இஸ்லாத்தில் எழும் எந்தவித சந்தேகங்களுக்கும்
அன்றாட வாழ்வில் ஏற்படும் எவ்வித பிரச்சனைகளுக்கும் தீர்வு காண குர்ஆனின் பக்கமும்,
நபிவழியின் (ஹதீஸ்களின்) பக்கமும் திரும்ப வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளை.
பார்க்க: அல்குர்ஆன் சூரா அந்நிஸா 59 வது வசனம்.
அதன்படி இப்பிரச்சனை குறித்து நாம் குர்ஆன்
ஹதீஸ் ஒளியில் ஆராய்வதற்கு முன் ஓர் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது,
இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள வணக்க வழிபாடுகளை குறித்து அவை எவ்வாறு எப்போது எங்கே
யாரால் செய்யப்பட வேண்டும் என்பதனைக் குறித்து அல்லது எவற்றை செய்யக் கூடாது
என்பதனைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்திச் சென்றுள்ளார்கள். வல்ல
அல்லாஹ்வும் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப் படுத்தி விட்டதாகவும் அதை தனது
மார்க்கமாக அங்கீகரித்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான். பார்க்க: அல்குர்ஆன்
சூரா அல்மாயிதா 3 வது வசனம்.
குர்ஆனை ஓதுவது வணக்கம் (இபாதத்). வணக்க
வழிபாடுகள் குறித்து நபி (ஸல்) அவர்களின் முடிவே இறுதியானது என்பதால், அவர்கள்
குர்ஆன் ஓதுவதிலிருந்து மாதவிடாய்காரப் பெண்ணை தடுத்ததாக எந்த ஹதீஸும் இல்லை.
குர்ஆனிலும் தடை இல்லை. எனவே மாதவிடாய்காரப் பெண் குர்ஆனை ஓதுவதற்கு எவ்வித தடையும்
குர்ஆனிலோ, ஹதீஸிலோ இல்லை என விளங்கலாம்.
ஓதலாம் என ஒப்புக் கொள்ளும் சில அறிஞர்கள்
தொடக்கூடாது என தடை விதிக்கின்றனர். தொடுவதற்கு தடை குர்ஆனில் உள்ளதாகவும்
வாதிடுகின்றனர். இவ்விஷயத்தில் அவர்கள் குறிப்பிடும் குர்ஆன் ஆதாரம் குறித்து
ஆலோசிப்பதற்கு முன் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது குர்ஆன் ஓதுவது தான் வணக்கமேயல்லாமல்,
தொடுவது வணக்கமல்ல. குர்ஆனை ஓதுவதால் இன்னின்ன நன்மைகள் உண்டு என ஆர்வமூட்டும்
ஹதீஸ்கள் ஏராளம். குர்ஆன் குறித்து ஆராய்ச்சி செய்யத்தூண்டும் வசனங்களும் ஏராளம்.
ஆனால் குர்ஆனைத் தொடுவதால் இன்ன நன்மை என்று அறிவிக்கும் ஒரு வசனமோ ஒரு ஹதீஸோ
கிடையாது.
மேலும் குர்ஆன் என்பது வரி வடிவில் அருளப்பட
வில்லை, மாறாக ஒலி வடிவில் அருளப்பெற்று பின் ஒலி வடிவிலும் வரி வடிவிலுமாக
பாதுகாக்கப்பட்டது.
எனவே ஒலி வடிவிலான மனனம் செய்யப்பட்ட குர்ஆனை
தொடுவது என்ற பேச்சுக்கே அன்று இடமில்லை. இன்று நம்மிடையே ஒலி வடிவில் பதிவு
செய்யப்பட்ட குர்ஆன் ஒலி நாடாக்களிலும் சிடீக்களிலும் புழக்கத்தில் உள்ளன.
சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது எனக்கூறும் அறிஞர்கள் இவை குறித்து எந்த
கருத்தும் தெரிவிப்பதில்லை. அவர்கள் தடுப்பதெல்லாம் வரிவடிவிலான அச்சிடப்பட்ட
குர்ஆனைத் தான். இதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் வலுவுள்ளதாக இருந்தால்
ஏற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலுமில்லை.
ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் என்ன
சொல்கிறது?
'தூய்மையானவர்களைத்
தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்' (அல்குர்ஆன் 56:79)
அல்லாஹ்வின் வாக்கு சத்தியமானது. முக்காலமும்
உணர்ந்த அவனது சொல் எவராலும் மீற முடியாததாகும். இவ்வசனத்திற்கு 'இக்குர்ஆனை
தூய்மையற்றவர்கள் தொடமாட்டார்கள்' எனப் பொருள் கொண்டால் அது நடைமுறை சாத்தியமற்றதாகி
விடும். எனவே இதற்கு முன்னுள்ள வசனங்களையும் இணைத்து 'இக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட
பதிவேட்டில் உள்ளது, தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு எவரும் தொடமாட்டார்கள்'
எனப் பொருள் கொள்வதே சிறப்பு.
இதனடிப்படையில் இவ்வசனம் சுட்டிக்காட்டுவது
'லவ்ஹுல் மக்பூல்' எனும் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் உள்ள குர்ஆன் மூலத்தைத் தான்
எனப் புரிந்து கொண்டால் மாதவிடாய்காரப் பெண் குர்ஆனைத் தொடுவது தவறல்ல,
தடுக்கப்பட்டதல்ல என விளங்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
No comments:
Post a Comment