Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 11

தொழுகை பற்றிய நூல்
 
மக்ரிபுக்கு பிறகு, விடுபட்ட அஸர் தொழுகையை நிறைவேற்றுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 221

நிச்சயமாக உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அகழ் (தோண்டிய) நாளில் குறைஷிக் காபிர்களை ஏசக் கூடியவர்களாக இருந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சூரியன் மறையும் நிலையை (மக்ரிபு நெருங்கிவிட்டால்) அடைந்து விடும்வரை அஸர் தொழுகையை நான் தொழமுடியவில்லை‘‘ என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அத்தொழுகையை தொழவில்லை‘‘ என்றார்கள். அதன்பின்னர் புத்ஹான் என்ற ஓடையின் பால் நாங்கள் இறங்கினோம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளுச்செய்தார்கள் நாங்களும் ஒளுச்செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸர்தொழுகையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள். அதன்பிறகு மக்ரிபு தொழுகையை தொழுதனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

சூரியன் மறைந்த பிறகு மக்ரிபு (தொழுகை)க்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 222

நான் அனஸ் பின் மாலிக் அவர்களிடம் அஸருக்குப் பிறகு நஃபில் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘அஸருக்குப்பிறகு‘ தொழுகையைத் தொழுபவரின் கைகளில், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அடிக்கக்கூடியவர்களாக இருந்தனர்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சூரியன் மறைந்த பிறகு ‘மஃக்ரிபு‘ தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துகளைத் தொழக் கூடியவர்களாக இருந்தோம் எனக்கூறினார் (அப்போது) அவ்விரண்டு ரக்அத்துகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழக்கூடியவர்களாக இருந்தார்களா? என நான் கேட்டேன் (அதற்கவர்) அவ்விரு ரக்அத்துகளையும் நாங்கள் தொழக்கூடியவர்களாக இருந்ததை அவர்கள் பார்த்துகொண்டிருந்தனர். எங்களுக்கு கட்டளையிடவுமில்லை எங்களைத் தடுக்கவும் இல்லை எனக்கூறினார்.

அறிவிப்பவர் : முக்தார் பின் ஃபுல்ஃபுல் ரளியல்லாஹு அன்ஹு

மக்ரிபின் நேரம், சூரியன் மறைந்தது முதலாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 223

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் அஸ்தமித்து திரைக்குள் மறைந்து விடுமானால் மக்ரிபைத் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஸலமாபின் அல் அக்வஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்.

இஷாவின் நேரமும் அதை பிற்படுத்துவதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 224

இரவின் பெரும்பகுதி கடந்துவிடும் வரையும் பள்ளியிலிருந்தவர்கள் உறங்கிடும் வரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இஷாத் தொழுகைக்குப்) பிந்திவிட்டார்கள் அதன்பிறகு வெளியில் வந்து தொழுதார்கள் (தொழுது விட்டு) நான் என் உம்மத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவில்லையாயின் நிச்சயமாக இதுதான் அதற்குரிய நேரமாகும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

இஷாத் தொழுகையின் பெயர் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 225

கிராமத்து அரபிகள் உங்களது இஸாத் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை மிகைத்துவிட வேண்டாம். நிச்சயமாக அது அல்லாஹ்வின் வேதத்திலும் (அதன் பெயர்) இஷாதான். நிச்சயமாக அத்தொழுகை ஒட்டகங்களின் பால் கறக்கின்ற கடும் இருளான நேரம்வரை பிந்திவிடுகிறது எனக்கூறினார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : கிராமத்து அரபிகள் இஷாவை ‘அதமா‘ (அதாவது கடும் இருட்டு) என்ற பெயரில் கூறிவருகின்றனர். நீங்கள் அவ்வாறு கூறாமல் குர்ஆனில் அதன்பெயர் ‘இஷா‘ என கூறப்பட்டிருப்பது போன்று ‘இஷா‘ என்றே கூறுங்கள் என்பதே இதன் கருத்து.

தொழுகையை, அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்தவது விலக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 226

உமது தலைவர்(அமீர்)கள் தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்களேயானால் அல்லது முழுமையாக தொழுகையை மரணிக்கச் செய்து விடுவார்களேயானால் நீர் என்ன செய்வீர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். (அந்நிலை ஏற்பட்டால்) நான் (அபூதர்ரு) என்ன செய்யவேண்டுமென எனக்கு கட்டளையிடுகிறீர்கள்? எனக்கேட்டேன். (அதற்கு) தொழுகையை அதற்குரிய நேரத்தில் நீர் நிறைவேற்றிவிடுவீராக! (அதன்பிறகு) அத்தொழுகையை அவர்கள் தொழ நீர் அவர்களை எத்திக்(பெற்று) கொண்டால் நீரும் தொழுவீராக! நிச்சயமாக அவர்களோடு தொழுத தொழுகை உனக்கு நஃபிலாகிவிடும் என்றனர் என அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதே மிகச் சிறந்த செயலாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 227

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செயல்களில் மிகச் சிறந்தது எது? எனக் கேட்டேன். அதற்கு, தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றனர். பிறகு (சிறந்தது) எது? எனக் கேட்டேன். அதற்கு பெற்றோர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வதாகும் என்றனர். பிறகு (சிறந்தது) எது? எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதாகும் என்றனர். மேலும் அதைவிட அவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் நான் அதைவிட அதிகமாக கேட்கவில்லை எனக் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் யார் ஒரு ரக்அத்தை எத்திக் கொண்டாரோ? அவர் தொழுகையை எத்திக் கொண்டார் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 228

தொழுகையில் ஒரு ரக்அத்தை பெற்றுக்கொண்டவர் நிச்சயமாக அத்தொழுகையை (முழுவதுமாக) பெற்றுக்கொண்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறாhகள்.

ஓரு தொழுகையை ஒருவர் தொழுகாமல் தூங்கிவிட்டால் அல்லது அதை மறந்துவிட்டால் (பின்) அதை அவர் நினைத்துவிட்டால் அவர் (தாமதமின்றி) தொழுதுவிடவும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 229

எங்களுக்கு முன்னால் நின்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பிரயாணத்தில்) பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது நிச்சயமாக நீங்கள் உங்களது மாலைப்பொழுதிலும், இரவிலும் பிரயாணம் செய்து உயர்வான அல்லாஹ்வின் நாட்டம் இருப்பின் நாளைய தினம் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்வீர்கள் எனக் கூறினார்கள். இதைக் கேட்ட ஜனங்கள் ஒருவரையொருவர் பார்க்காது தொடர்ந்து நடக்க தொடங்கினர்.

ஒரு சமயத்தில் பாதி இரவு வரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வாகனத்தின் மீதிருந்தவாறே) சென்றுகொண்டிருந்தனர். நான் அவர்களின் விலாப்பக்கத்தில் இருந்தேன் எனக் கதாதா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாகனத்தின் மீதிருந்தவாறு உறங்கி தங்களின் வாகனத்திலிருந்து சாயத்தொடங்கினர். அப்போது நான் அவர்கள் பால் வந்து, அவர்களின் தூக்கத்தை கலைத்துவிடாமல் தாங்கி பிடித்தேன், முடிவில் அவர்கள் வாகனத்தின் மீது சரியாக அமர்ந்துவிட்டனர். இரவின் பெரும்பகுதி கடந்துவிடும்வரை வாகனத்தின் மீது அமர்ந்தவாறே தொடர்ந்தனர். (தூக்க மேலீட்டால் மீண்டும் வாகனத்தின் மீதிருந்து சாயத்தொடங்கினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழித்துக்கொள்ளாதவாறு (மறுபடியும்) அவர்களை தாங்கி பிடித்தேன். இறுதியில் தங்களின் வாகனத்தின் மீது சரியாக அமர்ந்துவிட்டனர். அதன்பிறகும் பிரயாணத்தை (அவ்வாறே) தொடர்ந்தனர். முடிவில் கடைசி இரவின்போது முன்பு இருமுறை சாய்ந்ததை கடுமையாக விழுந்துவிடும் அளவிற்கு சாய்ந்துவிட்டனர். அப்போது நான் அவர்கள் பால் வந்து, (வேகமாக) வந்து அவர்களை தாங்கி பிடித்தபோது அவர்கள் தங்களது தலையை உயர்த்தி (என்னை நோக்கி) நீ யார்? எனக் கேட்க நான் அபூகதாதா என்று கூறினேன். எப்போதிருந்து இப்பயணத்தில் நீர் என்னோடு இருக்கிறீர் என்று அவர்கள் கேட்க இரவு முழுவதும் என் பயணம் உங்களோடுதான் இருந்தது என்றேன். (இதைக் கேட்ட) அவர்கள், அல்லாஹ் உன்னை பாதுகாப்பானாக! எவ்வாறு அவனது நபியை நீர் பாதுகாத்தீறோ அதுபோன்றே என்று கூறிவிட்டு,

நம்மை நீர் பார்க்கிறீர் அல்லவா? ஜனங்களின் பார்வையிலிருந்து நாம் மறைந்திருக்கிறோமா? என்றார்கள். அதன்பின் யாரையேனும் நீர் பார்க்கிறீரா? எனக் கேட்க இதோ ஒரு வாகனக்காரர் என்றேன். இதோ ஒரு இரண்டாவது வாகனக்காரர் என்று முடிவில் நாங்கள் ஏழுபேர் ஒன்று சேர்ந்துவிட்டோம். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பாதையிலிருந்து நகர்ந்து வாகனத்தைவிட்டு இறங்கி (உறங்குவதற்காக) தங்களது தலையை தரையில் வைத்தனர். அதன்பிறகு தொழுகைக்காக நம்மை எழுப்பி தொழுகை தப்பிவிடாது பார்த்து கொள்ளுங்கள் என்றனர். (ஆனால் சகலரும் அசதி மேலீட்டால் உறங்கிவிட்டனர்). சூரியனின் வெப்பம் முதுகில் பட்டு முதலில் எழுந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள். நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டவாறு எழுந்தோம். அதன்பிறகு (வாகனங்களில்) ஏறுங்கள் என்றார்கள். நாங்கள் ஏறி நடந்தோம். கடைசியில் சூரியன் உயர்ந்ததும் வாகனத்திலிருந்து இறங்கி பின் கொஞ்சம் தண்ணீருடன் என்னிடம் இருந்த ஒளுச் செய்யும்பாத்திரத்தை கொண்டுவருமாறு வேண்டினர். அதிலிருந்த தண்ணீரை மிகக் குறைவாக உபயோகித்து ஒளுச் செய்தனர். ( அதன்பின்னும்) அதில் கொஞ்சம் தண்ணீர் மீதம் இருந்தது. (பிறகு) இந்த ஒளுச் செய்யும் பாத்திரத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், இதற்கு ஒரு பெரும் (அதிசய) சம்பவம் நிகழவிருக்கிறது என அபூகதாதாவிடம் கூறினார்கள்.

அதன்பின் பிலால் அவர்கள் தொழுகைக்கு பாங்கு கூற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத்து தொழுதுவிட்டு (தவறிவிட்ட) அந்த காலைத் தொழுகையை தொழுதனர். (எவ்வாறெனில்) ஒவ்வொரு நாளும் செய்(தொழு)வது போன்றே செய்தனர். அதன்பின் பிராயணிக்கத் தயாராகி வாகனத்தில் ஏறினர். (தொடர்ந்து) நாங்களும் அவர்களுடன் ஏறினோம். (பின்) எங்களில் சிலரிடம் மெதுவாக நம் தொழுகை விஷயத்தில் ஏற்பட்டுவிட்ட தவறுக்கான பரிகாரம் என்ன? என (பேசிக்கொண்டோம்) என அபூகதாதா கூறுகிறார். (இதை செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) என்னிடத்தில் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா? எனக்கூறி நிச்சயமாக தூங்குவதில் எவ்வித தவறுமில்லை, தவறென்பது அடுத்த தொழுகையின் நேரம் வரும்வரை இத்தொழுகையை தொழுகாமலிருப்பதே எனக்கூறினர் என அபூகதாதா கூறினார். அவ்வாறு ஒருவர் செய்யின் அத்தொழுகையைப் பற்றி நினைவுவரும் போது தொழுதுவிடவும் அடுத்த நாளாக இருப்பின் அத்தொழுகையின் நேரத்தில் தொழுதுகொள்ளவும் என்றனர்.

அதன்பிறகு ஜனங்கள் எல்லாம் விடிகாலைப் பொழுதை அடைந்து தங்களது நபியைத் தேடினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள். உங்களை விட்டுச் செல்லக்கூடியவர்கள் அல்லர் என அபூபக்கர், உமர் ரளியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள். (இதைக் கூறி முடித்த உடன்) நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இதோ) உங்களுக்கு எதிரில்தான் இருக்கிறார்கள். ஆகவே அபூபக்கர், உமர் ரளியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் கூற்றைக் கேட்டு அதற்கு கீழ்படிந்து இருப்பார்களேயானால் அவர்கள் நேர்வழி பெற்றிருப்பர் என ஜனங்கள் கூறினர்.

அடுத்து ஜனங்களிடம் நாங்கள் வந்தடைந்த போது பகல் நீண்டு ஒவ்வொரு வஸ்துவும் சூடாகிவிட்டிருந்தது, (அப்போது) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நாங்கள் அழிந்துவிட்டோம். தாகித்துவிட்டோம் என்று கூறினர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) உங்களுக்கு அழிவில்லை எனக்கூறி எனது சிறிய பாத்திரத்தையும் ஒளுச்செய்யும் பாத்திரத்தையும் கொண்டுவருமாறு கூறினர். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அதிலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள். அபூகதாதா ஜனங்களுக்கு அதை பருகச் செய்தார். ஒளுச்செய்யும் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் கிடைத்துவிட்டதைக் கண்ட ஜனங்கள் (தண்ணீர் குறைவாக இருப்பதாகக் நினைத்துகொண்டு) அதன்மீது வந்து விழ ஆரம்பித்தனர். (உடனே) உங்களில் ஒவ்வொருவரும் அழகான முறையில் அமைதியாக வந்து (பாத்திரங்களை) நிரப்பிக் கொள்ளுங்கள் நீங்கள் எல்லோரும் தாகத்தை தீர்த்துக் கொள்வீர்கள் என்றனர். (ஜனங்களும்) அவ்வாறே செய்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊற்றிக் கொண்டிருக்க நான் ஜனங்களுக்கு பருகச் செய்து கொண்டிருந்தேன் முடிவாக நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுமல்லாது மற்றெவரும் எஞ்சியிருக்கவில்லை.

அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அத்தண்ணீரை) ஊற்றி என்னைப்பருகுமாறு கூறினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! தாங்கள் பருகாதவரை நானும் பருகமாட்டேன் என்றேன். (அதற்கு) நிச்சயமாக ஜனங்களுக்குப் பருகக் கொடுப்பவர் அவர்களில் பருகுபவர்களில் கடைசியானவராவார் என்றார்கள். (அதைக்கேட்ட) நான் உடனே பருகிவிட்டேன். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பருகினார்கள் என்று கூறினார். ஜனங்களெல்லோரும் தண்ணீர் குடித்து தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டுவிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினர் என்பதாக அபூகதாதா கூறுகிறார். ஜாமிஉ மஸ்ஜிதில் இந்தச் செய்தியை ஜனங்களுக்கு நான் (அப்துல்லாஹ் பின் ரபாஹ் ரளியல்லாஹு அன்ஹு) அறிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், வாலிபரே! இதோ பார், எவ்வாறு (நீ) இது பற்றிச் சொல்கிறாய், இந்த இரவில் வாகனத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவானாக இருந்தேன் எனக்கூறினார்.

அதற்கு நான், இது சம்மந்தப்பட்ட செய்தி பற்றி நீரே (என்னை விட) மிகத் தெரிருந்திருப்பீர் என்றேன். அதற்கவர், நீர் யாரைச் சேர்ந்தவர் எனக்கேட்டார். (அதற்கு) அன்ஸார்களைச் சேர்ந்தவன் நான் என்று கூறினேன். (அதற்கவர்) நீங்கள் தான் உங்களது இச்செய்தியை பற்றி மிகத் தெரிந்தவர்கள் ஆகவே நீர் அறிவிக்கலாம் என்றார். (அதன்பின்) கூட்டத்தவருக்கு நான் அது பற்றி கூறிக்கொண்டிருந்தேன். அப்போது இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த இரவில் நான் அச்சம்பவத்தில் கலந்து கொண்டேன் உன்னைப்போல் நிச்சயமாக வேறு எவரும் மனனம் செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை எனக்கூறினார்.

அறிவிப்பவர் : அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு

ஒரே உடையில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 230

ஒரே உடையில் தொழுவது பற்றி கேட்பவர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் ஒவ்வொருவருக்கும் இரு உடைகளா?1 எனக்கேட்டனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : 1 ஸஹாபா ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்களில் அநேகரிடம் ஒரு உடைக்கு மேல் இருந்ததில்லை என்பதும், ஒரே உடையில் தொழுகலாம் என்பதையும் இதன்மூலம் விளக்கிக் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 231

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரே உடையைக் கொண்டு சுற்றிக்கொண்டவர்களாக, அதன் இரு ஓரங்களையும் தங்களின் தோல்புஜங்களின் மீது வைத்தவர்களாக (காட்டியவாறு இருக்க) நான் கண்டேன், என உமர், பின் அபீஸலமா ரளியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்.

அடையாளமிடப்பட்ட விரிப்பில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 232

அடையாளங்கள் இடப்பட்ட, நீண்ட கோடுகள் போடப்பட்ட விரிப்பில் தமது தொழுகையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்றுவிட்டனர். (நின்ற பின்) அதன் அடையாளங்களை நோட்டமிட்டனர். (எனவே) தங்களது தொழுகையை முடித்துக் கொண்டதுமே, அபூஜஹ்ம் பின் ஹுதைபாவின்பால் ‘அடையாளமிடப்பட்ட‘ இவ்விரிப்பைக் கொண்டு செல்லுங்கள். எந்த அடையாளமும் இல்லாத விரிப்பை எனக்காக கொண்டுவாருங்கள் என்றனர். நிச்சயமாக அது (அடையாளமிடப்பட்ட விரிப்பானது) தொழுகையில் கொஞ்சமுன்பு எனது கவனத்தை சிதறடித்து விட்டது எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

பாயின் மீது தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 233

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டியார் அவர்கள், சமைத்த உணவையருந்த (விருந்திற்கு) அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வந்து) அதிலிருந்து உண்ட பின் உங்களுக்காக நான் தொழுகை நடத்துகிறேன், எழுந்திருங்கள் என்றார்கள்.

நீண்ட நாட்கள் உபயோகித்ததால் கருப்படைந்து விட்ட ஒரு ஈச்சம்பாயை எடுத்து வந்து அதில் தண்ணீரைத் தெளித்து (சுத்தம் செய்து அதை விரித்தேன்) அதன்மீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்றனர். அவர்களுக்குப்பின் நானும், எதீமும், எங்களுக்குப்பின் கிழவியும் வரிசையாக நின்றோம் எங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ‘ரக்அத்‘ தொழுகை நடத்திவிட்டு திரும்பிச் சென்றனர். இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா என்பவர் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக அறிவிக்கிறார்.

‘காலணிகளோடு தொழுவது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 234

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு காலணிகளோடு தொழக்கூடியவர்களாக இருந்தார்களா? என அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டதற்கு அவர் ‘ஆம்‘ எனக்கூறினார்.

அறிவிப்பவர் : ஸயீது பின் யஜீது ரளியல்லாஹு அன்ஹு

பூமியில் முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளி என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 235

‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளி எது? என (அபிதர்ரு) நான் கேட்டேன். மஸ்ஜிதுல் ஹராம் என்றார்கள். ‘அதன் பிறகு எது?‘ என நான்‘ கேட்டேன். ‘மஸ்ஜிதுல் அக்ஸா‘ என்றனர். ‘இரு பள்ளிகளின் அமைப்புக்கு (மத்தியிலுள்ள கால) இடைவெளி எவ்வளவு?‘ எனக்கேட்டேன். ‘நாற்பது வருடங்கள்‘ என்றனர். “பூமியில் எந்தப்பகுதியில் தொழுகையை அடைந்து (அதன் நேரம்) வந்து விட்டாலும், தொழுகையை நிறைவேற்றி விடு, அதுவே தொழுமிடமாகும்” என்றனர்.

அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியை கட்டுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 236

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வந்து (மதினாவின்) மேட்டுப்பகுதியில் (இருந்த) “பனூ அம்ரு பின் அவ்ப்” கூட்டத்தினரிடையே வந்திறங்கி பதினான்கு இரவுகள் அவர்களுக்கு மத்தியில் தங்கியிருந்தனர். அதன்பின் ஒரு தூதுவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனின்னஜ்ஜார் கூட்டத்தவர்பால் அனுப்பினர். அவர்களெல்லோரும் தங்களின் வாள்களை சுமந்தவாறு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பிடம்) வந்தடைந்தனர். அச்சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருக்க, அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னாலிருக்க, பனின்னஜ்ஜார் கூட்டத்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சூழ்ந்திருக்க இறுதியில் (அனைவரும்) அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் (வீட்டின்) முற்றத்திற்கு வந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையின் நேரம் எங்கு வந்துவிட்டாலும் தொழுது கொள்வார்கள். சில சமயம் ஆட்டுத் தொழுவத்திலும் (கூட) தொழுதிருக்கிறார்கள். அதன்பிறகு (தான் ஒரு) பள்ளியை நிறுவ கட்டளையிட்டனர். அதற்காகவே பனின்னஜ்ஜார் கூட்டத்தவர்களை அழைத்துவருமாறு தூதர் ஒருவரை (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்ப, அவர்களும் வந்து சேர்ந்தனர் என்பதாக அறிவிப்பாளர் அறிவிக்கிறார்.

நஜ்ஜாரின் மக்களே! இந்த உங்களின் தோட்டத்தை எனக்கு கிரயத்திற்கு தாருங்கள் என்றனர். (அதற்கவர்கள்) இல்லை, இதன் கிரயத்தை நாங்கள் அல்லாஹ்வை தவிர யாரிடமும் தேடமாட்டோம் என்றனர். நான் கூறக்கூடியவைகளெல்லாம் அங்கே (அத்தோட்டத்தில்) இருந்தன. என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (அவையாதெனில்) ஈச்சமரங்களும் முஷ்ரிக்குகளின் கப்றுகளும், சீரற்ற தரைப்பகுதிகளும் இருந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈச்சமரங்களைப்பற்றி கட்டளையிட்டனர். அவைகள் வெட்டப்பட்டன. முஷ்ரிக்குகளின் கபுறுகள் தோண்டப்பட்டன. சீரற்ற பகுதிகள் சீர் செய்யப்பட்டன. ஈச்சமரத்தின் கட்டைகள் கட்டப்படும் கட்டிடத்தின் கிப்லாப் பகுதியில் வைக்கப்பட்டன. கதவுகளின் இரு ஓரங்களும் கற்களால் கட்டப்பட்டன.

(இவ்வேலையைத் தொடங்கி செய்ய ஆரம்பித்ததும் சோர்வை போக்கிக் கொள்ள வேண்டி) “இரட்சகா! மறுமையின் நன்மையின்றி வேறு நன்மை இல்லை: அன்ஸார்களுக்கும், முஹாஜிர்களுக்கும் நீ உதவி புரிவாயாக!” என்ற ‘ரிஜ்ஜ்‘ வகைக் கவியை, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடன் இருக்க பாடிக்கொண்டிருந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளி பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 237

எனக்கு (அறிவிப்பவருக்கு) அருகாமையில் அப்துர்ரஹ்மான் பின் அபீஸயீது அல்குத்ரீ சென்றார். இறையச்சத்தின் மீது நிர்மானிக்கப்பட்டுள்ள விஷயத்தில் உமது தந்தையிடம் எவ்வாறு கூறக் கேட்டீர்? என அவரிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மனைவிமார்களின் சிலரின் வீட்டில் (இருந்த போது) நான் நுழைந்து ‘இரு பள்ளிகளில் இறையச்சத்தின் மீது நிர்மானிக்கப்பட்டபள்ளி (அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க) எது?‘ எனக்கேட்டேன். (அதற்கவர்கள்) முன் கைகளில் பொடிகற்களை எடுத்து அதை பூமியின் மீது போட்டுவிட்டு அதன்பிறகு அதுதான் இந்த உங்களுடைய (மதினா) பள்ளி எனக்கூறினார். “இவ்வாறே இந்த ஹதீஸை அவர் (உன்தந்தை) கூற நான் செவியுற்றேன் என நிச்சயமாக நான் சாட்சி கூறுகிறேன்‘” எனக்கூறினேன்.

அறிவிப்பவர் : அபூஸலமா பின் அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு

மதினா, மக்கா பள்ளியில் தொழுவதின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 238

நிச்சயமாக ஒரு பெண்ணுக்கு ஒரு சங்கடமிருந்தது, எனக்கு இதிலிருந்து அல்லாஹ் ஆரோக்கியத்தை நல்குவாயானால் நிச்சயமாக நான் பைத்துல்முகத்தஸில் தொழுவேன் எனக்கூறினார். (அல்லாஹ் அவளுக்கு ஆரோக்கியத்தை நல்கி) அதிலிருந்து நீக்கம் பெற்று விட்டார். அதன்பிறகு (அங்கு) புறப்பட தயாராகி மைமூனா அவர்களிடம் வந்தடைந்து ஸலாம் கூறி அதுபற்றிக் கூறினார். (அதற்கு மைமூனா அவர்கள்) அமர்ந்து நீர் விருப்பப்பட்டதை உண்ணுவீராக! (உண்டபின்) ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியில் தொழுவீராக காரணம் நிச்சயமாக நான் “அப்பள்ளியில் ஒரு தொழுகை, அதல்லாத பள்ளிகளில் கஃபாபள்ளி நீங்கலாக தொழும் ஆயிரம் தொழுகைகளை விட மிகச்சிறந்தாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டேன் என்றனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

மஸ்ஜிது குபாவிற்கு வந்து அருகில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 239

‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (சில சமயம் வாகனத்தின் மீது) ஏறியவர்களாக, அல்லது நடந்தவர்களாக ‘குபா‘ பள்ளிக்கு வந்து அப்பள்ளியில் இரண்டு ரக் அத் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள்‘ என இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்விற்காக யார் பள்ளியைக் கட்டினாரோ அவரின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 240

நிசச்யமாக உதுமான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஒரு) மஸ்ஜிதை நிர்மாணிக்க விரும்பினார்கள். ஜனங்கள் அதை வெறுத்து அதன் நிலையிலேயே அதை விட்டு விட விரும்பினர். அப்போது.

‘‘இறைவனுக்காக யார் பள்ளியைக் கட்டுகிறாரோ? அவருக்கு இறைவன் சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்‘‘ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூது பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்