Social Icons

Thursday, 22 November 2012

பாவங்களைப் பார்த்த பெரியார்.

கடந்த காலத்தில் மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமாக நாம்காண முடிகிறது. இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம். 


உலூ செய்பவர் கழுவப்படட வேண்டிய உறுப்புக்களை கழுவும்போது அவ்வுறுப்புக்களால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிகளுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உலூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

 
ஸகரிய்யா சாஹிப் இதுபற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயறில் கதையளந்திருக்கிறார்.
கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளுச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.|

(
பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)
உலூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்த கதை அவசியமில்லாமலிருந்தும் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது. இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா: திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரம் உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழி கேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.
மற்றவர்களுக்கு இருப்பதைவிட கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் மிரளச் செய்தார்கள். இந்தப் போலி ஞானத்தையே ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இங்கே இஸ்லாத்தின் பெயரால் அறிமுகம் செய்கிறார்.
இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்கு கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.
கஷ்பு எனும் அகப்பார்வை இருப்பது உண்மையானால் அந்த அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கு அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காண முடியவில்லை. நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை.
நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உலூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. ஸகரிய்யா சாஹிப் நபித்தோழர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை விடவும் உயர்வானவர்களாக, தான் பின்பற்றும் இமாமைக் கருதுகிறார். இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பொய்யான புகழுரைகள் தான் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன.
மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்வதவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கஷ்பு என்னும் ஞானம் (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம். இவர்கள் மதிக்கும் பெரியார்களுக்கு இறைத்தன்மையில் பங்கு போட்டுக் கொடுக்கும் இந்தக் கதையை எப்படி நம்ப முடியும்?
மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் உலூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது. அபூஹஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.
அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களார்களா? நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர் களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.
அபூஹனிபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் - அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் - ஸகரிய்யா ஸாஹிபுக்கு எப்படித் தெரிந்தது? அபூஹனிபா (ரஹ்) அவர்களின் காலத்திற்குச் சுமார் 1200 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த ஒருவர் இதை எப்படி அறிய முடியும்? இந்த தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?
இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப் பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.

 
ஸஹாரன்பூர் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் ஹதீஸ் வகுப்பு நடத்தி, தனக்குத் தானே ஷைகுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை மேதை) என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸகரிய்யா சாஹிப் ஒரு ஆதாரமும் இல்லாமல் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவம் பிரபலமானதாகும் என்று மொட்டையான முத்திரையுடன் இதைப் பதிவு செய்தது எப்படி என்பது தான் விந்தையாக உள்ளது.

 
அமல்களின் வணக்க வழிபாடுகளின் சிறப்புகளைக் கூறுவது போன்ற பாணியில் பெரியார்களுக்கு தெய்வீக அம்சம் வழங்கி தங்களுக்கும் அதில் ஒரு பாதியை பங்கு போட்டுக்கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்