலோ இருந்துவிட்டனர்.
“He (the king of Jutz) is unfriendly to the Arabs, still he acknowledges that the King of Arabs is the greatest of Kings. Among the princess of India there is no greater friend of Mohammedam faith than he.” (History of India as told by its own Historians! Elliot and Dowsan VOL.1 page 4)
இந்தியாவிலுள்ள பிற அரசர்களை விட ஜர்ஸில் உள்ள அரசர்களுக்கு இஸ்லாத்தின் மீது பகைமை இருந்ததாக கூறியுள்ளாரே? இஸ்லாம் இங்கு பரவி இருந்ததாலும்-வளர்ந்து வருவதாலும் தானே இப்படி பகைமை வைத்திருக்க முடியும். கி.பி.851க்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளில் தோன்றிவிருக்க வேண்டும், அல்லது தோன்றியது என்று வாதம் தொடுப்பவர்கள் சுலைமானுடைய பயண நூலை மேற்கோள் காட்டுவது எவ்விதம் பொருத்தமாக இருக்க முடியும்? இன்னும் அதையே நாடுவது, மூழ்கி இறக்கப் போகும் ஒருவர் காகிதத் தோணியை எட்டிப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.
இதைப் போல் சுலைமானுடைய கூற்றில் மேலும் பல முரண்பாடுகள் இருப்பதையும் காண முடிகின்றன. அவருடைய சில்சிலத்து தவாரிக் எனும் பயண நூலில் வேறு ஓர் இடத்தில் கூறப்பட்டிருப்பதை Roland-E-Miller தம்முடைய -Mappila Muslims of Kerala” எனும் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
“Most of the princess….. believe that the length of their and their reigns is granted in recompense for their Kindness to the Arabs. In truth there are no princess more heartily affectionate to their Arabs, and their subjects profess the same friendship for us” (page 46)
A.D.943ல் மசூதி (Masudi) எனும் அரபி பயணி ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவர் ஒருவரைத் தவிர 10-வது நூற்றாண்டிற்கு முன் எந்த முஸ்லிம் பயணியும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை. இதை மில்லரும் உறுதிப்படுத்துகிறார். ஆனால் மசூதி தென் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. மசூதியுடைய பயண நூலான அல்தன்பிஹ் வல் இஷ்றாப் (Al Tanbih wal-Ishraf)ல் தென் இந்தியாவைப் பற்றியச் செய்திகள் சுலைமானுடைய நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்று மில்லர் கருத்து தெரிவிக்கின்றார்.
இந்தியாவுக்கு வந்த அல்மசூதி, தென்னிந்தியாவை நேரடியாகப் பார்த்தாரோ இல்லையோ இதை இங்கு சர்ச்சைக்குட்படுத்த வேண்டாம். அல்மசூதி, சுலைமானுடைய பயண நூலிலிருந்தும், வேறு சில அரபி வர்த்தகரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவுமிருக்கலாம் அல்லது நேரடியாக பார்த்து அப்பயண நூல் எழுதியதாகவுமிருக்கலாம். தம்முடைய நூலில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையின் பக்கம் வெளிச்சம் காட்டுகின்றன.
“islam is flourishing in the country of the Balhara” – என்று “மசூதி” குறிப்பிட்டிருப்பதாக மில்லர் கூறுகிறார் (பக்கம் 46) ‘பல்ஹரா’ என்பது தென்மேற்கு கடற்கரைப் பகுதியை ஆண்டு வந்த அரசர் பெயராகும். இவருடைய தலைநகரம் கொங்கன் என்றும் கூறுகின்றார். இவர் ஒரு சேர அரசர் என்பதில் சந்தேகமில்லை என்று மில்லர் குறிப்பிடுகிறார். “கொங்கனில்” ‘சவுன்’ நகரத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாக” மசூதியின் பயணக் குறிப்பிலிருந்து எடுத்தாளுகின்றார் வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர். (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் எனும் நூலில் – பாகம் 3 பக்கம் 42)
நாம் சொல்லவரும் விஷயத்திற்கு சாதகமாகவும், பாதகமாகவும் சாட்சியம் கூறும் இந்த பயணக் குறிப்புகள் எல்லாம் நம்பகமான ஆவணங்களாக ஏற்றுக் கொள்வதற்கு முடியாத முரண்பாடுகள் நிறைந்த கற்பனைக் கதைகளாகும்.
14-வது நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த இபுனு பதூதாவின் பயண நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கருங்கக்கூறின்: இந்தப் பயணிகள் (10வது நூற்றாண்டிற்கு முன்பு வந்தவர்கள்? யாருமே நேரடியாக தென்னகம் விஜயம் செய்யவில்லை. அவ்வப்போது இங்கு வந்துபோகும் அரபி வர்த்தகரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட கேட்டறிவைக் கொண்டு, கற்பனையில் பயணம் செய்து இவர்கள் பயண நூல்கள் இயற்றிவிட்டனர் என்பதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலர் இந்நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி நிருபணம் செய்துள்ளனர்.
இபுனு பதூதாவும் இதைத்தான் செய்தார். இந்தியா வரும் முன் நடந்த சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட அறிவோடு கற்பனையும் கலந்து அவர் எழுதிய பயண நூலை மத்திய கால இந்திய வரலாற்றுக்கு ஆவணமாக எடுத்துக் கொண்ட நூல்தான் மாபெரும் அறிஞரான முஹம்மது பின் துக்ளக் வரலாற்றில் ஒரு முட்டாள் மன்னராக்கப்பட்டான். (உண்மையின் வெளிச்சத்தில் முஹம்மது பின் துக்ளக் எனும் தலைப்பில் ‘முஸ்லிம் முரசில்’ நான் எழுதிய தொடர் கட்டுரையைப் பார்க்க ஜூலை 89-ஜூன் இதழ்கள்)
ஒரு நாட்டையே பார்க்காமல் அந்த நாட்டைப் பார்த்ததாக கற்பனையில் புணையப்பட்ட பயண நூல்களை மேற்கோள்காட்டி இஸ்லாம் இங்கு 9வது நூற்றாண்டிற்கு முன் நுழையவில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள பயண நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இஸ்லாம் இங்கு தோன்றியதைப் பற்றி ஆராய்வதை விட மக்கள் அவர்களுடைய கலாச்சாரம், தொழில், தண்டிக்கப்பட்ட முறை, பழக்கத்திலிருந்த நாணயங்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்றிற்கு அடிப்படையான ஆவணங்களை முன்வைத்துதான் இவ்வரலாற்று உண்மையை ஆராய வேண்டும்.
மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் – சர்ச்சையும்
இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி பேசத் தெரியாத முஸ்லிம் ஒருவர், வேட்டி கட்டிக் கொண்டு தொப்பி அணியாமல் வடமாநிலம் ஒன்றுக்கு செவ்வாரேயானால் அங்குள்ளவர்கள் இவரை ஐயப்பாடோடுதான் நோக்குவார்கள் என்ற துக்ககரமான உண்மையை யாரறிவார்.
மாலிக்காபூர், மதுரையை நோக்கி படையுடன் வரும் வழியில் கண்ணனூர் என்ற இடத்தில் தமிழ் முஸ்லிம்களை சந்திக்கிறார். தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறியபோதும், தோற்றத்தில் தென்பட்ட சந்தேகத்தால் முஸ்லிம்கள் என்று அவரால் நம்ப முடியவில்லை. பிறகு ‘கலிமா’ பலமுறை சொல்ல வேண்டினார். முஸ்லிம்கள் கலிமா பலமுறை சொல்லி கேட்ட பிறகுதான் முஸ்லிம் என்று நம்பிக்கைக் கொண்டார். இருந்தும் அம்முஸ்லிம்களை அரை முஸ்லிம் (Half-Mussalman) என்றே அமீர் குஸ்று குறிப்பிடுகிறார்.
கி.பி.1311ல் இது நடந்தது. இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள முஸ்லிம்களின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கலாமே?
கஜனி முஹம்மதுடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்து 40ஆண்டுகள் இங்கு தங்கி, இந்தியாவைப் பற்றி தெரிந்தவர் அல்பிருணி (கி.பி.973-1048) என்ற மேதை. அவருடைய ‘அல்பிருணி பார்த்த இந்தியா’ என்ற நூலில் கேரளாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“மலபார்: கோவா முதல் கொல்லம் வரையிலுமாகும். அதன் நீளம் 300 பர்சக் (1பர்சக் 3 அரை மைல்) மலபாரிலுள்ள முக்கிய நகரங்களான கோவா, பாக்கனூர், மங்கலாபுரம், ஏழிமலை, பந்தலாயினி, கொடுங்கல்லூர் முதலிய இடங்களிலுள்ள மக்களெல்லாம் புத்த மதத்தினராவார்கள்…” (பயணிகளும் வரலாற்று ஆசிரியர்களும் – வேலாயுதன் பணிக்கச்சேரி பாகம் 1 பக்கம் 103-104)
கி.பி.943ல் வந்த “மசூதி” கொங்கணியில் உள்ள சவுன் நகரத்தில் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின் வந்த அல்பிருணி, அப்பகுதிகளில் முஸ்லிம்களே இல்லை என்று கூறுகிறார். இவற்றில் எதை ஏற்றுக் கொள்ள முடியும்?
ஹிந்து மதம் கேரளாவில் அதன் முழு வளர்ச்சியடைந்த காலமாகும். பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகள். புத்த மதம் நலிந்து போன காலமது. இருந்தும் அல்பிருணி மலபாரில் உள்ளவர்களெல்லாம் புத்த மதத்தினர் என்று குறிப்பிட்டதை ஏற்று ஏதேனும் வரலாற்று ஆசிரியர் இவருடைய கூற்றின்படி கொல்லம் முதல் கோவா வரையிலும் பரந்து கிடக்கும் பகுதிகளில் ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, முஸ்லிம்களோ இல்லை என்று குறிப்பிடவில்லையே. பிற்கால வரலாற்று ஆசிரியர்களும் பிருணியுடைய இக்கூற்றுக்கு எந்த விலையும் கற்பிக்கவில்லையே.
சில வேளை அல்பிருணி குறிப்பிட்டுள்ள மலபார் பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருக்க மாட்டார். யாரிடமிருந்தேனும் கேட்டுத்தெரிந்து கொண்ட அறிவை வைத்து எழுதியிருக்கக் கூடும். இல்லை, வடபகுதியில் தாம் பார்த்த முஸ்லிம்களைப் போலல்லாமல், தலைமுண்டனம் செய்து மேல் துண்டால் உடம்பைப் போர்த்தி திரிந்த முஸ்லிம்களைப் பார்த்து புத்த மதத்தினர் என்று தவறாக எண்ணி அப்படி எழுதியிருக்கலாம். அல்பிருணி எழுதியதுதான் உண்மை என்ற முடிவுக்கு வருவோமேயானால் 11-ம் நூற்றாண்டு வரையிலும் மலபார் பகுதிகளில் புத்த மதத்தினனர்களைத் தவிர முஸ்லிம்களோ பிற மதத்தினரோ இல்லை என்றுதானே அர்த்தம்(?)
இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிசப்தமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.712) சிந்து மார்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காலோசையின்றி இஸ்லாம் இங்கு பிரவேசித்தது யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதுவன்றி, திட்டமிட்டே இந்த ‘பிரவேசிப்பை’ மூடிமறைத்தனரோ?
கி.பி.712ல் முகம்மது இபுனு காசிமும் அவருக்கு முன் உமர் இபுனு கத்தாப்(ரலி) அவர்கள் காலத்தில் (634-643) தானா பகுதியில் கப்பலில் இறங்கியவர்களையும் வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதியில் கடற்கரை நகரங்களில் நெடுகிலும் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வடபகுதிகளிலும் வேகமாக பரவிய உண்மையை மறைக்கவும், 9-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இஸ்லாம் மேற்கு கிழக்கு கடற்கரைப்(West Coast) பகுதியில் ஆங்காங்கே தோன்றியது என்ற தவறான கருத்தை ஆணி அடித்து உண்மைப் படுத்தும் நோக்கோடு இஸ்லாத்தின் ஆரம்ப வருகையே நாட்டை ஆக்கிரமித்து ரண ஆறுகள் ஓடச் செய்வதற்காகத்தான் என்று களங்கமற்ற இந்திய மனதில் நஞ்சை கலப்பதற்காகவே இபுனு காசிமின் வருகையை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர்.
இந்தியாவின் வடபகுதிகளைப் பற்றிய வரலாறு 6, 7, 8 நூற்றாண்டுகளில் ஒளி மிக்கதாக இருக்கும்போது தென்னிந்தியாவிலுள்ள மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பெருமாள் ஆட்சிகள் நடத்தும் வரலாற்றில் இம்மூன்று நூற்றாண்டுகள் இருண்டுபோனது எப்படி? ஏன்?
இருண்ட காலமெனக் கூறி ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணம் சொல்லி உதாசீனமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் சில கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகள் பற்றியும் சில மன்னர்களைப் பற்றியும் சுந்தரமூர்த்தி நாயனார், ஆதி சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை போதனைகள் முதலியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன?
இப்படிப்பட்ட தகவல்கள், திரட்டிய வழியில், அதேகாலக்கட்டத்தில் தோன்றிய வளர்ந்த இஸ்லாத்தைப் பற்றியும் இங்குள்ள முஸ்லிம்களைப் பற்றியும் தகவல்கள் ஏன் திரட்ட தவறிவிட்டன? முஸ்லிம்களை சம்பந்தப்பட்ட இடங்கள் வரும்போது இருண்ட காலமெனக் கூறி ஒரு திரையைப் போடுவது எதனால்?
வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்
“இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar – Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.
நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.
இப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது ‘பொன்னானி’க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு ‘தங்களிடம்’ இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே ‘தங்களின்’ முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய ‘தங்களின்’ குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.
நம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்தியவரலாறு – ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.
மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.
இஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.
சாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.
சாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன்
சாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.
9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.
“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறுஇதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் – ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு – கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பக்கம் 70)
“துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். “மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்” என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.
அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, ‘மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்’ என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)
சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.
சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் – பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, ‘மாத்தியமம்’ மலையாளம் ஆண்டு மலர் – 1988 பக்.62)
இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.
ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் “பள்ளி பாண பெருமாள்” என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் “இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் “சேரமான் பெருமாள்” என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.
இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.
“ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.” (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.
“இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது”
திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:
கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.
எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது ‘தடை’ எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.
பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.
- தோப்பில் முஹம்மது மீரான்
நன்றி: மக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 – செப் 01, 2005
தொடரும்..
No comments:
Post a Comment