ஹிஜ்ரீ
பத்தாம் ஆண்டில் ஒருநாள், யமன் நாட்டு அரண்மனைக்கு அரசியைச் சந்திக்க
அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சென்றார். அப்பொழுது அந்நாட்டை ஆண்டு
கொண்டிருந்த அரசனால் அங்கு மாபெரும் தொல்லையும் குழப்பமும்
ஏற்பட்டிருந்த சூழ்நிலை. அரசியைச் சந்தித்த அண்ணன்காரர், "இந்தக்
கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும்
என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல
வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்தார்.
"சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் அரசியார்.
"அவனது அதிகாரத்தைப் பிடுங்க வேண்டும்"
"ம்ம்ம்... அதெல்லாம் பத்தாது. வேண்டுமானால் நான் அவனைக் கொலை செய்ய உதவுகிறேனே" என்றார் அரசியார் நிதானமாக.
ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன அண்ணன்காரருக்கு. கொலையும் செய்வாளா பத்தினி?
மகிழ்ச்சியில் பெரும் குதூகலத்துடன், "இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதை நேரடியாகச் சொல்லத் தயக்கமாயிருந்தது"
அதைத்
தொடர்ந்து அரசனைக் கொல்லும் திட்டம் ஒன்று அங்கு வெகு நுணுக்கமாய் உருவாக
ஆரம்பித்தது. அவசரமில்லை, அவர்கள் திட்டமிடட்டும். அதற்குள் நாம், நான்கு
வருடங்களுக்குமுன் நடைபெற்ற சில நிகழ்வுகளை, ஒரு சுற்று சுற்றிப்
பார்த்து விட்டு வந்து விடுவோம்.
* * * * *
ஹிஜ்ரீ
6ஆம் ஆண்டின் இறுதியில், ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பி வந்ததும்,
அரேபியா தாண்டி உள்ள அரசர்களுக்கெல்லாம் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்துக்
கடிதம் அனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அரசர்கள்
என்றால் சிற்றரசர்கள் குறுநில மன்னர்கள் இல்லை. அன்றைய வல்லரசுகளான ரோம
அரசாங்கம், பாரசீக அரசாங்கம், மற்றும் எகிப்து, பஹ்ரைன், யமாமா
போன்றவற்றை ஆண்டுகொண்டிருந்த பெரிய பெரிய அரசர்களுக்கு. அவற்றுள் இங்கு
நமக்கு முக்கியம் பாரசீகம் மட்டும். அதைத் தெரிந்து கொள்வோம்.
ரோமர்களுக்கும்
பாரசீகத்திற்கும்தான் அப்பொழுது கடுமையான போர். முன்னாள் சோவியத்தும்,
இந்நாள் அமெரிக்காவும்போல அன்றைய வல்லரசு தாதாக்கள் அவர்கள்தாம். ஓயாது
போர் புரிந்து ஒருவர் மாற்றி ஒருவர் கொன்று, வென்று கொண்டிருந்தார்கள்.
சுற்றி வளைத்து நாடு நாடாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்த அந்த இரண்டு
பேரரசுகளுக்கும் அரேபியாவும், பாலைவனமும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த
அரபியர்களும் இவர்கள் இருவருக்கும் யாதொரு கவர்ச்சியையும் உண்டு
பண்ணவில்லை. பேரீச்சம் பழம், ஒட்டகப்பாலைத் தவிர அவர்களைக் கவரும் வகையில்
அங்கு என்ன இருந்தது? அதனால் அரேபியாவைப் படையெடுத்துக் கைப்பற்ற
வேண்டும் என்ற திட்டமெல்லாம் அவர்கள் அடிக்குறிப்பில்கூட இல்லை.
இந்நிலையில், இஸ்லாம் அரேபியாவில் அசைக்க முடியாத சக்தியாகப்
பரிணமித்து, வளர்ந்து, அந்த வல்லரசுகளுக்கே சவாலாகப் போவதன் முன்னோடியாய்
முதல் கடிதத்தை அனுப்பி வைத்தது.
அப்பொழுது
பாரசீகத்தை இரண்டாம் குஸ்ரூ (கிஸ்ரா) ஆண்டு கொண்டிருந்தான். பாரசீகத்தின்
சக்திவாய்ந்த மன்னர்களில் அவனும் ஒருவன் என்கிறார்கள்
வரலாற்றாசிரியர்கள். அவனது ஆட்சியில், வளமையின் உச்சியில் இருந்தது
பாரசீகம். அளவுக்கு மிஞ்சிய அதிகாரமும் பலமும் வாய்ந்தால் என்னாகும்?
தனக்குத் தானே குஸ்ரூ பதவி உயர்வு கொடுத்துக் கொண்டான். "நான் கடவுள்!"
அடங்கி ஒடுங்கிக் கிடந்த மக்களும் கும்பிடு போட ஆரம்பித்து விட்டனர்.
இல்லையென்றால் கொன்றுவிடுவானே!
இப்படி இருக்கையில்,
தன்
தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபாவை அழைத்து அவரிடம் ஒரு கடிதம் கொடுத்து
குஸ்ரூவிடம் அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். இஸ்லாத்தின் ஏகத்துவத்தை
விளக்கி, தான் ஒரு நபி என்பதை விவரித்து, இஸ்லாத்திற்கு அழைப்பு
விடுக்கும் சுருக்கமான தெளிவான கடிதம்.
கடிதத்தைப்
படித்ததும் கோபம் தலைக்கேறியது குஸ்ரூவிற்கு. "கடவுளுக்கே அழைப்பா? என்
அடிமை எனக்கு இப்படியொரு கடிதம் எழுதுவதா?" என்று உறுமி கடிதத்தைக்
கிழித்து காற்றில் பறக்கவிட்டவன், தனது சார்பாய் யமன் நாட்டை ஆள
நியமித்திருந்த குட்டி மன்னன் பாதானுக்கு (باذان) உடனே ஒரு தகவல்
அனுப்பினான். என்னவென்று? இரண்டு தூதுவர்களை மதீனாவிற்கு அனுப்பி முஹம்மது
நபியை உடனே கைது செய்து பாரசீகத்திற்கு அழைத்து வரும்படி. அப்பொழுது
யமனில் அல்-அப்னா (மகன்கள்) என்ற பெருங்குழு மக்கள் இருந்தனர்.
அவர்களிடம்தான் அரசியல் அதிகாரம் இருந்தது. இந்த அல்-அப்னா என்பவர்கள்
யமனுக்குக் குடிபெயர்ந்த பாரசீக ஆண்களுக்கும், அவர்கள் திருமணம்
முடித்துக் கொண்ட அரேபிய பெண்களுக்கும் பிறந்த மக்கள். அந்த அல்-அப்னா
மக்களின் தலைவர்தான் பாதான்.
தகவல்
வந்து சேர்ந்ததும் நல்ல வாகான இருவரைத் தேர்வு செய்தார் பாதான். ஒருவன்
அவரின் உதவியாளர் அபாதாவீ (Abathaweih), மற்றொருவன் பாரசீக அதிகாரி
கர்காரா. கைது ஆணை ஒன்று தயாரிக்கப்பட்டது. "தாங்கள் எங்கள்
அதிகாரிகளிடம் எதிர்ப்பு ஏதும் காட்டாமல் சரணடைந்து அவர்களுடன் குஸ்ரூவைத்
தரிசிக்கச் செல்லுங்கள்" என்பதான வாசகம் எழுதப்பட்டு அவர்களிடம் கொடுத்த
பாதானுக்கு என்ன தோன்றியதோ, கூடுதலாக ஒன்றைச் சொல்லி வைத்தார், "நபி என
அழைக்கப்படும் அவரைப் பற்றிய உண்மையை அறிந்து வந்து என்னிடம் சொல்லுங்கள்".
அபாதாவீயும்
கர்காராவும் யமனிலிருந்து கிளம்பி, மக்காவைத் தொடும் சுமார் 100
கி.மீ. தொலைவிலுள்ள தாயிஃப் வந்து சேர்ந்தார்கள். தாயிஃப் நகரவாசிகள்
அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை. தவிர மக்கத்துக் குரைஷியருக்கு
நிகராய் அவர்களும் நபிகளின்மேல் குரோதமும் வெறுப்பும் பகையுமாகத்தான்
இருந்து கொண்டிருந்தார்கள். எனவே ரொம்ப சந்தோஷமாகிவிட்டது அவர்களுக்கு.
"இந்தா ... இப்படிப் போனால் மதீனா வந்துவிடும்" என்று வழியெல்லாம்
காண்பித்தார்கள். 'நமக்குத் தொந்தரவு அளித்து எல்லோரையும் வென்று
கொண்டிருப்பதுபோல், பாரசீக ராச்சியத்தை நினைத்து விட்டாரா அந்த முஹம்மது?
குஸ்ரூ என்ன கிள்ளுக் கீரையா? இப்பொழுது வரப்போகிறது பார் அவருக்கு சரியான
பின்னடைவும் தோல்வியும்' என்ற ஏக ஆனந்தம் அவர்களுக்கும் குரைஷிகளுக்கும்.
மதீனா
வந்தடைந்தது அந்த இருவர் குழு. ஓலைக் கூரை பள்ளியும் மண் குடிலும் மகா
எளிய உடையுமாய் நபிகளைக் கண்டு, அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம்,
குழப்பம்! சிற்றரசர்களிடம்கூட பட்டும் படோடபமும் பிரம்மாண்டமும்
பார்த்துப் பழகிய கண்கள் அவை. என்ன ராச்சியம், என்ன பெரிய அரசர் என்று
நினைத்துக் கொண்டு, இவர்களெல்லாம் அப்பேற்பட்ட குஸ்ரூவுக்குக்
கடிதமெல்லாம் எழுதுகிறார்கள்? சரி வந்த வேலையைப் பார்ப்போம் என்று
அபாதாவீதான் பேசினான். "உம்மை அழைத்து வரும்படி, மன்னருக்கெல்லாம்
மன்னர் மாமன்னர் குஸ்ரூ, அவர்தம் கட்டுப்பாட்டில் உள்ள எங்கள் யமன்
நாட்டு மன்னர் பாதானுக்கு உத்தரவிட்டுள்ளார், வந்துவிடுங்கள். நீங்கள்
அப்படி உடனே இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து வந்துவிட்டால், பாதான் பெரிய
மனது வைத்து உமக்காக சிபாரிசு செய்து மாமன்னர் குஸ்ரூவுக்குக் கடிதம்
எழுதுவார். அது உம்மைப் பெரிய தொல்லையிலிருந்து காப்பாற்ற உதவும். உமக்கே
தெரியும் குஸ்ரோ எவ்வளவு சக்தி வாய்ந்தவரென்று. அவரது கட்டளையை
மறுத்தீர்களானால், உம்மை, உம்முடைய மக்களை உமது நாட்டையெல்லாம் அவர்
நிச்சயம் அழித்து விடுவார்"
மிகவும்
கடுமையாய், அதிகாரமாய் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதில் கவனம்
செலுத்தவில்லை நபிகளார். கூர்ந்து அவர்களது தோற்றத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள். மழுங்க மழித்த தாடையும் நல்ல அடர்த்தியான மீசையுமாக
அவர்களின் அந்தத் தோற்றம் முஹம்மது நபிக்கு அறவே பிடிக்கவில்லை. "யார்
உங்களுக்கு உங்களது தாடியை மழிக்க உத்தரவிட்டது?" என்று அவர்களது கைதுச்
செய்தியை முற்றிலும் புறக்கணித்த கேள்வியொன்று வெளிப்பட்டது
அவர்களிடமிருந்து.
தலைக்கே
ஆபத்து தெரிவித்து வந்திருக்கிறோம், இவர் என்னடாவென்றால் தாடியைப்
பற்றிக் கேட்கிறாரே. புரியவில்லை அவர்களுக்கு. "எங்கள் இறைவனிடமிருந்து"
என்று பதில் சொல்லி வைத்தார்கள். குஸ்ரூதானே அவர்களின் கடவுள்.
அமைதியாய்
பதில் கூறினார்கள் முஹம்மது நபி, "ஆனால் என் இறைவன் எங்களுக்குத் தாடியை
வளர்க்கவும் மீசையைக் கத்தரிக்கவும் உத்தரவிட்டுள்ளான்" என்று
கூறியவர்கள், "நாளை வரை காத்திருங்கள்; மீண்டும் பேசுவோம்" என்று
அறிவித்துவிட்டுச் சென்று விட்டார்கள்.
இதனிடையே
பாரசீகத்தில் முக்கிய அரசியல் நிகழ்வொன்று நடைபெற்றது. குஸ்ரூவிற்கு
ஷிர்வே என்றொரு மகன் இருந்தான். அவனுக்குத் தன் தந்தை தன்னிச்சையாகவும்
கொடுங்கோலனாகவும் ஆட்சி செய்து வருவது மகா எரிச்சலாயிருந்தது.
பாரசீகர்களின் மேதகைமைக்கு குஸ்ரோவின் செயல்பாடுகள் மிகவும் பங்கம்
விளைவிப்பதாய்க் கவலைப்பட்டான். 'ஏதாவது செய்து இந்த அப்பனைப் போட்டுத்
தள்ளினால்தான் சரி' என்று தோன்றியது அவனுக்கு. நேரம பார்த்துக்
கொண்டிருந்தவன் அன்றைய நாளில் தன் தந்தையை இனிதே கொலை செய்து முடிக்க,
கடவுள் குஸ்ரூ செத்துப் போனான்.
இந்தச்
செய்தியை இறைவன் தன் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் மூலமாக நபியவர்களுக்கு
அன்றிரவு அறிவித்து விட்டான். அதுவும் எப்படி? மிகத் துல்லியமாய், அந்தக்
கொலை நிகழ்வுற்ற நாள், இரவின் எந்தப் பொழுது, என்ன தேதி ஆகிய
விபரங்களுடன். மறுநாள் அந்த இரு தூது அதிகாரிகளையும் அழைத்தார் முஹம்மது
நபி. "உங்கள் மன்னாதி மன்னர் செத்துப் போய்விட்டார் தெரியுமா?" என்று
கொலை விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிவித்ததும் அதிர்ந்து போனார்கள்
அவ்விருவரும்.
"நீர்
என்ன சொல்கிறீர் எனப் புரிந்துதான் சொல்கிறீரா? எங்கள் கடவுளுக்குக்
கடிதம் அனுப்பினீர்கள் என்ற அற்பமான ஒரு விஷயத்திற்கே உம்மைக் கைது
செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் என்னடாவென்றால்
எங்கள் கடவுள் இறந்து விட்டார் என்று அபாண்டம் உரைக்கிறீர்? இது தப்பு.
மகாக் குற்றம். அப்படியே நாங்கள் குறித்துக் கொண்டு எங்கள் மன்னன்
பாதானிடம் தெரிவிக்கலாமா?"
"ஆம்,
சொல்லுங்கள். மேலும், என்னுடைய மார்க்கமும் இராச்சியமும், குஸ்ரூவின்
கீழுள்ள அனைத்து இராச்சியங்களையும் துடைத்தெறியும் என்பதையும் என் சார்பாக
உங்கள் மன்னனுக்குத் தெரிவியுங்கள். எனவே, உங்கள் மன்னன் பாதான்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அவருடைய அதிகாரத்தில் தற்சமயம் இருப்பதையும்
அவருக்குக் கொடுப்பேன் என்றும், அவர் தற்சமயம் நிர்வகித்துக்
கொண்டிருக்கும் பகுதிகளுக்கெல்லாம் அப்படியே அரசனாகவும் ஆக்கி வைப்பேன்
என்றும் தெரிவியுங்கள்."
தன்னைக்
கைது செய்ய வந்தவர்களுக்கே, அவர்களின் வாயடைத்து, அவர்களின் மன்னனுக்கு
அவனுடைய அதிகாரத்தையே மீண்டும் திருப்பித்தரும் விசித்திரம் நடைபெற்று
முடிந்தது. மேலும், மற்றொரு மன்னனிடமிருந்து தமக்குப் பரிசாக அனுப்பி
வைக்கப்பட்டிருந்த தங்கமும் வெள்ளியும் மூட்டையில் கட்டி, கர்காராவிடம்
கொடுத்தனுப்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். "உங்கள்
மன்னனுக்கு எனது இந்த அன்பளிப்பை அளியுங்கள்"
தூதுவர்கள்
இருவரும் யமனுக்குத் திரும்பி பாதானிடம் நடந்ததையெல்லாம் விவரித்தார்கள்.
நிகழ்காலம் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் எந்தவொரு தகவல் தொடர்பு
வசதியும் இல்லாத அக்காலத்தில் எத்தகைய தலைபோகிற செய்தியாக இருந்தாலும் அது
நிலம் விட்டு நிலம் வந்து சேர அதற்கே உரிய காலம்தான் ஆகும். ஆகையினால்
பாதானுக்கு அதுவரை குஸ்ரூ கொலையுண்ட செய்தி வந்து சேர்ந்திருக்கவில்லை.
எனவே, "இதெல்லாம் ஒரு மன்னன் கூறுகிற செய்தியாக எனக்குத் தெரியவில்லை. என்
மனதிற்கு அவர் ஒரு நபி என்றுதான் படுகிறது. அது மட்டும் உண்மை என்றால்,
அவர் உங்களிடம் கூறியது நடந்தே தீரும். குஸ்ரூ கொல்லப்பட்டது உண்மை
என்றால் அவர் ஒரு நபியும், தூதுவரும் என்பது மெய்யாகிவிடும்.
அப்படியெல்லாம் இல்லையெனில், அடுத்து அவரை என்ன செய்யலாம் என்று யோசித்து
முடிவெடுப்போம்"
நியாயமான
சிந்தனையும், அந்நேரத்திற்கான சரியான யோசனையும் பாதானிடமிருந்து
வெளிப்பட்டது. அடுத்து சில நாட்களிலேயே பாரசீகத்திலிருந்து அந்தச் செய்தி
பாதானுக்கு வந்து சேர்ந்தது. ஷிர்வேதான் செய்தி அனுப்பியிருந்தான்.
அட்சரம் பிசகாமல் அப்படியே நபிகளார் தெரிவித்திருந்த செய்தி. அதனுடன்
மேலும் ஒரு தகவலும் இருந்தது, "மேற்கொண்டு தகவல் வரும்வரை மதீனாவில்
இருக்கும் அந்த நபியை ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்"
பாதானுக்கு
தெளிவு ஏற்பட்டு விட்டது, "முஹம்மது மெய்யாலுமே அல்லாஹ்வின் தூதராகத்
தான் இருக்க முடியும்". அபாதாவீயை அழைத்து மேலும் தகவல் விசாரிக்க,
"அவருக்கென்று எந்த ஒரு பாதுகாவலரும் கிடையாது ராசா. மக்களெல்லாம்
இயல்பாய் அவரைச் சந்திக்க முடிகிறது. அவரைப்போல் ஒரு மதிப்பையும்
அச்சத்தையும் என்னுள் தோற்றுவித்த வேறு எவரையும் நான் இதுவரை சந்தித்துப்
பேசியதேயில்லை" என்று மனதிலுள்ள உண்மையை அப்பட்டமாய் விவரித்தான் அவன்.
முழுக்க
முற்றிலுமாய் பாதானுக்கு உறுதி ஏற்பட்டு விட்டது. தன்னுடைய அமைச்சர்கள்,
ஆலோசகர்களையெல்லாம் அழைத்து, தனக்கு முஹம்மது நபியின் மேல் ஏற்பட்டுள்ள
நம்பிக்கையைத் தெரிவித்து, "நான் முஸ்லிமாகிவிடப் போகிறேன்" என்று
அறிவித்து விட்டார் பாதான். 'மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி'! அவரைச்
சார்ந்தவர்கள அனைவரும் இஸ்லாத்தினுள் நுழைந்தனர். பாரசீகத் தலைநகருக்கு
அனுப்பிய 'இஸ்லாமிய அழைப்பு' ஓலைக்கு, யமன் நாட்டில் முன்னுரை
துவங்கியது. ஒரு முன்னறிவிப்பு செய்தி; அதைச் சரியாய் சிந்திக்க முடிந்த
நல்லறிவு. அவ்வளவுதான், யமனுக்குள் இஸ்லாம் புகுந்தது.
யமனில்
பெரும்பான்மையாக வசித்து வந்த கிறித்தவர்களும் நெருப்பை வணங்கும் மஜூஸிப்
பாரசீகர்களும் (Magians) பெருமளவில் இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்தனர்.
தகவல் முஹம்மது நபிக்கு எட்டி அவர்கள் தன் தோழர்கள் சிலரை யமனுக்கு
அனுப்பி வைத்து அந்த மக்களுக்கெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைகளையும்
வாழ்க்கை முறையையும் கற்றுத்தர உத்தரவிட்டார்கள்.
அதன்
பின் சில வருடங்களில் பாதான் இறந்து போக அவரின் மகன் ஷஹ்ரிடம் ஆட்சிப்
பொறுப்பு வந்தது. ஷஹ்ரும் சன்ஆவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்த
ஆரம்பித்தார். அவருக்கு ஒரு அழகிய மனைவி, பெயர் அதாதா/ஆஸாத் எனும்
மர்ஸுபானா. இனிமையாய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, இறைவன்
நிர்ணயித்தபடி விதி வந்து தட்டியது அவர் வாசற் கதவை, அகோர வடிவத்தில்.
யமனில்
பனூ மத்ஹிஜ் என்றொரு கோத்திரம் இருந்தது. அக்கோத்திரத்தைச் சேர்ந்த
அப்ஹாலா பின் கஅப் என்றொருவன் இருந்தான். கட்டுமஸ்தான ஆள், கருப்பாய்
அவலட்சணமான உருவம். அவனுக்குத் தொழில் குறி சொல்வதும் சூனியம்
செய்வதும். எந்தக் காலத்தையும் போன்று அந்தக் காலத்திலும் அதற்கென்று ஒரு
வாடிக்கையாளர் கூட்டம் இருந்தது. அதனால் அதில் அவன் வாழ்க்கை ஓடிக்
கொண்டிருந்தது. தனது அகோர உருவத்தை மறைக்க அவன் ஓர் உபாயம் செய்தான்.
கம்பீரமாய் ஒரு போர்வை போர்த்திக் கொண்டு, முக்கால் முகத்தை
மறைத்தாற்போல் திரை அணிந்து, ஒருவகையான போலி தேஜசுடன் மக்கள் மத்தியில்
தோன்றுவான்.
அவனது
கரிய நிறத்தின் காரணத்தால் அவனது உண்மைப் பெயர் மறைந்து புதுப் பெயர்
தோன்றியது, அஸ்வத் அல்-அன்ஸி. அஸ்வத் என்றால் அரபு மொழியில் கருப்பு.
அன்ஸ் என்பது அவனது குலம். அதனால் அன்ஸுக் குலத்துக் கருப்பன்.
ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு. திடீரென்று ஒருநாள் அஸ்வத் அல்-அன்ஸிக்கு அந்த யோசனை தோன்றியது. தோழர்கள் வரிசையில் ஆறாமவரான ஹபீப் இப்னு ஸைத்
வரலாற்றில் படித்தோமே முஸைலமா என்றொருவன் பற்றி. அவனுக்குத் தோன்றிய அதே
கண்றாவி யோசனைதான். இவனே ஒரு சோதிடன்தானே, அதனால் நல்ல நாள், நேரம்,
நட்சத்திரம் எல்லாம் பார்த்து "இன்றிலிருந்து நானும் ஒரு நபி" என்று
அறிவித்து விட்டான். தன்னுடைய கோத்திரத்தினரை அழைத்து மனதில் தோன்றிய சில
வாசகங்களை அவர்களுக்கு ஒப்புவித்து, "இவையெல்லாம் குர்ஆன் வசனங்கள்.
அல்லாஹ் என்னையும் ஒரு தூதுவனாக தேர்ந்தெடுத்து இவற்றை எனக்கு
அனுப்பியுள்ளான். ஆகையினால் இன்றிலிருந்து நானும் ஒரு நபி."
ஆனால்
சும்மா சொல்லக் கூடாது, அவனுக்கு அருமையான நாவண்மை இருந்தது. அவன்
பேசுவதைக் கேட்கும் மக்களுக்கு அப்படி ஒரு போதை ஏறி, பெட்டிப் பாம்பாய்
அடங்கிவிடுவர். அவனது வார்த்தை ஜாலம் திறமையாய் மக்களை மடக்கிப் போடும்.
அப்படியே கொஞ்ச நஞ்சம் புத்தி இருந்து இவன் வார்த்தைக்கு மயங்காதவர்களை,
இருக்கவே இருக்கு பணம், அதைக் கொடுத்து மடக்கிப் போட்டு விடுவான்.
முஸைலமா
பின்னே அவனுடைய குலத்தினர் அணி திரண்டதுபோல் அஸ்வத் அல் அன்ஸியின்
பின்னும் அவனுடைய பனூ மத்ஹிஜ் குலம் அணி திரண்டு விட்டது. ஓர் ஆட்டம்
ஆடிப்பார்த்து விடலாம் என்று தோன்றியது அவனுக்கு. உடனே 700 குதிரைப்படை
வீரர்களுடன் நஜ்ரானுக்குப் படையெடுத்து வெகு எளிதாய் அதைக் கைப்பற்றியவன்,
அங்கிருந்த முஸ்லிம் நிர்வாகியை விரட்டிவிட்டு தன்னுடைய ஆள் ஒருவனை
கவர்னராக நியமித்தும் விட்டான். நஜ்ரான் நகர், யமனில் வடக்கே அமைந்துள்ளது.
அங்குக் கிடைத்த வெற்றி நுனி நாக்கில் தேனாய் இனிக்க, "திருப்பு, படையை"
என்று உடனே தெற்கே உள்ள சன்ஆ நகரை நோக்கிப் பாய்ந்தான். அங்கு பாதானின்
மகன் ஷஹர் நிர்வாகம் செய்து கொண்டிருந்தாரல்லவா, அவருக்கு இந்தத் தகவல்
வந்து சேர்ந்தது. அவரிடம் அதிகம் வீரர்களெல்லாம் இல்லை. சிறியளவில்
படையொன்றைத் திரட்டிக்கொண்டு சன்ஆவை விட்டுக் கிளம்பினார் அவர் அஸ்வதை
எதிர்கொள்ள. மூர்க்கமுடன் வந்து சேர்ந்த அஸ்வதுடன் முடிந்தளவு போராடிப்
பார்த்தார். ஆனால் அவரைக் கொன்று சன்ஆவை வென்றான் அஸ்வத் அல்-அன்ஸி. ஐந்து
நாட்களுக்குப் பிறகு சன்ஆவில் நுழைந்தவன் அங்கு ஷஹரின் அழகிய விதவை மனைவி
அதாதா எனும் மர்ஸுபானாவை வலுக்கட்டாயமாக மனைவியாக்கிக் கொண்டான்.
கணவனையும் அநியாத்திற்குப் பறி கொடுத்து, அவரைக் கொன்ற கரிய நிறத்து
அகோரனுக்கே மணப்பெண்ணாய் வாய்ப்பது என்பது ஒரு பெண்ணுக்கு எத்தகைய கொடூரம்?
விக்கித்துப் போனார் அதாதா.
தன்னை
அவன் நபியாக்கிக் கொண்ட இருபத்தைந்தே நாட்களுக்குள் இவ்வளவும் நடைபெற்று
விட்டது. சன்ஆவைத் தலைமையகமாக்கிக் கொண்டு, தொடர்ந்து அடுத்த சிலநாட்களில்
தெற்கே ஹத்ரமௌத், வடக்கே அத்-தாயிஃப், கிழக்கே பஹ்ரைன், மேற்கே
அல்-அஹ்ஸாவரை அவனது அதிகார எல்லை பரவி விட்டது. வேகமென்றால் வேகம் அவ்வளவு
வேகம். குடிவெறியாட்டம், களியாட்டம் என்று ஆட்டமான ஆட்டம் தொடர்ந்தது.
அதாதாவின் மேல் காதலும் பாதான் குடும்பத்தின் மேல் அளவற்ற வெறுப்புமாக
தன்னால் முடிந்தளவு அவருடைய குடும்பத்தினருக்கு அவமதிப்பு, ஏளனம், இகழ்ச்சி
என்று அளவற்றத் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தான் அவன். தட்டிக் கேட்பது
யார்?
கட்சித்
தலைவருக்கென்று தொண்டர், குண்டர் படையெல்லாம் இருக்குமல்லவா? அதைப்போல்
அவனுக்கென்று உருவாகியிருந்த அடிபொடிகள் மக்கள் மத்தியில் திறம்பட
விளம்பரப் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார்கள். "நம் ஐயாவிற்கு
வானிலிருந்து வானவர் ஒருவர் வருகிறார். ரொம்பப் பெரிய செய்தியெல்லாம்
சொல்லித் தருகிறார்" என்றெல்லாம் மக்கள் மத்தியில் ஊடுருவிக் கதையளக்கும்
ஊடக வேலை செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காகவே ஸுஹைக், ஷுகைக்
என்ற இருவரின் தலைமையில் ஒரு உளவுக் குழுவை அஸ்வத் அமைத்திருந்தான்.
மக்களுடன் இரணடறக் கலந்து விட்டிருந்த அவனது உளவாளிகள், மக்களின் அன்றாடப்
பிரச்சனை, கவலை, சுக, துக்கம் இதெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு தன்
தலைவனிடம் பட்டியல் போட்டுத் தந்துவிட, தன்னை நாடிப் பரிகாரம் தேடி
வருபவருக்கும், வராதவர்களை இழுத்து வந்தும், ஏதோ ஞானக் கண்ணில் கண்டு
விட்டதைப்போல் உளவாளிகள் கொண்டுவந்து தந்த அந்த விபரங்களை எல்லாம் சொல்ல,
"ஆஹா, எத்தகைய மகான் இவர், உன்னதர், நபியேதான், இறைவனின் தூதரேதான் இவர்"
என்றெல்லாம் மக்கள் மயங்கி விழாத குறை. காட்டுத் தீயாய் யமனில் பரவிக்
கொண்டிருந்தது அவன் செல்வாக்கு.
இந்த
அக்கிரமமும் அராஜகமும் செய்தியாக மதீனா வந்தடைந்தது. கூடவே, யமனில்
இன்னமும் உண்மையான முஸ்லிம்கள் அடங்கிய கூட்டமொன்று செய்வதறியாது திகைத்து
நிற்கிறது என்ற உபசெய்தியும் வந்தது. தாமதிக்காமல் கைஸ் இப்னு ஹுபைரா
எனும் தன்னுடைய தோழரை அழைத்தார்கள் நபியவர்கள். அவருடன் மற்றும் சில
தோழர்களையும் தேர்ந்தெடுத்து, "யமனுக்கு உடனே புறப்பட்டுச் சென்று,
அங்குள்ள முஸ்லிம்களுடன் இணைந்து இவன் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி
வைக்க வேண்டும்" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. யமன் முஸ்லிம்களுக்கு
ஒரு கடிதமும் நபியவர்கள் சொல்லி வரையப்பட்டது. கொள்ளை நோய்போல் பரவி வரும்
அக்கேட்டை எதிர்த்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நேர்வழியில் நிலைத்து
நிற்க அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் சொல்லி, புத்தியை உபயோகித்து
அவனை முறியடிக்க அதில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அக்கடிதத்தை
எடுத்துக் கொண்டு மதீனத்துக்குழு யமனுக்குக் கிளம்பியது.
தட்டிக்
கேட்பது யார்? என்று கேட்டோமல்லவா? தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக்
காத்திருந்தார் அப்படி ஒருவர். அவர்தான் ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு
அன்ஹு. அல்-அப்னாவைச் சார்ந்தவர்; பாதான் என்று பார்த்தோமே அதே
அல்-அப்னாவின் ஒரு தலைவராக ஃபைரோஸ் அத்-தைலமி இருந்தார். இவர் ஷஹரின்
நிர்வாகத்தில் அமைச்சராக இருந்ததாகவும் பின்னர் அஸ்வத் அல்-அன்ஸி சன்ஆவைக்
கைப்பற்றியதும் அவனிடம் அமைச்சராகத் தொடர விருப்பமின்றி
வெளியேறியதாகவும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், அஸ்வத் அல்-அன்ஸியின்
குழப்பம் ஃபைரோஸையும் அல்-அப்னா மக்களையும் வழிதவற வைக்கவிலலை. அவன்மேல்
அவர்களுக்கு எள்ளளவுகூட நம்பிக்கை விளையவில்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம், அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பதிலும் அல்லாஹ்வின்
மார்க்கத்திலும் அவர்கள் படுஉறுதியாக இருந்தனர். அஸ்வதைத் தீர்த்துக் கட்ட
அவர்களுக்குத் தேவை ஒரு சரியான தருணம். அதை எதிர்பார்த்துக்
காத்திருந்தனர்.
அந்நிலையில்
அவரை வந்து சந்தித்தது நபிகளார் அனுப்பி வைத்த குழு. கடிதத்தைப்
படித்துப் பார்த்த அத்தனை முஸ்லிம்களுக்கும் அது போதுமானதாயிருந்தது.
அவர்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அது ஊட்டியதுடன் அவர்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்த குழுவாய் உருவாக அது வழிவகுத்தது. எக்கச்சக்க எரிச்சலிலும்
கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் இருந்தனர் அவர்கள். துடித்துக் கொண்டிருந்தன
அவர்களின் தாடியும் வாளும். "அஸ்வத் அல்-அன்ஸியை ஒழித்துக் கட்ட தாங்கள்
அனைவரும் தயார்" என்று முழு ஒப்புதல் தெரிவித்து, வானில் முஷ்டி உயர்ந்தது.
இதற்குத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் உடனே தனது ஆட்டத்தைத்
துவக்கினார் ஃபைரோஸ். அவருடைய தலைமையில் உருவாகியது முஸ்லிம்களின்
போர்க்குழு.
அவரிடம்
ஒரு முக்கியத் துருப்புச் சீட்டு இருந்தது - கொலையுண்டுபோன ஷஹரின்
மனைவியும், அஸ்வத் அல்-அன்ஸி என்ற விகாரப் பொய்யனுக்குக் கட்டாய
மனைவியாகிப் போனவருமான அதாதா, ஃபைரோஸின் ஒன்றுவிட்ட சகோதரி. ஃபைரோஸின்
தந்தையும் அதாதாவின் தந்தையும் உடன்பிறந்த சகோதரர்கள்.
ஃபைரோஸ் புரிந்த சாகசத்தை அவரது வார்த்தைகளிலேயே வரலாற்று ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
அந்நேரத்தில்
அஸ்வத் அல்-அன்ஸியின் அதிகாரம் ஓர் உச்சத்தை அடைந்து விட்டிருந்தது.
அந்தளவு அதிகாரம் கொடூரனுக்கு வசமானால், அடுத்து? ஆணவம், தற்செருக்கு
இதெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் அவனிடம் வந்து ஒட்டிக் கொண்டன. அடுத்து
அவனுடைய இந்த அக்கிரம வெறியாட்டத்திற்கு உதவிய அவனுடைய நெருங்கிய
அதிகாரிகளிடம் அவனுடைய திமிரும் வெறியும் திரும்பின. 'அடக்கி வைக்க
வேண்டும், இல்லையென்றால் நம்மையே கவிழ்த்து விடுவார்கள்' என்ற எச்சரிக்கை
உணர்வுதான், வேறென்ன? அவனது படையில் ஃகைஸ் இப்னு அப்து யாகூத் என்றொரு
படைத் தலைவர் இருந்தார். அவரிடம் அவன் நடந்து கொண்ட போக்கு அவருக்குப்
பெரும் திகிலையே ஏற்படுத்தி விட்டிருந்தது. எந்த அளவுக்கு என்றால், 'யப்பா
கைஸு, நீ விதைத்த வினைக்கு நிச்சயமாய் நீயே அவன் கையால் நயவஞ்சகமாய்ச்
சாகப்போகிறாய்' என்று சகல உறுதியாய் அவர் நம்ப ஆரம்பித்து விட்டிருந்தார்.
அந்தளவு அவரை பயமுறுத்தி வைத்திருந்தான் அஸ்வத் அல்-அன்ஸி. அது, அந்த
பயம், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ஃபைரோஸ்.
ஃபைரோஸிற்கு
சகோதரர் முறையுள்ள மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தாதாவைஹ்
(Dadhawayh). அவரை அழைத்து கொண்டு ஃகைஸை இரகசியமாக சந்தித்தார் ஃபைரோஸ்.
நபியவர்களிடமிருந்து வந்திருந்த கடித விபரமெல்லாம் தெரிவித்து, "காலம்
கடக்காமல் இவனுடைய பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தால்தான்
சரிப்படும். என்ன சொல்கிறீர்?" என்று கேட்க, ஆனந்தத்தில் கண்ணீர் வராத குறை
ஃகைஸிற்கு. "எந்நேரமும் நான் என்னுடைய மரணத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன். நீங்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தாற் போலிருக்கிறது
எனக்கு. முடித்து வைப்போம் அவன் கதையை" என்று ஒப்புதல் உடனே வந்தது.
அவர்கள் மூவரும் யோசித்து ஒரு தீர்மானம் செய்தனர். "உள்ளே இருந்து கொண்டு
அந்த சூனியக்காரனை ஒழிப்பதற்கு நாம் காரியம் ஆற்ற வேண்டும். மற்றவர்கள்
பிரச்சனைகளை வெளியிலிருந்து சமாளிக்க வேண்டும்."
அப்பொழுது
அடுத்த யோசனையை முன்வைத்தார் ஃபைரோஸ். "அதாதா எனக்குச் சகோதரி. இந்த
அயோக்கியனுக்குக் கட்டாய மனைவியானதில் அவள் எவ்வளவு நொந்து போயிருக்கிறாள்
என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே, அவளை நான் சென்று சந்திக்கிறேன்.
நல்லதொரு வழி பிறக்கும்"
* * * * *
அரசி
அதாதாவைச் சந்திக்க அரண்மனைக்குள் ஃபைரோஸ் சென்றார். சந்தித்து, "இந்த
கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும்
என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல
வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்தார்.
"உன்னுடைய
அன்பார்ந்த கணவனையும் நம் மக்கள் பலரையும் கொன்றொழித்திருக்கிறான் இந்த
மாபாதகன். நம் பெண்களுடைய கற்பெல்லாம் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளன. நம்
அனைவர் மேலும் அவன் அதிகாரம் பெற்றவனாகிவிட்டான்
"நமக்கு
அல்லாஹ்வினுடைய தூதரிடமிருந்து கடிதமொன்று வந்துள்ளது. குறிப்பாய் அது
நமக்கும் பொதுவாய் யமனுடைய மக்களுக்கும் இவன் பிரச்சனையை முடித்து
வைக்கும்படி தெரிவித்துள்ளது. இவனுடைய தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைக்கச் சொல்லி நம்மை வற்புறுத்தி கட்டளையிட்டுள்ளார்கள் நபியவர்கள். நீ
எங்களுக்கு உதவ முன் வருவாயா?"
"சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் அதாதா.
"அவனது அதிகாரத்தைப் பிடுங்க வேண்டும்"
"ம்ம்ம்... அதெல்லாம் பத்தாது. வேண்டுமானால் நான் அவனைக் கொலை செய்ய உதவுகிறேனே" என்றார் அரசியார் நிதானமாக.
மகிழ்ச்சியில் பெரும் குதூகலத்துடன், "இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதை நேரடியாகச் சொல்லத் தயக்கமாயிருந்தது."
"முஹம்மதின்
மூலம் சத்தியத்தை அனுப்பி, அவரை எச்சரிப்பவராகவும் நற்செய்தி எடுத்துச்
சொல்பவருமாக அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! ஒரு நொடிகூட எனது
மார்க்கத்தின் மீதும் அதன் சத்தியத்தின் மீதும் எனக்கு சந்தேகம்
ஏற்படவேயில்லை. இந்தப் பேயனை நான் ஏராளமாய் வெறுக்கிறேன். இந்த அளவு நான்
வெறுக்கக்கூடிய வேறு எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
எந்தக் கணம் அவனைப் பார்த்தேனோ அப்போதே, இவன் ஒரு வெட்கங்கெட்ட பாவி,
மக்களின் உரிமையை மதிக்காத அயோக்கியன், அக்கிரமம் புரிவதில் கொஞ்சம்கூட
தயக்கம் காட்டாதவன் என்று தெளிவாகப் புரிந்து கொண்டேன்" என்று தன்
ஆற்றாமையை மேலும் விவரித்தார் அதாதா.
"அது மிகவும் சரியே. இவனை எப்படிக் கொன்றாழிப்பது என்று ஏதாவது உபாயம்?"
"மிகவும்
எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்கிறான் அவன். இந்த அரண்மனையின்
ஒவ்வொரு மூலையிலும் அவனுடைய பாதுகாவலர்கள் பரவியுள்ளார்கள். ஆனால்,
உபயோகத்தில் இல்லாத ஒரு கிடங்கு ஒன்று இங்கு உள்ளது. அதன் வெளிச்சுவர்,
திறந்த நிலவெளியை ஒட்டி அமைந்துள்ளது. இரவாகியதும் நீங்கள்
வெளியிலிருந்து அந்தச் சுவருக்கு அடியிலிருந்து சுரங்கம் தோண்டி உள்ளே
வந்துவிட்டால், அங்கே நான் உங்களுக்காக ஆயுதங்களையும் விளக்கொன்றையும்
தயார் செய்து வைத்திருப்பேன். பிறகு அவன் தூங்கும் அறைக்கு அழைத்துச்
செல்கிறேன். அதன் பிறகு உங்கள் பாடு."
யோசித்தார்
ஃபைரோஸ். "கோட்டைபோல் பாதுகாப்புடன் திகழும் இந்த அரண்மனையில் உள்ள ஓர்
அறைக்கு வெளியிலிருந்து சுரங்கம் தோண்டுவது அவ்வளவு எளிதான காரியமாய்
எனக்குத் தெரியவில்லை. யாராவது பார்த்துவிட்டால் போதும், அத்துடன்
அனைத்துக் காரியமும் கெட்டுவிடும், நம் கதையும் முடிந்துவிடும்."
"ஆமாம்,
உண்மைதான்" என்றார் அதாதா. சற்று நேரம் யோசித்தவர், "இதைக் கேள், எனக்கு
மற்றொரு யோசனை. உனக்கு மிகவும் நம்பகமான ஒருவனுக்கு வேலையாள்போல்
மாறுவேடமிட்டு இங்கு அனுப்பிவை. அவனை, அந்தக் கிடங்கின்
உள்புறத்திலிருந்து சுரங்கம் தோண்டி வெளிப்பகுதிக்கு பாதை ஏற்படுத்தச்
செய்கிறேன். உங்களுக்கு வெளியிலிருந்து கொஞ்சமே தோண்டி அந்தப் பாதையினுள்
நுழைய வேண்டியிருக்கும். நள்ளிரவு இருட்டில் யாரும் கவனிக்காமல் அதை
நீங்கள் செய்வது சுலபம்."
"இது உன்னத யோசனை!"
விடைபெற்று
வெளியில் வந்தவர் பரபரவென்று காரியமாற்ற ஆரம்பித்து விட்டார். தன்னுடைய
சகாக்களிடம் விவரமெல்லாம் தெரிவிக்க அனைவரும் அந்த யோசனையை ஏற்றுக்
கொண்டனர். திட்டத்தை நிறைவேற்றும் அனைத்து செயல்களும் இரகசியமாய்
நேர்த்தியாய் நடைபெற ஆரம்பித்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது.
முஸ்லிம்களில் தனக்கு மிக மிக நெருக்கமானவர்களை அழைத்தார் ஃபைரோஸ்.
நடைபெறவிருக்கும் திட்டத்தைச் சொல்லி "இரகசிய குறிச்சொல்" ஒன்றும்
நிர்ணயித்துக் கொண்டார். "மறுநாள் சுப்ஹு நேரத்தில் அனைவரும் அரண்மனைக்கு
வெளியே வந்து காத்திருங்கள். இரகசியக் குறிச்சொல் கேட்டதும் உங்கள்
பணியைத் தொடங்கிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே."
நள்ளிரவு
நெருங்கியது. ஃபைரோஸும் அவர் தலைமையில் சில தோழர்களும் அந்தச் சுரங்கம்
தோண்டப்பட்டிருந்த இடத்தை நெருங்கினர். வெளியிலிருந்து இலேசாய் உடைக்கும்
அளவிற்கே வேலையிருந்தது. கிடுகிடுவென்று அதற்குள் நுழைந்த அவர்கள், அங்கு
தயாராய் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, விளக்கைப்
பற்றவைத்துக் கொண்டு, அரண்மனைக்குள் நுழைந்தனர். அஸ்வத் அல்-அன்ஸி
உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வெளியே அதாதா தயாராய்க் காத்திருந்தார்.
இவர்களைக் கண்டு சைகை புரிய, ஃபைரோஸ் மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தார்.
நன்றாகக் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான் அஸ்வத். நேராய் அவனை
நெருங்கியவர், கத்தியாலேயே அவனது தொண்டைக் குழியில் குத்தினார்.
அறுக்கும்போது ஓர் ஒட்டகம் அலறுவதைப்போல பலமான ஓலமும் கதறலும் எழுந்தது
அவனிடமிருந்து. அவனது பாதுகாவலர்களை அது எழுப்பிவிட, சிலர் ஓடி வந்தனர்.
ஆனால் வெளியே நின்று கொண்டிருந்த அதாதா, அப்பொழுதுதான் தூக்கம் கலைந்து
வெளியில் வந்தவர் போல், "அது ஒன்றுமில்லை. நம்முடைய நபிக்கு
இறைவனிடமிருந்து வஹீ வந்து கொண்டிருக்கிறது. அதுதான் அந்த சப்தம். நீங்கள்
சென்று அமைதியாய் உறங்குங்கள்" என்று சொல்ல, பயபக்தியுடன் அகன்றனர்
பாதுகாவலர்கள்.
அறைக்குள்
வேலையை முடித்து அங்கேயே அவர்கள் விடியும்வரை காத்திருந்தார்கள். சுப்ஹு
நேரம் நெருங்கியதும் கோட்டையின் மதிற்சுவருக்கு ஓடினார் ஃபைரோஸ். அதன்
மேல் ஏறிநின்று கொண்டு, "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்" என்று பாங்கு
சொல்ல ஆரம்பித்துவிட்டார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை;
முஹம்மது அவனுடைய தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்ற பாங்கு
வாசகம் கூறியவர் அதைத் தொடர்ந்து, "அஸ்வத் அல்-அன்ஸி ஒரு பொய்யன் என்று
நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார். அது, அதுதான் அவர்களுடைய
குறிச்சொல். உள்ளே "காரியம் கச்சிதமாய் முடிந்தது" என்று வெளியில்
காத்திருக்கும் முஸ்லிம்களுக்கான குறிச்சொல். பற்றிக் கொண்டது காற்றில்
தீ!
ஃபைரோஸ்
கூவிய அந்த வாசகம் அரை உறக்கத்திலிருந்த அரண்மனைப் பாதுகாவலர்களை
திகைப்படையச் செய்து, துள்ளி எழுந்து ஓடிவந்தனர் அவர்கள். ஆனால் அதே
நேரத்தில் அனைத்துத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களின் கூட்டம் வெள்ளமாய்
ஓடிவந்து அந்தப் பாதுகாவலர்களை துரத்த ஆரம்பிக்க, என்ன பிரச்சனை என்று
பார்க்க ஓடிவந்தவர்கள், துரத்துபவர்களைக் கண்டு பயந்தோட ஆரம்பித்தனர்.
மாபெரும் பரபரப்பு, கூச்சல், குழப்பம். அப்பொழுது கழுத்தை அறுத்து
எடுத்து வந்திருந்த அஸ்வத் அல்-அன்ஸியின் தலையை, மதிற்சுவர் மேல் நின்று
கொண்டிருந்த ஃபைரோஸ், அலேக்காகத் தூக்கி அவனுடைய ஆதரவாளர்களின்
கூட்டத்தின்மேல் எறிய, விண்ணிலிருந்து பறந்து வந்து வீழ்ந்த முண்டமற்ற
அந்தத் தலை அப்படியே அவர்களை ஸ்தம்பித்து நிற்க வைத்துவிட்டது. அதைக் கண்டு
மேலும் உற்சாகம் மிகுந்துபோன முஸ்லிம்கள் 'அல்லாஹு அக்பர்' என்று
குரலெழுப்ப, அரண்மனையே அதிர்ந்தது. துரிதமாய் இயங்கி அரண்மனையைத் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் முஸ்லிம்கள் கொண்டு வரவும் சூரியன் உதிக்கவும் சரியாக
இருந்தது.
முடிந்தது கருப்பனின் கருப்பு அத்தியாயம்.
முதற்
காரியமாக வெற்றிச் செய்தியைக் கடிதமெழுதி ஒரு தூதுவனிடம் கொடுத்து, "இதை
மதீனாவிற்கு விரைந்து எடுத்துச் செல். நபியவர்களிடம் இந்த நற்செய்தியை
அறிவி" என்று கொடுத்தனுப்பினார் ஃபைரோஸ்.
இங்கு
இத்தனைக் களேபரம் நிகழ்ந்து கொண்டிருந்த அதேவேளை மதீனா சோகத்தில்
ஆழ்ந்திருந்தது! நோய் வாய்ப்பட்டிருந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் தனது உலக வாழ்வின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்தார்கள்.
யமனிலிருந்து இன்னம் செய்தி ஏதும் வந்திருக்கவில்லை. ஆயினும் ஜிப்ரீல்
அலைஹிஸ் ஸலாம் நபிகளிடம் வந்து அந்த நற்செய்தி அறிவித்தார். நோயின் கொடிய
வேதனையில் இருந்த நபியவர்கள் தன்னுடைய தோழர்களிடம், "அஸ்வத் அல்-அன்ஸி
நேற்றிரவு கொல்லப்பட்டு விட்டான். பேறுபெற்ற மக்களைச் சேர்ந்த பேறுபெற்ற
ஒருவரால் அவன் கொல்லப்பட்டான்" என்று அறிவித்தார்கள்.
"யார் அவர் அல்லாஹ்வினுடைய தூதரே?"
"ஃபைரோஸ்! ஃபைரோஸ் வெற்றியடைந்தார். தன்னுடைய ஈமானை நிறைவேற்றினார்."
யமனிலிருந்து செய்தி எடுத்து வந்த தூதுவர் மதீனாவை அடையும்போது, அதற்கு முந்தைய இரவு நபியவர்கள் உயிர் நீத்திருந்தார்கள்.
* * * * *
ஆண்டுகள் கழிந்தன. உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில் இருந்த காலம். ஃபைரோஸிற்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
"ஃபைரோஸ்,
நீர் ரொட்டியும் தேனும் உண்ணுவதில் மும்முரமாய் இருப்பதாய்க்
கேள்வியுற்றேன். இந்தக் கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு என்னை வந்து
சந்திக்கவும். இறைவனின் பாதையில் நீர் போர் புரியச் செல்ல வேண்டும்"
ரொட்டியும்
தேனும் உண்டு கொண்டிருக்கிறாய் என்றால், 'உல்லாசமாய் கவலையற்ற
வாழ்க்கையில் திளைத்திருக்கிறாயே' என்று அர்த்தம். இருபுறமும் போர்களில்
முஸ்லிம்கள் மும்முரமாய் ஈடுபட்டிருக்க ஃபைரோஸ் போன்ற வீரர்களின் சேவை,
உமருக்குக் கட்டாயத் தேவையாக இருந்தது. உடனே மதீனா கிளம்பினார்
ஃபைரோஸ். வந்தடைந்தவர், "நான் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்" என்று
தகவல் அனுப்ப, அனுமதியளித்து பதில் அனுப்பினார் உமர்.
ஃபைரோஸ்
சென்றபோது கலீஃபா உமரைச் சந்திக்க ஒரு கூட்டம் காத்திருந்தது.
தனக்குத்தான் கலீஃபா அனுமதி அளித்து விட்டாரே என்று காத்திருக்காமல்
முன்னேறிச் சென்றார் ஃபைரோஸ். அப்பொழுது அங்கிருந்த ஒரு குரைஷி இளைஞன்
சற்றுக் கோபமுற்று, "வரிசையில் வா," என்பது போல் தள்ளிவிட்டான். ஃபைரோஸ்
அவனுடைய மூக்கிலேயே ஓங்கிக் குத்திவிட்டார்.
அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் அவன் உடனே உமரிடம் ஓடினான். "யார் இப்படிச் செய்தது?"
"ஃபைரோஸ். அதோ வாசலில் நிற்கிறார்" என்றான் அந்த இளைஞன். ஃபைரோஸ் உள்ளே நுழைய, "ஓ ஃபைரோஸ்! என்ன இது?" என்றார் உமர்.
"ஓ
அமீருல் மூஃமினீன்! நீங்கள் எனக்குக் கடிதமெழுதி வரவழைத்திருந்தீர்கள்.
ஆனால் அவனுக்கு அப்படியேதும் அனுப்பவில்லை. எனக்கு உள்ளே நுழைய ஏற்கெனவே
அனுமதி அளித்து விட்டீர்கள். ஆனால் அவனுக்கு அனுமதி அளித்திருக்கவில்லை.
அப்படியிருக்கும்போது அவன் என்னை முந்திக் கொண்டு உள்ளே நுழைய
முற்பட்டான். அதனால், அவன் உங்களிடம் முறையிட்டதைச் செய்தேன்"
இரு
தரப்பு வாதத்தையும் கேட்ட உமர் உடனே தீர்ப்பு வழங்கினார். "அல்-கிஸாஸ்".
அதாவது ஃபைரோஸை அந்த இளைஞன் அதேபோல் திருப்பித் தாக்க வேண்டும்.
"அப்படியா? அது தான் தீர்ப்பா?" என்றார் ஃபைரோஸ்.
"ஆம்! அதுதான் தீர்ப்பு" என்றார் உமர்.
கலீஃபாவே
சொல்லிவிட்டாரல்லவா, எதிர்வாதம் கிடையாது. அடிபணிந்தார் ஃபைரோஸ்.
முழங்காலில் மண்டியிட்டு அந்த இளைஞன் தன்னை அடிக்க வாகாய் அவர் தம்
முகத்தை நிமிர்ந்து கொடுக்க, அந்த இளைஞனும் எழுந்து வந்து தாக்கத்
தயாராக, "சற்றுப் பொறு, இளைஞனே!" என்று இடைமறித்தார் உமர்.
"அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் உனக்குத் தெரிவிக்க
விரும்புகிறேன். ஒருநாள் அவர்கள், 'நேற்றிரவு பொய்யன் அஸ்வத் அல்-அன்ஸி
கொல்லப்பட்டான். நேர்மையான ஒரு சேவகர் அவனைக் கொன்றொழித்தார்.
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரால் அவன்
கொல்லப்பட்டான்' என்று கூறினார்கள்"
சற்று
நிறுத்திய உமர் அவனிடம் கூறினார். "அல்லாஹ்வின் தூதர் இவரைப் பற்றி
ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று கூறிய இந்த செய்தி உனக்குத் தெரிந்த பின்னரும்
நீ அவரை பழிக்குப் பழி வாங்க விரும்புகிறாயா?" என்று வினவினார் உமர்.
தயங்கவேயில்லை அந்த இளைஞன். உடனே பதில் வந்தது, "மன்னித்தேன் நான் இவரை!"
இதையெல்லாம்
பார்த்த ஃபைரோஸ் உமரை உற்றுப் பார்த்துக் கேள்வி எழுப்பினார், "என்னை
அவன் மன்னித்தது வலுக்கட்டாயச் செயலாகத் தெரியவில்லை?" கலீஃபா மட்டும்
நபியவர்களின் கூற்றைத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் பதிலுக்கு ஃபைரோஸின்
மூக்கு உடைந்திருக்கும்தானே.
யோசித்த உமர், "ஆம்" என்றார்.
"அப்படியானால்
என் வாக்குமூலத்தைக் கேளுங்கள். எனது வாள், குதிரை, மேலும் என்னுடைய
பணம் முப்பதாயிரத்தை நான் அவனுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்" என்று வீர
நெஞ்சு ஈரத்துடன் நியாயம் பேசியது.
"உன்னுடைய மன்னிப்பு அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகோதரனே. அவருடைய அன்பளிப்பை நீ ஏற்றுக் கொள்," என்றார் உமர்.
ஒருவரை
ஒருவர் இப்படியெல்லாம் நற்செயல்களில் முந்திக் கொண்டிருந்தால், என்ன சொல்லி
எழுதுவது? விம்மும் அளவிற்கு நம் நெஞ்சங்களில் ஓர் ஒரத்தில் இஸ்லாம்
விதைத்த சகோதர நேசம் மிச்சமிருந்தாலே போதுமானது.
ரலியல்லாஹு அன்ஹு!
No comments:
Post a Comment