Social Icons

Friday, 19 October 2012

மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

அல்லாஹ் தனது திருமறையில்:
‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதே போன்று உம்ராவை ஹஜ்ஜுடன் இணைத்தும், தனியாகவும் நிறைவேற்ற முடியுமான ஒரு வணக்கமாகும். இங்கு கவனத்தில் கொள்ளப்படும் விடயம்,  ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்ற செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மதீனாவை தரிசிப்பதையும் தவறாது செய்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாக இருந்தாலும் மதீனா ஸியாரத்தோடு தொடர்பு படுத்தி சில தவறான கருத்துக்கள், நம்பிக்கைள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.  அவைகளைக் களையெடுத்து அதன் உண்மை நிலையை விளக்குவதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.
 
ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் மதீனா ஸியாரத்தையும் செய்ய வேண்டுமென ஆர்வப்படுத்துவதற்காக எந்த அடிப்படையுமற்ற சில ஹதீஸ்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் உண்மை நிலையை இப்பொழு பார்ப்போம்:
1) ‘எவர் இவ்வீட்டை ஹஜ் செய்து என்னை தரிசிக்க வில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இமாம்களாகிய ஹாபிஃலுத் தஹபி தனது மீஸானிலும் (3- 237). அஸ்ஸர்கஷி, ஷவ்கானி ‘ஃபவாஇதுல் மஜ்மூஆ பிஃல் அஹாதீஸில் மவ்லூஅத்’ என்ற நூலில் பக்கம் 42 லும், இப்னுல் ஜவ்ஸி தனது மவ்லூஆத் 2- 217 லும், ஷைக் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவிலும் (1- 119) குறிப்பிட்டுள்ளனர்.
2) ‘எவர் ஒரே வருடத்தில் என்னையும், எனது தந்தை இப்றாஹீமையும், தரிசிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் கலை வல்லுனர்களில் எவரும் இப்படி ஒரு செய்தியை காணவில்லை என இமாம் அஸ்ஸர்கஷி தனது ‘அல்லாலீஃல் மன்ஸுரா’ எனும் நூலிலும், இமாம் நவவியின் ‘இது எந்த அடிப்படையுமற்ற ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி’ என்ற கூற்றை இமாம் அஸ்ஸுயூதி தனது ‘தைலுல் அஹாதீஸுல் மவ்லூஆ’ என்ற நூலிலும், இமாம் இப்னு தய்மிய்யா, ஷவ்கானி போன்ற அறிஞர்களும் இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி என குறிப்பிடுகின்றனர். ஷைக் அல்பானி (ரஹ்) தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவில் (1- 120) இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என பதிவு செய்துள்ளார்கள்.
3) ‘ஹஜ்ஜை நிறைவேற்றிய ஒருவர் எனது மரணத்திற்குப் பின் எனது கப்றை தரிசிப்பாரேனில் நான் உயிரோடிருக்கும் போது என்னை தரிசித்தவர் போன்றாவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷைக் அல்பானி (ரஹ்) தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவில் (1- 120) இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என பதிவு செய்துள்ளார்கள்.
நமது மிம்பர் மேடைகளில் முழங்கும் ஒரு பொய்யான ஹதீஸ்:
‘யார் ஹஜ் செய்து என்னை தரிசிக்க வில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை பரவலாகச் சொல்லி வருகிpறார்கள்.  இது ஹதீஸ் கலை அறிஞர்களால் பொய்யான ஹதீஸ் என்று ஏகோபித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹஜ் மற்றும் உம்ரா போன்ற இபாதத்துக்களுக்கும் மஸ்ஜிதுன் நபவி ஸியாரத்துக்கும் மத்தியில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஹஜ் அல்லது உம்ரா செய்த ஒருவர் மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வில்லையென்பதால் அவரது ஹஜ் அல்லது உம்ராவுக்கு கிடைக்கும் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை.
அதே போன்று மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதால் ஹஜ் உம்ராவின் கூலியில் எந்தக் அதிகப்படியான நன்மையும் கிடைக்கப் போவதில்லை.  மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதென்பது தனியான ஒரு அம்சமாகும்.

மதீனாவின் சிறப்புகள்:
‘மதீனா இதில் இருந்து இது வரை ஒரு புனித பூமியாகும், அங்குள்ள மரங்கள் வெட்டப்படமாட்டாது, அங்கு மார்க்கத்தில் எந்த நூதனமும் ஏற்படுத்தக் கூடாது, அங்கு யாராவது மார்கத்தில் புதுமையை உண்டாக்கினால் அவனுக்கு அல்லாஹ்வினதும், வானவர்களினதும், முழு மனித சமுதாயத்தினதும் சாபம் இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புஹாரி. ஹ. எண்: 1736.
‘யாஅல்லாஹ் மக்காவுக்கு செய்த அருளை விட இரு மடங்கு மதீனாவுக்க அருள் புரிவாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் பிரார்தித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புஹாரி. ஹ. எண்: 1752.
‘தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது, அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும், ஒவ்வொரு வாயிலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி)., ஆதாரம் : புஹாரி. ஹ. எண்: 1746.

மஸ்ஜிதுன் நபவி, நபியுடைய மஸ்ஜித் என்று அழைக்கப்படக்கூடிய மஸ்ஜிதின் சிறப்புகள்:
‘எனது வீட்டுக்கும், மிம்பருக்கும் மத்தியில் சுவர்கத்தின் பூங்காக்களில் நின்றும் ஒரு பூங்கா இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்., அப்துல்லாஹ் இப்னு ஸைதுல் மாஸினி (ரலி), ஆதாரம்: புஹாரி.
‘மஸ்ஜிதுன் நபவியில் தொழப்படும் இரு ரக்அத்துகள் மஸ்ஜிதுல் ஹராமைத் (கஃபாவைத்) தவிர ஏனைய மஸ்ஜித்களில் தொழப்படும் ஆயிரம் ரக்அத்தை விட சிறந்ததாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘மூன்று இடங்களுக்குத் தவிர மார்க்கத்தின் பெயரில் (நன்மையை நாடி) பிரயாணம் இல்லை. மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா), இந்த எனது மஸ்ஜித் (மதீனா), மஸ்ஜிதுல் அக்ஸா’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இஸ்லாத்தின பெயரால் மூன்று இடங்களுக்கு மாத்திரம் செல்வதை அனுமதிக்கிறது எனவே கபருகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ளப்படுவதை இந்த ஹதீஸ் தடைசெய்கிறது. மதீனாவுக்கு செல்லும் ஒருவர் மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்கும் நோக்கிலும் அங்கு இரு ரக்அத் தொழும் நோக்கிலும் தான் பயணிக்வேண்டும். அங்கு சென்று மஸ்ஜிதுன் நபவியில் இரு ரக்அத் தொழுது விட்டு பின் நபிகள் நாயகம் (ஸல்), அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), ஆகியோரின் கப்ருகளை தரிசித்து ஸலாம் சொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.
‘நான் உங்களுக்கு கப்ருகளை தரிசிப்பதை தடை செய்திருந்தேன் இப்பொழுது அவைகளை தரிசிப்பதற்கு அனுமதி அளிக்கிறேன் ஏனெனில் நிச்சயமாக அது மறுமை சிந்தனையை ஏற்படுத்தும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப நாட்களில் கப்றுகள் தரிசிப்பதை தடைசெய்தது சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் பல இன்னல்கள் தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவத்தின் பால் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கப்ருகளை தரிசிக்க அனுமதி வழங்கினால் மறுபடியும் அவர்கள் பழைய தவறையே செய்வார்கள் என்பதனாலாகும். ஆனால் அவர்கள் கொள்கையில் ஏகத்துவத்தில் உறுதியானதன் பின் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்தத் தவறு நிகழுமென பயந்து தடைசெய்தார்களோ அத்தவறு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதை காணலாம்.
அனுமதியளிக்கப்பட்டதன் நோக்கம் அந்த ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை, மறுமை வாழ்க்கை பற்றிய சிந்தனையை அது ஏற்படுத்தும்; அதன் மூலம் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சீர்திருத்திக்கொள்ள முடியும்; தீமைகளை விட்டு விலக முடியும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கப்ருகளின் பக்கம் சென்றால் தமது தாடி நனையுமளவுக்கு அழக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி கேட்கப்பட்டபோது,
“இது ஒரு மனிதனின் முதல் வீடு; இதில் அவன் வெற்றியடைந்து விட்டால் மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றியடைந்துவிடுவான்; இங்கு அவன் தோல்வியைத் தழுவினால் மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவுவான்” எனக்கூறினார்கள்.
தற்பொழுதுள்ள அதிகமான முஸ்லிம்கள் இந்த நோக்கத்தை மறந்து அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களிடம் அருள் வேண்டுவதற்காகவும், அவர்களிடம் பிரார்த்திப்பதற்காகவும், அங்குள்ள மண்ணை பரகத் எனக் கருதி எடுத்து வருவதற்காகவும், அதை உடளில் தேய்த்துக் கொள்வதற்காகவும், அதை வலம் வருவதற்காகவும் செல்லக்கூடிய அன்றாட காட்சிகளைக் காணலாம்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
‘நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு உங்களைப் போன்ற அடியார்களை அழைக்கின்றீர்கள் (பிரார்த்திக்கின்றீர்கள்); நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்கள் பிரார்த்தனைகளுக்கு அவர்கள் விடையளிக்கட்டும்’ (அஃராப்: 194).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ருகளை தரிசிக்கும் போது சொல்வதற்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்துள்ளார்கள்:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ  (مسلم).

‘அஸ்ஸலாமு அலைகும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷாஅல்லாஹு பிகும் லலாஹிகூன் அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா’. (முஸ்லிம்).
பொருள்: முஃமின்கள், முஸ்லிம்களின் வீட்டுடையவர்களே அல்லாஹ் உங்களுக்கு சாந்தியை அளிப்பானாக; நிச்சயாமக நாமும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உங்களுடன் வந்து சேர இருக்கிறோம்; நமக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
கப்ருகளை தரிசிக்கும் ஒருவர் மறுமை சிந்தனையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அவைகளை தரிசிக்க வேண்டும். அவர்களுடைய பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டுமே தவிர தங்களின் பாவங்களுக்கு அவர்களிடம் பாவமன்னிப்பு வேண்டுவது கொடிய பாவமான ஷிர்கில் கொண்டு போய் சேர்க்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தரிசிக்கும் ஒருவர்,

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

‘அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அவனது அருளும் அவனது பரகத்தும் உண்டாவதாக.
அபூ பக்கர் (ரலி) கப்றை தரிசிக்கும் போது,
‘அஸ்ஸலாமு அலைக யா அபாபக்ர் (ரலி)’. அபூ பக்ர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்களுக்கு உண்டாவாதாக.

உமர் (ரலி) கப்ரை தரிசிக்கும் போது:
அஸ்ஸலாமு அலைக யா உமர் (ரலி).
உமர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்ததன் பின் முதலில் கட்டிய பள்ளி மஸ்ஜித் குபாவாகும். எவர் தனது வீட்டில் இருந்து வுழூச் செய்து சென்று இம்மஸ்ஜிதில் இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அல்லாஹ் அவருக்கு ஒரு உம்ராவை நிறைவேற்றிய கூலியை வழங்குகிறான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்