எந்த வணக்கத்தில் பெண்களுக்கென்று தனியாக சொல்லப்பட்டுள்ளதோ அதை தவிர
தொழுகை உட்பட இஸ்லாத்தின் எந்த வணக்கத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசங்கள் வேறுபாடு இல்லை.
ஆனால் நடைமுறையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லாத பல வித்தியாசங்களை வேறுபாடுகளை பெண்கள் செய்து வருகின்றனர். அவைகளில் சிலது மூட நம்பிக்கையால் செயய்யக்கூடியதாகும். சில வித்தியாசங்கள் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.
தொழுகையை எடுத்துக் கொள்வோம்.
நபி ஸல் அவர்கள் கூறுகையில்…
ஆண்கள் ஸஜ்தாவில் (தொடைகளை) விரித்து வைத்துக் கொள்ளட்டும். பெண்கள் தாழ்த்தி (சேர்த்து) வைத்துக் கொள்ளட்டும். மேலும் அமர்வில் ஆண்கள் இடது அமர்ந்து வலது காலை நட்டி வைத்துக் கொள்ளட்டும். பெண்கள் பித்தட்டை தரையில் வைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
நூல்: பைஹகி
இந்த செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகி அவர்கள் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டது என்று இந்த செய்தியின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்கள்.
இதே செய்தி பைஹகி குப்ரா பாகம் 2 பக்கம் 222 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அபீ மதீ பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
நூல்: ஸானுல் மீஸான் பாகம் 2 பக்கம் 334.
நூல்: காமில் பீ லுபாயிர் ரிஜால் பாகம் 2 பக்கம் 214.
இதே செய்தி பைஹகி என்ற நூல் பாகம் 2 பக்கம் 223 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் விடுபட்டுள்ளார் எனவே முர்ஸல் வûயைச்சார்ந்த அறிவிப்பாகும்.
எனவே இந்த செய்தியை வைத்து தொழுகை ஆண்களுக்கும் வேறு பெண்களுக்கு வேறு என்று சொல்ல முடியாது.
ஆனால் தொழுகையில் சில இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
நூல் : புகாரி 1203.
இந்த செய்தியில் தொழுகையில் இமாமிற்கு தவறு ஏற்படும் போது ஆண்கள் சுப்ஹானல்லாவும் பெண்கள் கையும் தட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பெரிய வித்தியாசங்கள் வேறுபாடுகள் இல்லை.
அதே போன்று ஆண்கள் பெண்களுக்கு இமாத் தொழுகை நடத்த முடியும். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. இது பற்றி இன்ஷா அல்லாஹ் தனிக்கட்டுரை ஒன்று வெளியிடப்படும்.
ஆண்கள் கட்டாயமாக பர்ளான தொழுகைகளை பள்ளியில்தான் தொழவேண்டும். பெண்கள் பள்ளியிலும் வீட்டிலும் தொழுது கொள்ளலாம்.
பெண்களுக்கு பாங்கும் இகாமத்தும் கட்டாயம் இல்லை. ஆனால் ஆண்களுக்கு கடமையாகும்.
இது தவிர வேறு வித்தியாசங்கள் நமக்கு இருப்பதாக தெரியவில்லை.
-எஸ்.யூசுப் பைஜி.
No comments:
Post a Comment