Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 10

தொழுகை பற்றிய நூல்
 
தொழுகை கடமை என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 201

(எல்லா விஷயங்களைப் பற்றியுமே கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அது பற்றி விளக்கி கூறப்பட்டால், அது உங்களுக்கு தீமையாகி விடும் என்ற அல்லாஹ்வின் கூற்றிற்கிணங்கி) எது பற்றியும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (நாங்கள்) கேள்விகள் கேட்பதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தோம்.

கிராமப் பகுதியிலிருந்து புத்திசாலி மனிதர் ஒருவர் வந்து (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கேட்பார். (அதை) நாங்கள் செவியுறுவோம் (இவ்வாறு நடந்து வருவது) எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. (நிலைமை இவ்வாறிருக்க ஒருநாள்) கிராமப்பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்து முஹம்மதே! உம்மால் அனுப்பபட்ட தூதர் (நபர்) நம்மிடம் வந்து நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தூதராக அனுப்பியிருக்கிறான் என்று நீர் கருதுவதாக அவர் கருதுகிறார் (கூறுகிறார்) என்றார். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) (ஆம்!) அவர் உண்மையே உரைத்தார் எனக்கூறினார்கள். (அடுத்து) வானத்தைப் படைத்தது யார்? என அவர் (வந்தவர்) கேட்டார். (அதற்கு) ‘அல்லாஹ்‘ என (பதில்) கூறினார்கள்.

(அடுத்து) பூமியைப் படைத்து யார்? என (வந்திருந்த) அவர் கேட்டார் (அதற்கு) ‘அல்லாஹ்‘ என (பதில்) கூறினார்கள். (அடுத்த) இந்த மலைகளையெல்லாம் நட்டு வைத்து அவற்றில் ஆக்க வேண்டியவைகளை எல்லாம் ஆக்கியவன் யார்? எனக்கேட்டார். (அதற்கு) ‘அலலாஹ்‘ என (பதில்) கூறினார்கள்.

வானத்தைப்படைத்து, பூமியைப்படைத்து, இந்த மலைகளையும் நட்டு வைத்தானே அவனின் மீது சத்தியமாக! அந்த அல்லாஹ்தான் (உம்மைத்தூதராக) அனுப்பி வைத்தானா? என (வந்திருந்த) அவர் கேட்டார். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆம் என்றனர்.

நம்முடைய பகல் வேலையிலும் இரவு வேலையிலும் ஜந்து தொழுகைகள் நம்மீது கடமையென உம்மால் தூது அனுபப்பட்டவர் கருதுகிறார் எனக்கூறினார். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம); அவர்கள் ‘அவர் உண்மையே உரைத்தார்‘ என்றார்கள். (அதற்கவர்) உம்மைத்தூதராக அனுப்பி வைத்தானே அவனின் மீது சத்தியமாக அல்லாஹ்தான் இதை(ச் செய்யுமாறு) கட்டளையிட்டானா? எனக்கேட்டார் (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஆம்‘ என்றனர்.

உம்மால் அனுப்பட்ட அந்நபர் நமது பொருள்களில் ஜகாத் (கடமை) உண்டு எனக்கருதுகிறார் எனக்கூறினார். அவர் உண்மையே உரைத்தார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அதற்கவர்) உம்மைத் தூதுவராக அனுப்பி வைத்தானே அவன் மீது சத்தியமாக அல்லாஹ்தான் இதைக் கொண்டு கட்டளையிட்டானா? (எனக்)கேட்டார். (அதற்கு) ‘ஆம்‘ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

உம்மால் அனுப்பப்பட்டவர் பைத்துல்லாஹ்வை (அல்லாஹ்வின் இல்லத்தை) அதன்பால் பாதையால் (பயணம் செய்ய) சக்தி பெற்றவர்கள் மீது ஹஜ் செய்யவேண்டுமென்பது கடமையெனக் கருதுகிறார் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையே உரைத்தார் என்றார்கள். பிறகு (வந்தவர்) திரும்பிச் செல்லத் தொடங்கி, உண்மையைக் கொண்டு உம்மை யார் அனுப்பி வைத்தானோ அவனின் மீது சத்தியமாக! அவைகளை விடவும் (எதையும்) நான் அதிகப்படுத்த மாட்டேன். அவற்றிலிருந்து எதையும் குறைக்கவும் மாட்டேன் எனக்கூறிச் சென்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் (கூற்றில்) உண்மையாளராக இருப்பாரேயானால் நிச்சயமாக சுவனம் புகுந்து விட்டார் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்தாக கடமையாக்கப்பட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 202

நிச்சயமாக தொழுகை முதலில் இரண்டு ரக்அத்தாகவே கடமையாக்கப்பட்டது. (அதை) பிரயாணத் தொழுகையாக (பிறகு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. (பிரயாணத்தில் இல்லாத சமயம்) ஊரில் இருக்கும்போதுள்ள தொழுகை (நான்காக) நிறைவு செய்யப்பட்டது என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் காரியமென்ன அவர்கள் பயணத்தில் தொழுகையை நிறைவு செய்கின்றனரே (அது ஏன்?) என நான் உர்வாவிடம் கேட்டேன். (அதற்கவர்) உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கருத்துக் கொண்டது போன்றே (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும்) கருத்துக்1 கொண்டுள்ளனர் எனக்கூறினார்.

குறிப்பு : 1 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பயணத்தில் நிறைவாகவும் தொழுகலாம், குறைத்தும் தொழுகலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். ஆகவே நிறைவாகத் தொழுதுள்ளனர்.

ஐந்து தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய குற்றங்களுக்குப்) பரிகாரமாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 203

(ஒரு நாளின்) ஐந்து தொழுகைகள், ஒரு ஜும்ஆ (தொழுகை)யிலிருந்து (அடுத்த) ஜும்ஆவரை இவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய) குற்றங்களுக்குப் பரிகாரமாகும். பெரும்பாவங்களில்1 ஒருவன் மூழ்கி விடாதவரை ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளான்வரை பெரும்பாவங்கள் தவிர்க்கப்பட்டால் அவைகளுக்கு மத்தியில் (ஏற்படும் சிறிய) பாவங்களுக்கு (அது) பரிகாரமாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: 1 பெரும்பாவங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஹதீஸ் 46, 47, ஆகிய இரு ஹதீஸ்களில் காண்க

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 204

(ஒரு) மனிதருக்கும் ஷிர்க்கிற்கும், (ஒரு மனிதருக்கும்) குப்ருக்குமிடையில் வித்தியாசத்தைக் காட்டுவது தொழுகையைவிடுவதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு

1எல்லா நேரங்கள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 205

ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப்; (போன்று) ஆகின்ற (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும்.

அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும்.

மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும்.

ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும். சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிறுத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ், பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹுமா

ஹதீஸ் எண் : 206

நிச்சயமாக தொழுகைகளின் நேரங்கள் பற்றிக் கேட்கக்கூடியவர் ஒருவர் அவர் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்)களிடம் வந்து கேட்டார். அவருக்கு எந்த பதிலையும் அவர்கள் கூறவில்லை. புரைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் இரண்டு நாள் எங்களோடு தொழுவீராக! எனக்கூறினார்கள் என பதிவாகியுள்ளது. எந்த பதிலையும் கூறவில்லை என்பதற்கு நேரங்கள் பற்றி செயல் ரூபத்தில் கற்றுத்தரவேண்டுமென்பதால் விளக்கமாக கூறவில்லை என்று விளங்கிக் கொள்ளவேண்டும்) பிலால்1 அவர்களுக்கு (பாங்கு இகாமத்துக் கூற) கட்டளையிட்டார்கள் (அவ்வாறு அவர் செய்தபிறகு) ஃபஜ்ரு உதயமானதும் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம); அவர்கள் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றிவிட்டார்கள். (அப்போது) சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததும் லுஹரை (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிறைவேற்றினார்கள். பகல் பொழுது பாதியை அடைந்து விட்டது எனக்கூறக்கூடியவர் கூறினார். அவ்வாறு கூறியவர் அவர்களில் மிகத் தெரிந்தவராக இருந்தார். அதன்பிறகு அவரு(பிலாலு)க்கு (பாங்கு இகாமத்துக் கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு சூரியன் உயரத்தில் இருந்த போது அஸரை நிறைவேற்றினார்கள். அதன்பிறகு அவரு(பிலாலு)க்கு (பாங்கு இகாமத்துக் கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சூரியன் மறைந்த போது மக்ரிபை (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் நிறைவேற்றினார்கள். அதன்பிறகு (பாங்கு இகாமத்துக் கூறுமாறு) பிலாலுக்கு கட்டளையிட்டார்கள். செம்மேகம் மறைந்த சமயத்தில் இஷாவை நிறைவேற்றினார்கள். அடுத்தநாள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஐ;ரு தொழுகையை முடித்துக்கொண்டபோது கூறக்கூடியவர், சூரியன் உதயமாகிவிட்டது என்று அல்லது சூரியன் உதயமாகப்போகிறது எனக்கூறினார். அதன்பிறகு ளுஹரை நேற்று அஸர் தொழுத நேரம் அளவிற்கு சமீபமாக பிற்படுத்தினார் அதை அவர்கள் முடித்துக்கொண்ட போது, கூறக்கூடியவர் சூரியன் சிவந்துவிட்டது எனக்கூறினார். அதன்பிறகு மக்ரிபை செம்மேகம் மறையும்வரை பிற்படுத்தினார்கள். அதன்பிறகு இஷாவை இரவின் மூன்று பகுதிகளில் முதல்பகுதி அளவிற்கு பிற்படுத்தினார்கள். அதன்பிறகு காலைப்பொழுதை அடைந்துவிட்டனர். அப்போது (நேரங்கள் பற்றி) கேட்டு வந்தவரை அழைத்து நேரம் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில்தான் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 ‘‘பிலால் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்‘‘ என்ற வார்த்தை முஸ்லீமில் பதிவாகவில்லை. புரைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் ஒவ்வொரு நேரத்திற்கு பாங்கு இகாமத்தைக் கூறுமாறு கட்டளையிட்டார்கள் என்பது பதிவாகியுள்ளது.

ஃபஜ்ரு தொழுகையை இருட்டில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 207

ஹஜ்ஜாஜ் மதினாவிற்கு முன்னோக்கி வந்தபோது, ஜாபிர் பின் அப்துல்லாஹு ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர் ளுஹரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடும் வெயிலில் தொழுதனர். அஸரை சூரியன் சுத்தமாக இருக்கும் போது தொழுதனர். மக்ரிபை சூரியன் மறைந்ததும் தொழுதனர். இஷாவை (இஷாத் தொழுகையை) சில சமயங்களில் பிற்படுத்தித் தொழுவார்கள், சில சமயம் துரிதமாகத் தொழுதுவிடுவார்கள். (அதாவது) அவர்(ஜனங்)களெல்லாம் ஒன்று கூடிவிட்டால் துரிதமாகத் தொழுதுவிடுவார்கள். அவர்களை பிந்திவிடக்கண்டால் பிற்படுத்துவார்கள். ஸுப்ஹுத் தொழுகையை அவர்கள் (அல்லது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தொழுகையை இருட்டில் தொழக்கூடியவர்களாக இருந்தனர் என ஜாபிர், பின் அப்துல்லா ரளியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு

ஸுப்ஹு, அஸர் தொழுகையை பேணிக்கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 208

சூரியன் உதயத்திற்கு முன் (ஃபஜ்ரையும்) அது (மாலையில்) அடைவதற்குமுன் அஸரையும் தொழுதவர் நரகம் புகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன் என ருஜபாவின் தந்தை கூறுகிறார். பஸரா வாசிகளில் ஒரு மனிதர் அவரிடம் இதை நீர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தான் கேட்டிரா? என அவரிடம் கேட்டார் அதற்கு ஆம்! என்றார் (அவ்வாறென்றால்)

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அதைச் செவியுற்றேன். என் காதுகள் கேட்டன. எனது மனம் அதை பேணிப்பாதுகாத்து கொண்டது என நான் சாட்சி கூறுகிறேன் என (அம்) மனிதர் கூறினார்.

அறிவிப்பவர் : அபூபக்கர் பின் உமாராபின் ருஜபா ரளியல்லாஹு அன்ஹு என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.

ஹதீஸ் எண் : 209

அஸரையும் ஃபஜ்ரையும் யார் தொழுதாரோ? அவர் சுவனம் புகுந்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அபூபக்கர் பின் அபூமூஸா அல் அஷ் அரி ரளியல்லாஹு அன்ஹு தனது தந்தை அறிவித்ததாக அறிவிக்கிறார்.

சூரிய உதயத்தின்போது அது மறையும் போதும் தொழுவது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 210

அஸருக்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத் தொழுவதை விடவே இல்லை. சூரிய உதயத்தின் போதும் அது மறையும்போதும் உங்களது தொழுகைகளை தொழாதீர்கள். அது மறைந்தவுடனேயே தொழுங்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

முதல் நேரத்திலேயே ளுஹர் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 211

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாங்கள் வந்து கடுமையாக கரித்துவிடும் சூட்டைப்பற்றி முறையிட்டோம். 1எங்களின் முறையீட்டை தொடர்ந்து செய்துவந்தோம்.

அபூஇஸ்ஹாக்கிடம் ளுஹர் தொழுகை பற்றியா? என ஜுஹைர் அவர்கள் கேட்டதாக கூறுகிறார். அதற்கு அவர் ஆம் என்றதும் ‘அதை துரிதப்படுத்தி தொழுவதிலேயா?‘ என ஜுஹைர் கேட்டதற்கு ‘ஆம்‘ என்றனர்.

அறிவிப்பவர் : கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. ளுஹரை கூடுதலாக பிற்படுத்தக் கூறி முறையீடு செய்யப்பட்டது அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம); அவர்கள் மறுத்துவிட்டனர் ஆயினும் நியாயமான அளவு பிற்படுத்துவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்து உள்ளார்கள்.

கடுமையான சூட்டின்போது தொழுகையை குளிரவைத்தல் (பிற்படுத்துதல்) என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 212

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முஅத்தின் ளுஹருக்கு பாங்கு கூறிவிடுவார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிர வைப்பீராக! குளிரவைப்பீராக!! அல்லது எதிர்பார்ப்பீராக!! எனக்கூறுவார்கள். மேலும் நிச்சயமாக சூட்டின் கடுமை நரகத்தின் கொதிப்பு பரவி அதன்மூலம் ஏற்படும் ஜுவாலையாகும் எனக்கூறினார்கள். சூடு கடுமையாகிவிட்டால் தொழுகையை குளிரவையுங்கள் (பிற்படுத்துங்கள்) எனக்கூறுவார்கள். நாங்கள் தரையிலிருந்து கொஞ்சம் உயரமாகச் கிடக்கும் குப்பைமேடுகளுக்கும் (சுவருகளுக்கும்) நிழலை கானும்வரை என அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததற்கு பிறகு சற்றுநேரம் கழித்தால்தான் நிழல் விழும். தரையிலிருந்து உயர்ந்து குவிக்கப்பட்டிருக்கும் குப்பைமேடுகளுக்கும் சிறு குன்றுகளுக்கும் நிழல் விழும் ஆகவே கடும் சூட்டை தவிர்க்க நியாயமான அளவு பிற்படுத்தி தொழுதுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

அஸர் தொழுகையின் முதல் நேரம் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 213

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அஸர் தொழுகையை சூரியன் உயர்ந்த நிலையில் உயிரோடு1 இருக்க தொழுதார்கள். சூரியன் உயரத்திலிருக் க (அந்நேரத்திலிருந்து பொழுது அடைவதற்குள்) அவாலிக்கு2 ஒரு மனிதர் (புறப்பட்டுச்) சென்று அவாலியை அடைந்தும் விடுவார் என அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.3

குறிப்பு :

1 சூரியன் உயிரோடு இருக்க என்பதற்கு மஞ்சள் கலக்காத சுத்தமான வெண்மை நிறத்தில் இருந்தது பொருளாகும்.

2 அவாலீ-மதீனா முனவ்வராவில் மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து அதன் இடப்புறம் இருக்கும் ஜன்னத்துல் பக்கீஉவின் இப்போதுள்ள நுழைவுவாயிலிருந்து தெற்கு பகுதியில் இருந்து தொடங்கி இரண்டு மைல் தொலை தூரம் சிலரின் கருத்துப்படி மூன்று மைல் தொலைதூரம் வேறுசிலர் கருத்துப்படி எட்டு மைல் தூரம் என்கின்றனர்.

3 அஸரை முதல் நேரத்திலேயே, அதாவது ஒரு பொருளின் நிழல் அது அளவிற்கு இருந்தபோது தொழுதுள்ளனர் என்பது தெளிவாகிறது.

ஹதீஸ் எண் : 214

அல் அலாஉ பின் அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு ளுஹர் தொழுகையை முடித்துக் கொண்டு (பஸரா நாட்டிலுள்ள) அனஸ்பின் மாலிக் என்பவரின் வீட்டில் நுழைந்தார். அவரது வீடு பள்ளியை அடுத்து இருந்தது. நாங்கள் அவரது வீட்டினுள் நுழைந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதுவிட்டிர்களா? என (அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு) கேட்டார். இப்போது தான் நாங்கள் ளுஹரைத் தொழுதுவிட்டு திரும்பி வருகிறோம் என அவரிடம் கூறினோம். (எனினும்) அவர் அஸரைத் தொழுங்கள் என்றார். நாங்கள் எழுந்து அஸரை தொழுதுவிட்டோம் அஸர் தொழுகையை நாங்கள் முடித்துக் கொண்ட போது அது (அஸர் தொழுகையை பிற்படுத்துவது) நயவஞ்சகனின் தொழுகையாகும். (அவன்) அமர்ந்து சூரியனைக் கண்காணித்துக் கொண்டிருப்பான் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு மத்தியில் அது இருக்கும்போது எழுந்து அதை நான்கு முறை (கோழி கொத்துவது போன்று) கொத்துவான். அதில் அல்லாஹ்வை குறைவாக அல்லாது நினைவுகூறமாட்டான்1 என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடியவர்களாக (இருந்தனர் அதை) நான் செவியுற்றேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல் அலாஉ பின் அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 நேரக்குறைவின் நிமித்தம் அவசர அவசரமாக குறைவாகவே நினைவு கூறுகிறான்.

அஸர் தொழுகையை பேணித் தொழுவதும் அதன்பிறகு தொழுவதைத் தடுத்துக் கொள்வதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 215

‘அல் முகம்மஸ்‘ என்ற இடத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள் எங்களுக்கு அஸர் தொழுகையை நடத்தினார்கள் (நடத்தி விட்டு)

நிச்சயமாக இத் தொழுகையை உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது. (ஆனால்) அவர்கள் அதை பாழாக்கிவிட்டனர் (எனவே) யார் அதை பேணித் தொழுகிறாரோ அவருக்கு அவரது கூலி இரு முறை உண்டு. அதற்குப்பிறகு நட்சத்திரம் உதயமாகும் வரை எந்தத் தொழுகையும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள் கூறியதாக அபூபஸாரா அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

அஸர் தொழுகை யாருக்கு தப்பிவிட்டதோ? அவரை கடினம் காட்டுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 216

அஸர் (தொழுகை) யாருக்கு தப்பிவிட்டதோ அவர் தனது குடும்பம் தனது பொருள்கள் ஆகியவற்றை அவரிலிருந்து பிடுங்கப்பட்டவரை (இழந்தவரை)ப் போன்றவராவார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

நடுத்தொழுகை பற்றி வந்துள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 217

சூரியன் சிவப்பு நிறத்தை அடையும்வரை அல்லது மஞ்சள் நிறத்தை அடையும் வரை தொழுகையை தொழுவதைவிட்டும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இணைவைக்க கூடியவர்கள் தடுத்துவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

நடுத் தொழுகையை அஸருத் தொழுகையை தொழுவதை விட்டும் அவர்கள் (அகழ் வெட்டுவதில்) நம்மை ஈடுபடச் செய்து விட்டனர். அவர்களது வயிறுகளையும் அவர்களது கப்ருகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

அஸருக்குப் பிறகும், ஸுப்ஹுக்குப் பிறகும் தொழுவது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 218

அஸருக்குப் பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதையும், ஸுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதயமாகும் வரை தொழுவதையும் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மூன்று நேரங்கள் அவற்றில் தொழப்படவோ, கப்ருகளில் அடக்கப்படவோ கூடாது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 219

மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும் அல்லது அந்நேரங்களில் எங்களில் மரணித்தவர்களை அடக்குவதையும் தடுக்ககூடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள் இருந்தார்கள். அந்நேரங்களாவன சூரியன் நன்கு உதயமாகி உயரும்வரையும், மதிய நேரம் வந்து சூரியன் உச்சியிலிருந்து சாயும்வரையும், சூரியன் மறைவதற்காக சாய்ந்து அது (நன்கு) மறையும்வரையும் என நான் செவியுற்றேன் என (அறிவிப்பாளர்) கூறுகிறார்.

அறிவிப்பவர் : உலைய்யு பின் ரபாஹ் ரளியல்லாஹு அன்ஹு

அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 220

அஸருக்குப்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது வந்த இரண்டு ரக்அத்துகள் பற்றி அபூஸலமா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டார்கள் (அதற்கவர்கள்)

‘‘அவ்விரண்டு ரக் அத்துகளையும் அஸருக்கு முன்பு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். அதன்பிறகு நிச்சயமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விரு தொழுகைகளை தொழுவதைவிட்டும் வேறு காரியத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அல்லது அவ்விரு ரக் அத்துகளை தொழுவதை மறந்து விட்டார்கள். ஆகவே தான் அதை அஸருக்குப்பிறகு தொழுதார்கள். அதன்பிறகு அதை நிலைப்படுத்தி விட்டார்கள். அவர்கள் எந்தத் தொழுகையை தொழுதாலும் அதை நிலைப்படுத்திவிடுவார்கள். அதை நிரந்தரமாகச் செய்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கருத்து கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : அஸருக்குப் பிறகு இரண்டு ரக்அத்து தொழுவது பற்றிய விளக்கம்:

அஸருக்கு முன் தொழுக வேண்டிய இரண்டு ரக்அத்தை வேலையின் காரணமாக அஸருக்குப்பிறகு தொழுதனர். அதன் பிறகு அதை நிரந்தரமாகச் செய்தனர் என 220வது ஹதீஸில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பிற்கொப்ப ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துவந்தார்கள் என்பது சரியானதே. ஆனால் அது அவர்களுக்கு உரிய செயலாகும் அது பற்றி செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் கூறாததால் மற்றவர்கள் செய்வதைத் தவிர்க்கலாம் என்பது ஒரு கருத்து.

புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ள ‘‘சூரியன் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை‘‘ என்ற ஹதீஸ் சரியானது. இதன் கருத்து பொதுவானதாகும். ஆதாவது அஸருக்குப்பிறகு தொழுகையே இல்லை என்பதாகும். இப்பொதுவான சட்டத்திலிருந்து ஒரு தனிப்பட்ட சட்டம் தான் அஸருக்குப்பிறகு இரண்டு ரக்அத்து நஃபிலை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது வந்தனர். அதற்குரிய ஆதாரத்தைப் பார்ப்போம்

220வது ஹதீஸில் அவ்வாறு அஸருக்குப் பிறகு தொழுத இரண்டு ரக்அத்தை நேமமாக ஆக்கிக்கொண்டார்கள் என்பது புகாரி, முஸ்லீமின் அறிவிப்பாளர்களால் முஸ்னது இமாம் அஹ்மதுவின் 130,1 இலக்கமிட்டு பதிவாகியுள்ள ஹதீஸ் ‘‘அஸருக்குப்பிறகு தொழாதீர்கள். சூரியன் உயரமாக இருக்கும் நிலையில் தொழுதாலே தவிர‘‘ அதாவது சூரியன் உயரத்திலிருக்கும் பொழுது தொழுகலாம் என்பது தெளிவாகிறது.

இதன் அடிப்படையில் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அஸருக்குப் பிறகு தொழுதுவந்தார்கள் என்பதும் பதிவாகியுள்ளது. ஆகவே அஸருக்குப்பிறகு இரண்டு ரக்அத்து நஃபில் தொழுவது சூரியன் உயர்ந்த நிலையிலிருக்க கூடும் அது விலக்கப்பட்டதல்ல என்பதை கவனத்தில் கொள்க.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்