Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 20

 ஜும்ஆவின் பாடங்கள்

ஜும்மா தினத்தன்று (துஆ அங்கீகரிக்கப்படும்) அந்நேரம் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 401

“நிச்சயமாக ‘ஜும்ஆ‘வில் (ஜும்ஆ நாளில்) ஒரு நேரமுண்டு, அந்நேரத்திற்கு ஒரு முஸ்லிம் தொழுகையிலிருக்க1 அதை அவருக்கு அல்லாஹ் தந்ததை தவிர எந்த நன்மையையும் அவர் அல்லாஹ்விடம் கேட்பதில்லை” என அபுல் காஸிம் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

தனது கையினால் அந்நேரத்தை குறைத்து அர்ப்ப சொர்ப்பமானது எனக்காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. “தொழுகைக்காக காத்திருப்பவர் தொழுகையில் இருக்கிறார்” என்ற நபிமொழிக்கொப்ப ‘அஸர்‘ தொழுத ஒருவர் ‘மக்ரிபை‘ எதிர்பார்த்துத் தொழ உள்ளார். ஆகவே அக்கருத்தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வார்த்தையைக் கூறியிருக்கிறார்கள் என்றும்,

2.‘யுஸல்லீ‘ என்ற அரபி வார்த்தைக்கு துஆ கேட்கிறார் என்ற பொருளும் உண்டு. ஆகவே துஆ கேட்கிறார் - கேட்டவராக என்றும் ‘காயிமுன்‘ நின்றவராக என்பதற்கு அதைத்தொடர்ந்து செய்பவராக என்றும் ஆகிய இருகருத்துக்கள் குர்ஆன் ஹதீஸின் தெளிவில் உங்கள்முன் வைக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் எண் : 402

ஜும்ஆ தினத்தன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் பற்றிய விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமது தந்தை அறிவிக்கும் அறிவிப்பை நீர் கேள்விப்பட்டதுண்டா? என அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், (அபுமூஸா அல் அஷ்அரியாகிய) என்னிடம் கேட்டனர். அதற்கு நான் ‘ஆம்‘ “அந்நேரம் (என்பது) இமாம் மிம்பரில் அமர்ந்(த)து (முதல்) தொழுகை நிறைவுபெறும் வரைக்குமுள்ள இடைப்பட்ட நேரமாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்ததை நான் செவியுற்றேன் என்றேன்.

அறிவிப்பவர் : அபுமூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அபுபுர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நின்று விட்டது. நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை இத்தொடர் சென்றடையவில்லை. ஆகவே ‘ஜும்ஆ‘ நாளன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் ‘‘அந்நாளின் கடைசி நேரமாகும்‘‘ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அவரல்லாத மற்றவர்களின் அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சேர்ப்பிக்கப்பட்ட சரியான ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளன. அவையாவும் அது அந்நாளின் கடைசி நேரம் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஜும்ஆ தினத்தொழுகையிலும் ஃபஜ்ரு தொழுகையிலும் ஓதக்கூடியது ( என்ன? ) என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 403

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஜும்ஆ‘ நாளன்று ‘ஃபஜ்ரு‘ தொழுகையில் “அலீஃப், லாம், மீம், தன்ஜீலுஸ்ஸஜ்தாவை (அத்தியாயத்தை)யும் ஹல் அதா அலல் இன்ஸானி ஹீனும் மினத்தஹர்” என்பதையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். அது(போன்றே) நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஜும்ஆ‘ தொழுகையில் ‘அல்ஜும்ஆ‘ அத்தியாயத்தையும், “அல் முனாஃபிகீன்” அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

‘ஜும்ஆ‘விற்காக குளிப்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 404

ஒரு சமயம் உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஜும்ஆ‘ நாளன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நுழைந்தனர். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு) அவர்களைக் குறுக்கீடு செய்து பாங்கு கொடுக்கப்பட்ட பின் பிந்திவிடுகிறார்களே அந்த ஆடவர்களின் காரியமென்ன? எனக் கேட்டனர். (அதற்கு) உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “விசுவாசிகளின் தலைவர் அவர்களே! நான் பாங்கை கேட்டபிறகு ஒளுச் செய்வதைவிட வேறு எதையும் அதிகமாக செய்யவில்லை. (ஒளுச் செய்து விட்டு) அதன் பிறகு (தொழுகைக்கு) முன்னோக்கி வந்துவிட்டேன்” எனக்கூறினார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஒளுவையா?‘ (எனக் கூறிவிட்டு) ‘உங்களில் ஒருவர் ஜும்ஆவிற்காக வந்தால் குளித்துக் கொள்ளவும்‘ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றை நீங்கள் செவியுற்றதில்லையா? எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

‘ஜும்ஆ நாளன்று நறுமணம் பூசுவதும் பல் துலக்குவதும் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 405

“பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் ‘ஜும்ஆ‘ நாளன்று குளிப்பதும், பல் துலக்குவதும் உண்டு. நறுமணத்தில் அவருக்கு எது சாத்தியமோ அதை அவர் தேய்த்துக் கொள்வர்”. என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்ததாக, அபூஸயிது அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

குறிப்பு : ‘ஜும்ஆ‘ நாளன்று குளிப்பது கடமையா? அல்லது சுன்னத்தா? முஸ்தஹப்பா? என பல ஹதீஸ்களை முன்வைத்து அலசிப்பார்த்து, அது கடமையானதல்ல என்பதை அக்கலை வல்லுனர்களான உலமாக்கள் தெளிவு செய்துள்ளார்கள். அது கடமையல்ல என்பதை மேலே உள்ள 404வது ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அது கடமையாக இருந்திருப்பின் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒளு செய்து வந்ததை உமர் ரளியல்லாஹு அன்ஹு மறுத்திருக்க வேண்டும். ஆனால் மறுக்கவில்லை. “யாரேனும் ஒளு செய்து கொண்டால் அதுவே நல்லதாகும். இன்னும் யாரேனும் குளித்துக் கொண்டால் குளிப்பது மிகச்சிறந்ததாகும்” என்ற ஹதீஸ் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. அதன் தரம் அழகானதாகும். அதுவும் இந்த ஹதீஸையே தெளிவு செய்கிறது.

‘ஜும்ஆ நாளன்று முன்நேரத்தின் சிறப்பு‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 406

‘ஜும்ஆ‘ நாளன்று பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் முதலாமவர்களை, அதையடுத்தவர்களை (என்று) வரிசைக்கிரமமாக அமரர்(மலக்கு)கள் எழுதுகிறார்கள். இமாம்(மிம்பரில்) அமர்ந்து விட்டால் (எழுதிய) ஏடுகளைச் சுருட்டிக் கொள்கின்றனர். (இமாம் கூறும்) உபதேசத்தை செவிமடுக்க வந்துவிடுகின்றனர்.

ஜும்ஆவிற்கு முதல் நேரத்தில் வருபவருக்கு உதாரணம் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தவரைப் போன்றவராவார். அதன்பிறகு (வருபவர்) ஒரு மாட்டை அன்பளிப்புச் செய்தவரைப் போன்றவராவார். அதன்பிறகு (வருபவர்) ஒரு கடா ஆட்டை அன்பளிப்புச் செய்தவரைப் போன்றவராவார். அதன்பிறகு (வருபவர்) ஒரு கோழியை அன்பளிப்புச் செய்தவரைப் போன்றவராவார். அதன்பிறகு (வருபவர்) ஒரு முட்டையை அன்பளிப்புச் செய்தவரைப் போன்றவராவார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

சூரியன் உச்சியிலிருந்து சரிந்தபொழுது ஜும்ஆ தொழுகை என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 407

“சூரியன் உச்சியிலிருந்து சரிந்து விட்டால் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் ‘ஜும்ஆ‘வைத் தொழுது விடுவோம். அதன்பின் (சுவர்களின்)1 நிழல்களைத் தேடியவர்களாகத் திரும்புவோம்.”

அறிவிப்பவர் : ஸலமா பின் அல் அக்வஉ ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. ஜும்ஆவை நிறைவேற்றிவிட்டு நிழல்களில் ஒதுங்கி நடக்க நிழலைத் தேடுவோம். சுவர்களுக்கு இலேசான நிழல் விழும். ஆனால் நடந்து செல்பவர் நிழல் பெருமளவிற்கு இராது. இந்த ஹதீஸின் மொத்தக் கருத்து யாதெனில், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததுமே தாமதிக்காது முதல் நேரத்திலேயே ஜும்ஆவைத் தொழுதிருக்கிறார்கள் என்பதாகும்.

ஹதீஸ் எண் : 408

சிலர் ஸஹ்ல் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ‘மிம்பர்‘ எந்தக்கட்டையில் தயார் செய்யப்பட்டது?. என்பது பற்றி சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டனர். “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அது எந்தக் கட்டையினால் (தயார் செய்யப்பட்டது) ஆனது என்பதையும் யார் அதைச் செய்தது? என்பதையும் நான் அறிவேன். அதன்மீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்த முதல் நாளன்று அவர்களை நான் கண்டேன்” எனவும் கூறினார். ‘அபுல் அப்பாஸ் அவர்களே! அவ்வாறெனில் (அதைப்பற்றி) எங்களுக்குத் தெரிவியுங்கள்‘ என நான் (அறிவிப்பாளர்) கூறினேன். (அதற்கவர்) ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணின்பால் (ஒருவரை) அனுப்பினார். (நிச்சயமாக அந்நாளில் அப்பெண்னுடைய பெயரையும் அபுல் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுக் கூறினார்கள் என்பதாக அறிவிப்பவர் குறிப்பிடுகிறார்)

‘தச்சு வேலை செய்யும் உமது அடிமையைப் பார்ப்பீர்ராக! (பார்த்துக் கூறுவீராக1). எதன் மீது நான் (நின்று அல்லது அமர்ந்து) ஜனங்களோடு பேசுவேனோ அதற்கென்று சில கட்டைகளினால் அவர் எனக்கு (படிகளைக் கொண்ட ஆசனம்) செய்யட்டும்‘ என்றார்கள். (அதற்கிணங்க) இந்த மூன்று படிகள் உள்ளதை (மிம்பரை) அவர் செய்தார். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றிக் கட்டளையிட அது இந்த இடத்தில் வைக்கப்பட்டது. அது கடினமான மரங்கள்1(ளில் இருந்து வெட்டி எடுத்துச் செய்யப்பட்டதாகும்).

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அதன்மீது நின்று தக்பீர் கூற நான் கண்டிருக்கிறேன். ஜனங்களெல்லாம் அவர்களுக்குப்பின் ‘தக்பீர்‘ கூறினர். அவர்கள் மிம்பர் மீது இருக்க அதன்பிறகு மேலே உயர்ந்தார்கள். (அடுத்த படியில் ஏறினார்கள்) பின்னால் இறங்கி மிம்பரின் மீது ஸஜ்தா செய்தார்கள். அதன்பிறகு தொழுகையை முடிக்கும்வரை மீண்டும் (முதலில் நின்ற படிக்கே) திரும்பி விட்டார்கள். (தொழுகையை முடித்துக் கொண்டு) பின்னர் ஜனங்களை முன்னோக்கி ‘ஜனங்களே! நிச்சயமாக நான் இதைச் செய்ததெல்லாம் நீங்கள் என்னைப் பின்பற்றவும், என் தொழுகையை நீங்கள் (சரியாக) தெரிந்து கொள்ளவும் தான்‘ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹாஜிம் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. அம்மரங்கள் அவாலி நகர்பகுதியில் அதிகமாக இருந்தது.

குத்பாவில் கூறப்பட வேண்டியவைப் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 409

‘ஷனூஆ‘ கூட்டத்தைச் சேர்ந்த மனிதர்களில் உள்ள ‘ளிமாத்‘ என்பவர் நிச்சயமாக மக்காவை நோக்கி வந்தார். பைத்தியம், ஜின், ஷைத்தான் (பிடித்தவர்)களுக்கு ஓதிப்பார்ப்பவராக அவர் இருந்தார். மக்காவாசிகளில் அறிவீனர்கள், ‘நிச்சயமாக முஹம்மது பைத்தியக்காரரே!‘ எனக் கூறிவந்தார்களே அதைச் செவியுற்றார். நான் அந்த மனிதரைப்பார்த்தால் “அல்லாஹ் அவருடைய நல் ஆரோக்கியத்தை ஒரு வேளை என் கைகளினால் நல்கலாம்” எனக்கூறி நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து ‘முஹம்மதே! உமக்கு பிடித்திருக்கும் ஜின், பைத்தியம் ஆகியவற்றிக்கு நான் ஓதிப்பார்க்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் எனது இருகரங்களில் அவன் நாடியோருக்கான ஆரோக்கியத்தை நல்கியுள்ளான். உனக்கும் அது வேண்டுமா? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “இன்னல் ஹம்த லில்லாஹி நஹ்மதுஹு வநஸ்தஈனுஹு மன்யஹ்திஹில்லாஹு ஃபலாமுளில்லலஹு வமன்யுள்லில் ஃபலாஹாதியலஹு வஅஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அம்மாபஃது”1 எனக் கூறினார்கள். இதைக்கேட்ட ‘ளிமாத்‘ இந்த சொற்றொடர்களை மீண்டும் எனக்குக் கூறுவீராக என்றார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை திரும்பத் திரும்ப அச்சொற்றொடர்களைத் கூறினர். (அதைக் கேட்ட ளிமாத்) “ஜோசியர்களின் கூற்றையும், சூனியம் செய்பவர்களின் கூற்றையும், கவிஞர்களின் கூற்றையும் நான் செவியுற்றிருக்கிறேன். உமது இக்கூற்றைப் போன்று நான் செவியுற்றதே இல்லை” எனக்கூறினார். (பின்னர்) அலைகளை கிழித்துக் கொண்டு ஆழ்கடலை அவ்வார்த்தைகள் அடைந்து விட்டன. ஆகவே உங்களது கையைத் தாருங்கள். இஸ்லாத்தை நான் உடன்படிக்கை செய்து (ஏற்றுக்) கொள்கிறேன் எனக்கூறினார். அவரோடு (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டணர். (அப்போது) உமது கூட்டத்தவர்களின் மீது (இஸ்லாத்தை எடுத்துக்காட்ட வேண்டுமே) என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மூவர் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார்கள். அவரு(ளிமாத்து)டைய கூட்டத்தவருக்கு மத்தியில் அவர்கள் சென்றனர். அக்குழுவிற்குரியவர் தன் சேனையரிடம் ‘இக்கூட்டத்தவர்களிடமிருந்து எதையாவது பெற்றீர்களா? எனக்கேட்டார். (அதற்கு) கூட்டத்திலிருந்த ஒருவர் ‘சுத்தம் செய்ய உபயோகிக்கும் ஒரு பாத்திரத்தை நான் எடுத்துள்ளேன்‘ என்றார். அதற்கவர் ‘அதை திருப்பிக் கொடுத்துவிடுவீராக! காரணம், நிச்சயமாக இவர்கள் ‘ளிமாத்‘தின் கூட்டத்தவராவார்‘ எனக் கூறினார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

குறிப்பு : 1 அச்சொற்றொடரின் பொருள்:

“நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகும்! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை (யாராலும்) வழி கெடுக்க முடியாது. அவன் யாரை வழி கெடுத்து விட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழி காட்ட முடியாது. வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய (உரிய) அடியாரும் அவனது தூதருமாக இருக்கிறார்கள்”

குத்பாவில் சப்தத்தை உயர்த்துவதும், அதில் (என்ன) சொல்வது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 410

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘குத்பா‘ பிரசங்கம் செய்வார்களாயின், அவர்களது இருகண்களும் சிவந்துவிடும் சப்தம் உயர்ந்துவிடும். அவர்களது கோபம் மிகுந்துவிடும். முடிவாக “காலைப்பொழுதை அடைந்துவிட்டீர்கள்! மாலைப்பொழுதை அடைந்துவிட்டீர்கள்! எதிரிகளை ஜாக்கிரதையாக கண்காணியுங்கள்! என படையினரை படைத்தலைவர் எச்சரிக்கை செய்பவரைப் போன்று ஆகிவிடுவார்கள்”. இன்னும் நானும் மறுமைநாளும் இவ்விரண்டைப்போன்று தங்களது நடுவிரல் ஆட்காட்டிவிரல் இரண்டுக்குமிடையில் சேர்த்தனர் எனக்கூறினர். மேலும் அதன்பிறகு, செய்திகளில் மிகச்சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் மிகச்சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியாகும். காரியங்களில் கெட்டது அவற்றில் புதியவைகளாகும். ஓவ்வொரு (அனாச்சாரமும்) பித்அத்தும் வழிகேடாகும் எனவும், அதன்பிறகு ஒவ்வொரு முஃமினானவருக்கும் (விசுவாசிக்கும்) அவரை விட நான் உரியவனாக இருக்கிறேன். யார் பொருளாதாரத்தை விட்டுச் சென்றாரோ அது அவரது குடும்பத்தினருக்குரியதாகும். யார் கடனை அல்லது (வசதி எதுவுமில்லாத) குடும்பத்தை விட்டுச் சென்றாரோ அது என்பாலும், என்மீது என் பொறுப்பிலுமாகும் எனவும் கூறுக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

குத்பா பிரசங்கத்தை சுருக்கிச் செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 411

‘அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குத்பா பிரசங்கத்தை மிகச்சுருக்கமாகவும், மனங்களில் பதியக்கூடியதாகவும்1 செய்து முடித்தனர்‘. அவர்கள் (குத்பா பிரசங்கத்தை முடித்து) கீழே இறங்கியதும், அபுல்யக்ழான் அவர்களே! நிச்சயமாக நீர் மனங்களில் பதிகின்றவாறும் சுருக்கமாகவும் பிரசங்கம் செய்து விட்டீர். (ஆயினும்) கொஞ்சம் நீட்டியிருந்தால் (நன்றாக இருந்திருக்குமே!) எனக்கூறினார். அதற்கவர் “ஒரு மனிதர் தொழுகையை நீட்டமாகத் தொழவைப்பதும், குத்பா பிரசங்கத்தை சுருக்கிக் செய்வதும் அவர் மார்க்க அறிவு படைத்தவர் (தான்) என்பதற்கு அடையாளமாகும். ஆகவே தொழுகையை நீட்டுங்கள், குத்பாவை சுருக்கமாகக் கூறுங்கள், நிச்சயமாக பிரசங்கத்தில் ஒரு சூனியமிருக்கிறது”2 என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நிச்சயமாக நான் கேட்டேன் எனக்கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபூவாயில் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இதற்கு இரண்டு கருத்துகள் கூறப்படுகின்றது

1. இதை கேட்கக்கூடியவர்களின் மனதை ஈர்த்து அதில் நின்று நிலைத்து செயல்படவைத்து விடுகிறது என்பதே இதன் கருத்தாகும் இதுவே சரியானதாகும். இவ்வார்த்தையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பாராட்டிக் கூறியிருக்கிறார்கள்.

2. சூனியத்தின் மூலமாக தவறான காரியங்களைச் செய்து பாவங்களைச் சம்பாதிப்பது போன்று தவறான வழிகளுக்கு ஈர்க்க வார்த்தைகளை அடுக்கி மனதில் படுவது போல் செய்து மனதைத் திருப்புவது இக்கருத்து சரியானதல்ல.

குத்பா பிரசங்கத்தில் நீக்கக்கூடாதவை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 412

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் பிரசங்கம் செய்தார். அல்லாஹ்விற்கும் இன்னும் அவனது தூதருக்கும் யார் வழிபட்டாரோ அவர் நிச்சயமாக நேர்வழியடைந்து விட்டார். “அவ்விருவருக்கும்1 யார் மாறு செய்தாரோ? அவர் வழி தவறிவிட்டார்” எனக்கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “பிரசங்கம் செய்பவர்களில் கெட்டவர் நீரேயாகும் (எனக்கூறிவிட்டு) அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் என்று கூறுவீராக” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதிய்யா பின் ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இவ்வாறு இருவரையும் இணைக்காமல் தனித்தனியே கூறவேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

மிம்பரின் மீது குத்பாவில் குர்ஆன் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 413

நம் அடுப்பும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் அடுப்பும்1 (ஏறக்குறைய) இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் சொச்சம் ஒன்றாகவே இருந்தது “காஃப் வல் குர்ஆனில் மஜீது” (எனும் அத்தியாத்தை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நாவிலிருந்தே தவிர நான் எடுத்து(அறிந்து)க் கொள்ளவில்லை. ஜனங்களுக்கு பிரசங்கம் செய்கின்ற போது மிம்பரில் ஒவ்வொரு ஜும்ஆவிலும் அதை ஓதக்கூடியவர்களாக இருந்தனர் என்று உம்மு ஹிஷாம் பின்த் ஹாரிசா பின் நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வீடும் என் வீடும் மிக அருகில் இருந்தது. ஆகவே அங்கு நடப்பவற்றையும் அங்குள்ள நிலைகளையும் தெரிந்து கொள்வது சாத்தியம் என்பதை இதன் மூலம் குறிப்பிடுகிறார் என்பதே இதன் கருத்தாகும்.

குத்பாவில் விரலால் சைக்கிணை செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 414

உமாரா பின் ருஜபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், பிஷ்ரு பின் மர்வானை, மிம்பரில் அவரது இரு கைகளையும் உயர்த்தியவராக1 இருக்கக் கண்டார். (அப்படிக் கண்ட அவர்) இந்த இருகைகளையும் அல்லாஹ் கெட்டதாக்கி வைப்பானாக! (எனக்கூறிவிட்டு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை, அவர்களது கையால் இவ்வாறு செய்வதைவிட அதிகப்படுத்தியவர்களாக நான் காணவில்லை (எனக்கூறி) தனது ஆள்காட்டி சைக்கிணை செய்து காட்டினார்.

அறிவிப்பவர் : ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 மிம்பரில் இமாம் குத்பா ஓதும் போது அவரது இருகைகளை உயர்த்துவதை விட்டுவிடுவதே சுன்னத்தாகும் அவ்வாறு துஆ செய்யும் பொழுது கலிமா விராலால் சைக்கிணை செய்வதே சுன்னத்தாகும் என்பது தெளிவு

2 நபி ல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மழைத்தொழுகையின் போது தங்களது இருகைகiயும் அவர்களது அக்குளின் வெள்ளை தெரிகின்ற அளவிற்கு உயர்த்தினார்கள். ஆகவே, குத்பாவில் உயர்த்தலாம் என சிலர் கூறுகின்றனர். மழைத்தொழுகையில் செய்ததை மற்ற சமயங்களில் செய்யவில்லையென்பதால் பிந்தியதை கைவிட்டுவிட்டு முந்தியதை வைத்து செயல்பட்டு நன்மை பெற அல்லாஹ் அருள்செய்வானாக ஆமீன்.

குத்பாவில் அறிவைக்கற்றுத் தருவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 415

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்க அவர்கள் பால் சென்றடைந்தேன். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அறிமுகமில்லாத, தன்மார்க்கம் என்ன? என்று தெரியாத ஒரமனிதர் வந்து, அவரது மார்க்கத்தைப் பற்றிக் கேட்கிறார் என்று கூறினேன். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது குத்பாவை விட்டு விட்டு என்பால் வந்தடைந்தனர். (அவர்கள் அமருவதற்க்காக) ஒரு நாற்காலி கொண்டுவரப்பட்டது அதன் கால்கள் இருப்பினால் இருந்தது என நான் எண்ணுகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் மீது அமர்ந்து, அவர்களுக்கு எதை அல்லாஹ் கற்றுக் கொடுத்தானோ அவற்றிலிருந்து எனக்குக் கற்றுதந்து விட்டு அதன்பிறகு (திரும்பவும் விட்ட) அவர்களது பிரசங்கத்தைக் கூற வந்து அதன் இறுதியை நிறைவு செய்தனர் என அபூ ரிஃபாஆ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபூ ரிஃபாஆ ரளியல்லாஹு அன்ஹு

ஜும்ஆவில் இரு குத்பாக்களுக்கிடையில் அமருவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 416

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நின்றவாறு ‘குத்பா‘ பிரசங்கம் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். (முதல் ‘குத்பா‘வை முடித்துக் கொண்ட) பிறகு அமருவர். அதன்பிறகு எழுந்து நின்றவர்களாகவே ‘குத்பா‘ ஓதுவார்கள். அவர்கள் அமர்ந்தவாறு ‘குத்பா‘ ஓதினார்கள் என யாரேனும் எனக்குத் தெரிவித்தால் அவர் பொய் கூறிவிட்டார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரண்டாயிரம் தொழுகைகளை விட மிக அதிகமாகவே நான் தொழுதுள்ளேன் என கூறினார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையையும் குத்பாவையும் (நீட்டாது குறுக்காது) நிதானமாக செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 417

ஜாபிர் பின் ஸமுராவாகிய நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகை நீட்டமில்லாமலும், ரொம்பச் சுருக்கமில்லாமலும் இருந்தது. (அது போலவே) அவர்களது குத்பாவும் நீட்டமில்லாமலும், ரொம்பச் சுருக்கமில்லாமலும் இருந்தது என ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

ஜும்ஆ நாளன்று இமாம் குத்பா ஓதும் போது (யாராவது) நுழைந்தால் (இரண்டு ரக்அத்து) தொழுவார் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 418

ஜும்ஆ தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மீம்பரின் மீது அமர்ந்திருக்க, சுலைக் அல்கத்தஃபானீ (என்பவர்) வந்து (இரண்டு ரக்அத்து) தொழுமுன் அமர்ந்து விட்டார். (அப்பொழுது அவரைப்பார்த்து) இரண்டு ரக்அத்து தொழுது விட்டீரா? என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (அதற்கவர்) இல்லை! என்றார். “எழுந்து அவ்விரு ரக்அத்துகளையும் தொழுவீராக” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

குத்பாவை கேட்க வேண்டி வாய்ப் பொத்தியிருப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 419

“ஜும்ஆ தினத்தன்று இமாம் ‘குத்பா‘ ஓதிக் கொண்டிருக்கும் போது உம்முடன் இருப்பவரை வாய்ப்பொத்தி இரு(ம்)! என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை) வீணடித்து விட்டீர்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஜும்ஆ நாளன்று யார் குத்பாவை செவியுற்று வாய்பொத்தி இருந்தாரோ அவரது சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 420

யார் குளித்துவிட்டு, அதன் பிறகு ஜும்ஆவிற்கு வந்து, (அல்லாஹ்வினால்) அவருக்கு ஏற்படுத்தப்பட்டதை தொழுதுவிட்டு, அவர் குத்பா பிரசங்கத்தை முடிக்கும்வரை வாய் பொத்தி இருந்து (விட்டு) அவரோடு தொழுதும் விட்டால், அவருக்கு அடுத்த ஜும்ஆவிற்கும் இடையில் (அதற்கு) மேலும் அதிகமாக மூன்று நாட்களுக்கும் (அவரில் ஏற்படும் சிறிய பாவங்கள்) அவருக்காக மன்னிக்கப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்