Social Icons

Sunday 25 August 2013

மறுமை நிகழ்வது வியப்புக்குரியதன்று…!

இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்; பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இதுதான்:
திண்ணமாக, அல்லாஹ் தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான்.  அல்குஆன் 22:7
இங்கே சொல்லப்பட்ட சான்றுகள் மெய்ப்பிக்கின்ற இன்னும் இரண்டு உண்மைகள்: “மறுமை வேளை வந்தே தீரும்’  இறந்து போனவர்கள் அனைவரையும் இறைவன் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பியே தீருவான்.’
இறைவன் எந்த அளவுக்குப் பேராற்றல் படைத்தவன் என்கிற கோணத்தில் இறைவனின் செயல்களைப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மறுமையை நிகழ்த்துகின்ற ஆற்றல் படைத்தவன் அவன் என்றும்  மேலும் எந்த மனிதர்களை அவன் எந்தவித மூலப்பொருளுமின்றி முதன்முதலாகப் படைத்தானோ அந்த மனிதர்கள் இறந்து மண்ணோடு மண்ணாகிப் போன பிறகு அவர்கள் அனைவரையும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர்ப்பிக்கின்ற ஆற்றலும் வலிமையும் கொண்டவன் அவன் என்றும் மனம் சாட்சி சொல்லும்.
இறைவன் எந்த அளவுக்கு விவேகம் நிறைந்தவன், ஞானம் செறிந்தவன் என்கிற கோணத்தில் அவன் செய்கின்றவற்றைப் பார்த்தாலும் ஓர் உண்மை புலப்படும். இறைவன் மறுமையை நிகழ்த்தியே தீருவான் என்றும் இறந்து போன மனிதர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்ப்பித்தே தீருவான் என்றும் ஏனெனில் இவ்விரண்டும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அறிவின் தேட்டம் நிறைவடையும். எந்தவொரு அறிவாளியும் இவ்விரண்டையும் செய்யத் தவறவே மாட்டார். இந்நிலையில் அளவிலா ஞானமும் இணையிலா விவேகமும் நிறைந்தவன் இவ்விரண்டையும் செய்யத் தவறுவானா, என்ன?
இதனை எடுத்துக்காட்டு ஒன்றின் மூலம் மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம். எந்தவொரு மனிதனும் தனக்குரிய சொத்துபத்து, தோப்புத் துரவு போன்றவற்றை அல்லது வணிகத்தை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு வாளாவிருப்பதில்லை. ஏதாவதொரு வேளையில் யாரிடம் அவற்றை ஒப்படைத்தானோ அவரிடம் அவற்றைப் பற்றிய கணக்கு வழக்குகளை விசாரிக்கின்றான். இத்தனைக்கும் மனிதனுக்கு
மிகக் குறைவான அளவில்தான் ஞானமும் விவேகமும் அருளப்பட்டிருக்கின்றது.
ஆக, அமானிதத்துக்கும் கணக்கு வழக்கு பற்றிய விசாரிப்புக்கும் இடையில் கட்டாயமாக நெருக்கமான பிணைப்பு இருக்கின்றது; அதனை மிகக் குறைவான அளவில் ஞானமும் விவேகமும் அருளப்பட்ட மனிதனால் எந்த நிலையிலும் புறக்கணித்து விட முடிவதில்லை.
அதுமட்டுமல்ல, மனிதன் தனக்கு வழங்கப்பட்ட இந்த ஞானத்தைக் கொண்டுதான் அறிந்து, புரிந்து, வலிந்து செய்கின்ற செயல்களையும் அறியாமல், புரியாமல், தெரியாத்தனமாகச் செய்கின்ற செயல்களையும் பிரித்தறிகின்றான். மேலும் ஒருவர் அறிந்து புரிந்து, வலிந்து செய்கின்ற செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் அவர் தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும் என்கிற சிந்தனையை முன்வைக்கின்றான். அதே போன்று செயல்களில் எவை நல்லவை, எவை தீயவை எனப் பிரித்தறிகின்றான். நல்ல செயல்களின் பலனாகப் பாராட்டும், பரிசும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். தீயச் செயல்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றான். இதற்காக நீதிமன்றங்களை நிறுவி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றான்.
நல்ல செயல்களுக்குப் பாராட்டும் விருதும் கிடைக்க வேண்டும் என்றும் தீயச் செயல்களுக்குத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்கிற இந்த ஞானம் மனிதனுக்குக் கிடைத்தது இறைவனால்தான். அந்த இறைவனுக்கு மட்டும் இந்த விவேகமும் ஞானமும் இல்லாமல் போய்விடுமா, என்ன? இத்துணை பெரிய பூமியை, அதில் இருக்கின்ற  எண்ணற்ற அருள்வளங்களுடன், அவற்றை விரும்புகின்ற வகையில் பயன்படுத்துகின்ற, செலவிடுகின்ற சுதந்திரத்துடன் மனிதனிடம் ஒப்படைத்து விட்டு இறைவன் ஒதுங்கிக் கொண்டானா? அல்லது கொடுத்ததை மறந்துவிட்டானா? தாம் கொடுத்தவற்றைக் குறித்து கணக்குக் கேட்கவே மாட்டானா? அது மட்டுமல்ல,
கொடுமைகளை இழைத்துவிட்ட பிறகும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற கொடுங்கோலர்களும், மிகப் பெரும் குற்றங்கள் புரிந்த பிறகும் மிக மிக எளிமையான தண்டனையுடன் தப்பித்துவிடுகின்ற தீயவர்களும் அப்படியே விட்டு விடப்படுவார்கள். அவர்கள் விசாரிக்கப்படவே மாட்டார்கள் அவர்களுக்காக நீதிமன்றம் நிறுவப்பட மாட்டாது என அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவரை நம்ப வைக்க முடியுமா?
அதே போன்று மிகப் பெரும் அளவில் சேவையாற்றியும் நல்ல நல்ல செயல்களில் ஈடுபட்ட பிறகும் நல்லவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பரிசும் விருதும் பாராட்டும் வழங்கப்படாமலே போய்விடும்; அவர்கள் செய்த நற்செயல்களுக்கு எந்தக் காலத்திலும் அங்கீகாரம் கிடைக்காமலே போய்விடும் என ஒருவர் உறுதியாக நம்புவாரா?
இல்லையெனில் ஞானம் நிறைந்த இறைவனின் விவேகத்தின் தவிர்க்க முடியாத பகுதிகளாக மறுமையும் மரணத்திற்குப் பின் வாழ்வும் இருந்தாக வேண்டும் என்கிற தீர்மானத்திற்கே எவரும் வந்தாக வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் அவ்வாறு மறுமையும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்வும் இல்லாமல் போவதுதான் வியப்புக்குரியதாகும். மறுமையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்வும் நிகழ்வது எந்தவகையிலும் வியப்புக்குரியவையல்ல.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்