குளிப்பாட்டி, கஃபனிட்ட
பின் தொழுகை நடத்துவதற்காகவும், தொழுகை முடிந்து அடக்கம் செய்வதற்காகவும் அடக்கத்தலம்
நோக்கி உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.
உடலை எடுத்துச்
செல்பவர்களும், உடன் செல்பவர்களும், உடலை வழியில் காண்பவர்களும் கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுங்குகள் உள்ளன.
சுமந்து செல்லும் பெட்டி -
சந்தூக்
ஜனாஸாவை எடுத்துச்
செல்வதற்கு என குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்துகின்றனர். சந்தாக்
அல்லது சந்தூக் என்ற பெயரால் இப்பெட்டி குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு மார்க்கத்தில்
வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு
நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது
அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின்
ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே நீங்கள்
இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு
நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண்
ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும்
நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம்
என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள். நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
'நல்ல மனிதரின் உடல்
கட்டிலில் வைக்கப்பட்டவுடன் என்னை முற்படுத்துங்கள்!' என்று
அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் எனக்குக் கேடு தான்!
என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று அது கேட்கும்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: நஸயீ 1882
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள்
உள்ளன.
கட்டிலின் மேல் உடலை
வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச்
செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.
இப்போது நடைமுறையில்
பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை
வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.
தோளில் சுமந்து செல்லுதல்
ஜனாஸாவைப் பற்றிக்
குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால்... என்பன
போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
எனவே தள்ளுவண்டியில்
வைத்துத் தள்ளிச் செல்வதை விட தோளில் சுமந்து செல்வதே சிறப்பானதாகும்.
ஆயினும் சில
சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம்.
வெளியூரில் மரணித்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் தோளில் சுமந்து
செல்வது சாத்தியமாகாது.
ஊரை விட்டு வெகு தொலைவில்
அடக்கத்தலம் அமைந்திருந்தால் அவ்வளவு தூரம் தூக்கிச் செல்வது சிரமமாக அமையும்.
மேலும் உடலைத் தூக்கி விட்டால் சீக்கிரம் கொண்டு போய் இறக்குங்கள் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.
கிலோ மீட்டர் கணக்கான
தொலைவில் அடக்கத்தலம் இருந்தால் தோளில் தூக்கிச் செல்வது அதிக நேரத்தை எடுத்துக்
கொள்ளும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்றால் சீக்கிரம்
வந்துவிடலாம்.
மேலும் ஜனாஸாவைப் பின்
தொடர்வதற்குச் சிறந்த நன்மைகள் உள்ளன. நீண்ட நேரம் நடக்கும் நிலை ஏற்பட்டால்
பெரும்பாலானவர்களால் பின் தொடர்ந்து வர முடியாத நிலை ஏற்படலாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில்
அடக்கத்தலத்துக்கு நெருக்கமான தூரம் வரை ஜனாஸாவைக் கொண்டு
சென்று அங்கிருந்து தோளில் சுமந்து சென்றால் அங்கிருந்து ஜனாஸாவை மக்கள் பின்
தொடர்ந்து சென்று அந்த நன்மைகளையும் மக்கள் அடைந்து கொள்ள முடியும்.
மேலும் எந்த ஆத்மாவையும்
அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று அல்லாஹ் பல்வேறு
வசனங்களில் அறிவுறுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து
செல்லுதல்
உடலை எடுத்துச் சென்று
அடக்கம் செய்ய நாலைந்து பேர் போதும் என்றாலும் உடலைப் பின் தொடர்ந்து செல்வதை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அதிகமான நன்மைகள்
கிடைக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டனர். அவைகளாவன: ஜனாஸாவைப் பின் தொடர்ந்து
செல்லுதல், நோயாளிகளை விசாரிக்கச் செல்லுதல், விருந்தை
ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், சத்தியத்தை
நிறைவேற்றுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், தும்மல்
போட்டவருக்காக துஆச் செய்தல். அறிவிப்பவர்:
பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235, 'ஒரு
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில்
ஸலாம் கூறுதல், நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப்
பின் தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல்
போட்டவருக்கு துஆச் செய்தல்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி நூல்: புகாரி 1240
'நம்பிக்கையுடனும், மறுமை
நன்மையை எதிர்பார்த்தும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை
நடத்தி, அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத்
நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின்
தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர்
ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) நூல்: புகாரி 47, 1235
'உங்களில் இன்று நோன்பு
நோற்றவர் யார்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர்
(ரலி) அவர்கள் 'நான்' என்று சொன்னார்கள். 'இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்தது யார்?' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள். 'ஏழைக்கு இன்று உணவளித்தவர்
யார்?' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நான்' என்று கூறினார்கள். 'இன்று உங்களில் நோயாளியை விசாரிக்கச் சென்றவர்
யார்?' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) 'நான்' என்றார்கள். 'இவை அனைத்தும் ஒருவரிடம் ஒரு
சேர அமைந்தால் அவர் சொர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) நூல்: முஸ்லிம் 1707, 4400
பெண்கள் ஜனாஸாவைப் பின்
தொடராமல் இருப்பது சிறந்தது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து
செல்வது அதிக நன்மை தரக் கூடியது என்றாலும் ஜனாஸாவைப் பெண்கள் பின் தொடர்ந்து
செல்லாமல் இருப்பது நல்லது. பின் தொடர்ந்தால் குற்றமாகாது. 'ஜனாஸாவைப் பின் தொடர வேண்டாம் என்று
(பெண்களாகிய) நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (ஆயினும்) வலிமையாகத்
தடுக்கப்படவில்லை' என்று உம்மு
அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். நூல்:
புகாரி 1278
மென்மையான முறையில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றால் அதைச்
செய்யாமலிருப்பது நல்லது என்றே புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் என்று புரிந்து
கொள்ளக் கூடாது.
விரைவாகக் கொண்டு செல்லுதல்
ஜனாஸாவைத் தோளில் சுமந்து
விட்டால் ஆடி அசைந்து நடக்காமல் வேகவேகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.
'ஜனாஸாவை விரைவாகக் கொண்டு
செல்லுங்கள். அது நல்லவரின் உடலாக இருந்தால் நல்லதை நோக்கிக் கொண்டு
சென்றவராவீர்கள். அது கெட்டவரின் உடலாக இருந்தால் கெட்டதை (சீக்கிரம்)
தோளிலிருந்து இறக்கியவர்களாவீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) நூல்: புகாரி 1315
'ஜனாஸா (கட்டிலில்)
வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக இருந்தால்
சீக்கிரம் கொண்டு போங்கள்' என்று அது கூறும். அது கெட்டவரின் உடலாக இருந்தால் அய்யஹோ!
என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று கேட்கும். அந்த சப்தத்தை மனிதன் தவிர
அனைத்தும் செவியுறும். மனிதன் செவியுற்றால் மூர்ச்சையாவான்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத்
(ரலி) நூல்: புகாரி 1314, 1316, 1380
வாகனத்தில் பின் தொடர்தல்
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து
செல்பவர் நடந்தும் செல்லலாம்; வாகனத்தில் ஏறியும் பின் தொடரலாம்.
'வாகனத்தில் செல்பவர்
ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம்' என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: திர்மிதி 952, நஸயீ 1917, அஹ்மத் 17459, 17468, 17475
வாகனத்தில் பின் தொடரக்
கூடாது என்ற கருத்துடையவர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது.. அதில் ஏற மறுத்தார்கள்.
(அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக்
கொண்டார்கள். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும்
போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்' என்று
விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி நூல்: அபூ தாவூத் 2763
இந்த ஹதீஸ் இவர்களின்
கருத்துக்கு ஆதாரமாக ஆகாது. வானவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகக்
கண்டனர். அவர்கள் நடந்து வருவதையும் அறிந்தனர். இதனால் வாகனத்தைத் தவிர்த்தனர்.
இந்த நிலை மற்றவர்களுக்கு இல்லை. வானவர்கள் வருகிறார்கள் என்பதும்
மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வாகனத்தில் வருகிறார்களா? நடந்து
வருகிறார்களா என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே நமக்குத் தெரியாத
விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
வாகனத்தில் ஜனாஸாவைப் பின்
தொடர்ந்து செல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததற்கு ஆதாரம் உள்ளதால்
விரும்பினால் வாகனத்தில் ஏறி ஜனாஸாவைப் பின்
தொடரலாம்; ஜனாஸாவை முந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜனாஸாவுடன் நடந்து செல்பவர்
ஜனாஸாவுக்கு முன்னேயும் வலது இடது புறங்களிலும் செல்வதற்கு அனுமதி உண்டு.
நடந்து செல்பவர்
விரும்பியவாறு செல்லலாம் என்று மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே இதற்குப்
போதுமான சான்றாகும்.
ஜனாஸாவை எடுத்துச் செல்லும்
போது எந்த துஆவும் இல்லை
ஜனாஸாவை எடுத்துச் செல்லும்
போது பல்வேறு திக்ருகளைக் கூறிக் கொண்டு செல்லும்
வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதற்கு என தனிப்பட்ட திக்ரோ, துஆவோ
இருந்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயம் ஓதிக்
காட்டியிருப்பார்கள். அவர்கள் அவ்வாறு ஓதி இருந்தால் அது நமக்கு
அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை.
எனவே ஜனாஸாவை எடுத்துச்
செல்லும் போது மௌனமாகத் தான் செல்ல வேண்டும்.
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க
வேண்டும்
முஸ்லிமின் உடலோ, முஸ்லிம்
அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது
நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
'உங்களில் ஒருவர் ஜனாஸாவைக்
கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க
வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 1308
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது.
இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா' என்று
நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின்
அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1311, 1313
எழுந்து நிற்கும் சட்டம்
மாற்றப்படவில்லை
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து
நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள்
கூறுகின்றனர். பின் வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஜனாஸாவில் எழுந்ததைக் கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம்.
நாங்களும் உட்கார்ந்தோம்' என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 1599
இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப்
புரிந்து கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.
எழுந்து நின்றார்கள்; பின்னர்
எழுந்து நிற்கவில்லை' என்பது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில்
எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் கொள்ள முடியும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸின்
வாசகம் அவ்வாறு இல்லை. எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும்
உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன்
எழுந்தார்கள். பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம்
அமைந்துள்ளது.
ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று
கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற
கருத்தைத் தான் இது தரும்.
எழுந்தார்கள்' என்பதை
எழவில்லை' அல்லது எழுவதைத் தடுத்தார்கள்' என்பன
போன்ற சொற்கள் தான் மாற்றும்.
எழுந்தார்கள்' என்பதை
உட்கார்ந்தார்கள்' என்பது மாற்றாது.
இந்தக் கருத்தில் அமைந்த
மற்றொரு ஹதீஸும் உள்ளது.
நாங்கள் ஒரு ஜனாஸாவில்
நின்று கொண்டிருக்கும் போது என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா வைக்கப்படுவதை
எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். 'ஏன் எழுந்து நிற்கிறாய்?' என்று
என்னிடம் கேட்டார். 'ஜனாஸா வைக்கப்படுவதற்காகக்
காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்' என்று
நான் கூறினேன். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு
பின்னர் உட்கார்ந்தார்கள்' என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக மஸ்வூத் பின் ஹகம்
எனக்குக் கூறினார்' என அவர் பதிலளித்தார்.
அறிவிப்பவர்: வாகித் பின்
அம்ர் நூல்: முஸ்லிம் 1597
இந்த ஹதீஸும் இவர்கள்
கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர்
உட்கார்ந்தார்கள் என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் செய்தார்கள் என்ற கருத்தைத்
தருமே தவிர எழுந்து நிற்பதை விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.
ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர்
அது கீழே இறக்கப்படும் வரை உட்காரக் கூடாது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து
சென்றவர் ஜனாஸாவை முந்திக் கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச்
சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் வரை காத்திருக்க வேண்டும்.
ஜனாஸா கொண்டு வரப்பட்டு தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே
இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.
'அது உங்களைக் கடக்கும் வரை
அல்லது கீழே வைக்கப்படும் வரை நில்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளனர். நூல்: புகாரி 1307, 1308, 1310
கடக்கும் வரை என்பது
ஜனாஸாவுடன் தொடர்ந்து செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை
என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் கூறப்பட்டது.
நாங்கள் ஒரு ஜனாஸாவில்
கலந்து கொண்டோம். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான)
மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு முன்னர் உட்கார வைத்து, தானும்
உட்கார்ந்தார். அப்போது அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து 'எழுங்கள்' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இதைத் தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக
அறிந்து வைத்துள்ளார்' என்றும் கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், 'இவர் சொல்வது உண்மை தான்' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் அல்
மக்புரி நூல்: புகாரி 1309
'ஜனாஸாவை நீங்கள் கண்டால்
எழுங்கள்! யார் அதைப் பின் தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும்
வரை உட்கார வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரி 1310
ஜனாஸாவைச் சுமந்தவர்களும், பின் தொடர்பவர்களும் ஓடுகிறார்களோ என்று கருதும் அளவிற்கு
ஓட்டமும் நடையுமாகச் செல்வது சிறந்ததாகும்.
நாங்கள் அப்துர்ரஹ்மான் பின்
ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத்
கட்டிலின் முன்னால் நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர்
ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக 'வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்' என்று
கூறினர். அப்போது மெதுவாக அவர்கள் ஊர்ந்து சென்றனர். மிர்பத் எனும் இடத்தை நாங்கள்
அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன்
சேர்ந்தனர். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை
ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள். 'நபிகள் நாயகத்தின் முகத்தைக் கண்ணியப்படுத்திய
இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் நபிகள் நாயகத்துடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து
செல்வோம்' என்று கூறினார்கள். உடனே மக்கள் நெருக்கமாக நடக்கலானார்கள். அறிவிப்பவர்: யூனுஸ் நூல்: நஸயீ 1886
ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்
ஜனாஸாவைச் சுமந்தவர்களும், பின் தொடர்பவர்களும்
ஓடுகிறார்களோ என்று கருதும் அளவிற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வது சிறந்ததாகும்.
நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின்
ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத் கட்டிலின் முன்னால்
நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர்
நோக்கி பின்புறம் நடந்தவர்களாக 'வாருங்கள்!
அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்' என்று
கூறினர். அப்போது மெதுவாக அவர்கள் ஊர்ந்து சென்றனர். மிர்பத் எனும் இடத்தை நாங்கள்
அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன்
சேர்ந்தனர். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை
ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள். 'நபிகள் நாயகத்தின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல்
ஆணையாக! நாங்கள் நபிகள் நாயகத்துடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்' என்று கூறினார்கள். உடனே மக்கள் நெருக்கமாக நடக்கலானார்கள்.
அறிவிப்பவர்:
யூனுஸ் நூல்: நஸயீ 1886
No comments:
Post a Comment