Social Icons

Saturday, 20 October 2012

புதுமனையில் குடியேறும் நிகழ்சியின் போது மௌலுது ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது அவசியமா? இல்லையா?

    வீடு கட்டி குடியேறும் சிலர் அல்லது புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபுகும் சிலர் கடைபிடித்து வரும் சில சம்பிரதாயங்கள் குறித்து..
    பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலானவர்களால் மௌலீது ஓதப்படுகிறது. இது நபி (ஸல்) அவர்கள் நடை முறைப்படுத்தாத ஒரு செயலாகும்.
ரஸுல் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து ஒரு பள்ளியையும், அத்துடன் ஒரு வீட்டையும் நிர்மாணித்தார்கள். அவ்வீட்டில் குடிபுக எந்த மௌலீதும் ஓதப்பட வில்லை.

    ஏனெனில் மௌலீது என்பதே ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன் சில விஷமிகளால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் புகுத்தப்பட்டது தான்.
    ரஸுல் (ஸல்) அவர்கள் செய்ததும், பிறர் செய்ததை அங்கீகரித்ததும், செய்யும்படி கட்டளை இட்டதும் மட்டுமே மார்க்கமாகும். இவற்றிற்கு மட்டுமே மறுமையில் கூலி உண்டு. இவையல்லாத மற்றவை மறுமையில் வெறும் பதர்களாக நிராகரிக்கப்பட்டு விடும். இது குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை பின்வருமாறு:
    'நாம் சொல்லாத செய்யாத ஒன்றை எவர் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்' நபிமொழி.
    இந் நபிமொழியின் படி குடிபுகுமுன் ஓதப்படும் மௌலீது நிச்சயமாக மறுமையில் நிராகரிக்கப்படும். தவிர இதன் மூலம் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.
    நமக்கு பயனளிக்காத, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நேரத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து, செய்து முடிக்க நாடுவது அறிவுடமையாகாது.
    மேலதிகமான சிந்தனைக்கு:
    பிறந்த நாள் வாழ்த்துப்பாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட மௌலீதுகள் குடியேறும் போதும், கல்யாணத்தின் போதும் இவை தவிர இன்னபிற விசேஷங்களின் போதும் இடம் பெறுவது எங்ஙனம்?
    சம்பந்தமில்லாமல் நடைபெறும் சம்பவங்களை சிந்தித்தாலே இது இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு எனப் புரிந்து கொள்ளலாம்.
    இங்கு நபி (ஸல்) அவர்களின் மேலும் ஒரு எச்சரிக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    'யாரொருவர் வேற்று கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவரல்லர் (அவர்களைச் சார்ந்தவர்களே)'.
    அதாவது சுருக்கமாக கூற வேண்டுமெனில் 'பிறரது கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர் முஸ்லிமல்ல' என்பதாகும்.
    எனவே நாம் முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமெனில் பிற மத, பிற சமய கலப்பில்லாமல் தூய இஸ்லாத்தின்படி நடக்க முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்