Social Icons

Thursday, 22 November 2012

பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்

திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.


முஹம்மது ஸிமாக் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள். கூபா நகரில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் குடியிருந்தார். அவருடைய மகன் ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்திருப்பார் இரவெல்லாம் தொழுகையிலும் இறைக்காதல் பாடல்கள் பாடுவதிலும் கழிப்பார். இதனால் அவர் இளைத்து எலும்பும், தோலுமாகக் காட்சியளித்தார். அவருடைய தந்தை என்னிடம் வந்து தன் மகனுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
நான் ஒரு தடவை என் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்த போது அவருடைய மகன் அவ்வழியே சென்றார். நான் அவரை அழைத்தேன். அவர் என்னருகில் வந்து ஸலாம் சொல்லி உட்கார்ந்தார். நான் அவர் சம்மந்தமாக பேச ஆரம்பித்தவுடனேயே, எனது சிறிய தந்தையவர்களே! நான் என்னுடைய உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுமெனத் தாங்கள் ஆலோசனை சொல்லப் போகிறீர்கள். இல்லையா? சிறிய தந்தையாரே! இந்த மஹல்லாவை சேர்ந்த சில வாலிபர்களாகிய நாங்கள் இபாதத் செய்வதில் அதிகம் முயற்சிப்பவர்கள் யார் என்பதைப் பார்க்கலாம் என்று எங்களுக்கிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தினோம். என்னுடைய நண்பர்களாகிய அவர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சித்து வணக்கங்கள் புரிந்தனர். இறுதியில் அவர்கள் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் செல்லும் போது மிக்க மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் சென்றார்கள்.

 
இப்பொழுது அவர்களில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை என்னுடைய அமல்கள் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படும் பொழுது அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி அவர்கள் என்ன கூறுவார்கள்.
இப்படிப் போகிறது கதை, இது தப்லீகின் தஃலீம் தொகுப்பில் தொழுகையின் சிறப்பு எனும் பாடத்தில் பக்கம் 43, 44ல் இடம் பெற்றுள்ளது. முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாம் இந்த நம்பிக்கையை மறுக்கின்றது. ஒரு முஸ்லிம் பகலெல்லாம் நோன்பு வைத்துக்கொண்டும் இரவெல்லாம் நின்று வணங்கிக் கொண்டும் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.

 
உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஊருக்கு ஆற்றவேண்டிய பணிகள், அண்டை அயலாருக்குச் செய்யும் கடமைகள், குடும்பத்திற்கு ஆற்றும் கடமைகள் என்று ஏராளமான கடமைகள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இறை வணக்கத்தை நிறைவேற்றும் அதே நேரத்தில் இந்தக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இரண்டில் எதனையும் எதன் காரணமாகவும் விட்டுவிட முடியாது. இது தான் இஸ்லாத்தின் போதனை. வணக்கம் என்ற பெயரில் கூட அளவு கடந்து செல்வதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். இது பற்றிய சான்றுகளைக் காண்போம்.
நபித் தோழர்களில் ஒருவர் திருமணமே செய்யமாட்டேன் என முடிவு செய்தார். மற்றொருவர் நான் தூங்காமல் தொழுது கொண்டே இருப்பேன் என்றார் வேறொருவர் விடாமல் நோன்பு வைப்பேன் என்றார் இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது இவ்வாறெல்லாம் கூறியவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் (சில போது) நோன்பு வைக்கிறேன் (சில போது) விட்டு விடுகிறேன். தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன். பெண்களைத் திருமணமும் செய்து உள்ளேன். யார் எனது (இந்த) வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹமதில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எத்தகையவர்கள் என்னைச் சேர்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அடையாளம் காட்டினார்களோ அவர்கள் இங்கே மகான்களாக அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
நான் காலமெல்லாம் நோன்பு வைப்பவனாகவும், இரவெல்லாம் குர்ஆன் ஓதுபவனாகவும் இருந்தேன். என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு கூறப்பட்டதோ அல்லது அவர்களாகவே அறிந்தார்களோ நான் அவர்களின் அழைப்புக்கேற்ப வந்தேன்.
நீ காலமெல்லாம் நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் குர்ஆன் ஓதுவதாகவும் எனக்குக் கூறப்படுகிறதே எனக் கேட்டார்கள். நான் ஆம்: இதன் மூலம் நல்லதையே நாடுகிறேன் என்றேன். அதற்கவர்கள் மாதம் தோறும் மூன்று நோன்புகள் நோற்பது உனக்குப் போதுமாகும் என்றார்கள். அதற்கு நான் இதை விட சிறப்பாக (கூடுதலாக) செய்ய நான் சக்தி பெற்றவன்என்றேன். அதற்கவர்கள் உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. உன் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன.என்று கூறினார்கள் என அப்துல்லாஹ இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயியிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பில் இதைவிட சிறந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

 
உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு வணக்கங்களில் வரம்பு மீறலாகாது. என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. வணக்கத்தில் ஈடுபடுகிறேன் நோன்பு நோற்கிறேன் என்ற பெயரில் உடம்பை வருத்திக் கொள்வது இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த கருத்துக்கொண்ட கதைகளைத் தான் ஸகரிய்யா சாஹிப் தனது நூல் நெடுகிலும் கூறுகிறார்.
ஸகரிய்யா சாஹிபாகட்டும் இன்றைக்கு தப்லீகின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களாகட்டும் இந்தக் கதையின் வேதனைகள் அவர்களே கூட கடைபிடிக்காத கடைப்பிடிக்க முடியாததாகும். இந்தக் கதை கூறும் போதனைப்படி எவரும் எலும்பும் தோலுமாகக் காட்சி தந்தில்லை. அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவர்களாகவே காண்கிறோம். நடைமுறைச் சாத்தியமற்ற இஸ்லாம் விரும்பாத போதனைகளை உள்ளடக்கியது தான் தஃலீம் தொகுப்பு நூல்.
கதையின் நாயகரான முகவரியில்லாத அந்த வாலிபர் தன்னுடைய அமல்கள் தினமும் இரண்டுமுறை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.

 
முன்னரே இறந்து விட்ட இவரது நண்பர்களுக்கு இவரது அமல்கள் இரண்டு தடவை எடுத்துக் காட்டப்படும் என்பதற்கு என்ன ஆதாரம்? நல்லடியார்கள் கியாம நாள் வரையில் மண்ணறையில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. அதற்கு மாற்றமாக மற்றவர்களின் அமல்கள் எடுத்துக் காட்டப்படும் என்று எப்படிக் கூறமுடியும்?
ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.
முரீது வழங்கிய ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகள் தேவைப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களுக்கு இது தேவையில்லாததாகும். இப்படிக் கூறிய வாலிபர் அவர் பார்வையில் மகானாக இருக்கலாம். அல்லாஹ்வின் தூதருடைய பார்வையில் அவர் ஒரு வழிகேடர்.

 
அந்த வாலிபர் இப்படி நடந்து கொண்டது ஒரு புறம் தவறு என்றால், அவரது எண்ணம் அதை விட மோசமானது தன்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவே இப்படிக் கூடுதல் அமல் செய்வதாகக் கூறுகிறார். இந்த எண்ணமே அவரது அமல்கள் நல்லதாக இருந்தால் அதனை அழித்துவிடப் போதுமானதாகும். மூடர்களையும், வழி கேடர்களையும் மகான்களாக சித்தரித்து இஸ்லாத்திற்கு தவறன வடிவம் தரும் கதைகள் இவை.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்