Social Icons

Wednesday 31 October 2012

நக பாலீஷ், நறுமணம், ஒட்டுமுடி, மொட்டை, பச்சை குத்துதல் சட்டங்கள்



நக பாலீஷ் பூசலாமா?
   
ஒரு பொதுவான அடிப்படையை விளங்கிக்கொண்டால் பல கேள்விகளுக்குரிய பதில்கள் நமக்குக் கிடைத்துவிடும். மார்க்க சட்டத்திட்டங்களுக்கு இடையூராக அமையாத அலங்காரப்பொருட்கள் எதை வேண்டுமானலும் நாம் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு இடஞ்சலாக அமைந்த அலங்காரப் பொருட்களை பயன்படுத்துவது கூடாது.

    உளூ செய்யும் போது கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் முழுவதிலும் அவசியம் தண்ணீர் பட வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். அறைகுறையாகக் கழுகுவது தடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள்.  அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) உளூ (அங்கசுத்தி) செய்து கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!'' என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலிலி)
நூல் : புகாரி (96)
   
இன்றைக்கு விற்கப்படும் நகப்பூச்சுக்கள் தண்ணீர் ஊடுருவுவதை தடுக்கக்கூடியவையாக உள்ளது. இவற்றைப் பூசிக்கொண்டு உளூ செய்யும் போது நகங்களின் மீது தண்ணீர்படுவது தடுக்கப்படுகிறது. எனவே தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பூசிக்கொள்வதில் தவறில்லை. உளூ செய்யும் போது இவற்றை அகற்றிவிட வேண்டும்.
   
தண்ணீர் ஊடுருவதை தடுக்காத வகையில் நகப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெண்கள் நறுமணம் பூசலாமா?
   
பிறரை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நறுமணம் பூசுவதை மார்க்கம் தடைசெய்துள்ளது.
   
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036)
   
பிறர் நுகர வேண்டும் என்பதற்காக என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் வார்த்தை கவனிக்கத்தக்கதாகும். தவறான எண்ணமில்லாமல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காக பூசுவது தவறில்லை என்பது இதிலிருந்து விளங்குகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் நறுமணத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இஷாத் தொழுகைக்கு வரும் போது மாத்திரம் நறுமணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பெண்கள் கட்டளையிடப்பட்டார்கள். மற்றத் தொழுகைகளுக்கு வரும் போதோ அல்லது தொழுகை அல்லாத மற்ற நேரங்களிலோ நறுமணம் பூசக்கூடாது என்றோ அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. 
   
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பர் : அபூஹரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (675)
   
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள். உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு (எனது தாய்) உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (4300)
   
நறுமணத்தைப் போன்றே பூக்களையும் பிறரைக் கவரும் நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது.  தவறான எண்ணமில்லாமல் பூவின் அழகை விரும்பியோ அதன் வாசனையை வரும்பியோ பூக்களை சூட்டிக்கொண்டால் அதில் தவறு ஏதும் இல்லை.
   
ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் எந்தக் காரியத்தையும் ஒரு பெண் செய்யக்கூடாது என்பதால் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த அதிக நறுமணத்தைத் தருகின்ற வாசனை திரவியங்களை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமுடி வைக்கலாமா?
   
ஒட்டுமடி வைத்துக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம்  கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும்  அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துகின்றான்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5934)

பெண்கள் மொட்டை அடிக்கலாமா?
   
பெண்கள்  முடியை குறைத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் மொட்டையடிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
   
பெண் தலையை மொட்டையடித்துக் கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : நஸயீ (4963)
   
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மொட்டையடிப்பதென்பது பெண்களுக்குக் கிடையாது. முடியை குறைத்துக்கொள்வது தான் அவர்களுக்கு உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : தாரமீ (1826)
தலையில் புண் இருந்தாலோ முடி வைப்பதினால் நோய் ஏற்பட்டாலோ அப்போது மொட்டையடிப்பதில் தவறில்லை. உடல்நலத்தை கவனத்தில் கொண்டு சிறுமிகளுக்கு மொட்டையடிப்பதும் தவறில்லை.

பச்சை குத்திக்கொள்ளக் கூடாது
   
இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அழகிற்காக பற்களை செதுக்கிக்கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை மளித்து விட்டு விரும்பி வடிவில் செயற்கையாக புருவங்களை வைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.    
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)

விதவைப் பெண்கள் அலங்கரித்துக்கொள்ளலாமா?
   
கணவனை இழந்தை பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மாத்திரம் அலங்காரம் செய்யாமல் தவிர்த்துக்கொள் வேண்டும். அதற்குப் பிறகு அவர்கள் பூ வைத்துக்கொள்ளலாம். வண்ண ஆடைகளை உடுத்தலாம். தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பியவாறு தன்னை அலங்கரித்துக்கொள்ளலாம்.
   
ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் விதவைப் பெண்கள் அலங்கரிக்கக்கூடாது. வண்ண ஆடைகளை உடுத்தக் கூடாது என்றெல்லாம் பலவிதமான மூட நம்பிக்கைகள் நிலவுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் கொடுமையாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்