இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில்
இரண்டாவதாகவும் மிக முக்கியமானதாகவும் தொழுகை இருக்கிறது. தொழுகையை
எக்காரணத்தைக் கொண்டும் விடுவதற்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை. பிரயாணம்
போன்ற சிரமமான நேரங்களிலும் ஒருவர் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை.
ஆனால் கருணையாளாகிய அல்லாஹ் பிரயாணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக அவனுடைய
திருத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஜம்வு,
கஸர் என்று சொல்லப்படக் கூடிய சேர்த்து மற்றும் சுருக்கித் தொழக் கூடிய
சலுகைகளை நமக்கு வழங்கியிருக்கிறான்.
சேர்த்து தொழுதல் (ஜம்வு): -
பிரயானம் செய்யும் ஒருவர் இரண்டு நேரத்
தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து தொழுவதற்கு “ஜம்வு” என்று பெயர். இந்த
“ஜம்வு” தொழுகையை பின்வரும் ஏதாவது ஒருவகையில் தொழுது கொள்ளலாம்.
ஜம்வு தக்தீம் – சேர்த்து முற்படுத்தி தொழுதல்: -
பிரயாணம் செய்பவர் லுஹருடைய நேரத்தில்
லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது லுஹர் தொழுது
விட்டு அதைத் தொடர்ந்து அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.
அல்லது
மஃரிபுடைய நேரத்தில், மஃரிபை தொழுது விட்டு அதைத் தொடர்ந்து இஷாவையும் சேர்த்து முற்படுத்தி தொழலாம்.
இவ்வாறு அஸருடைய தொழுகையை முற்படுத்தி லுஹருடன் சேர்த்தோ அல்லது இஷாவுடைய தொழுகையை முற்படுத்தி மஃரிபுடன் சேர்த்தோ தொழுவதற்கு “ஜம்வு தக்தீம் – சேர்த்து முற்படுத்தி தொழுதல்” என்று பெயர்.
ஜம்வு தஃகீர் – சேர்த்து பிற்படுத்தி தொழுதல்: -
பிரயாணம் செய்பவர் லுஹரை பிற்படுத்தி,
அஸருடைய நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது
அஸருடைய நேரத்தில் முதலில் லுஹர் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து
அஸரையும் சேர்த்து தொழுது கொள்ளலாம்.
அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
‘சூரியன்
சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால்
லுஹரை அஸர் நேரம் வரும்வரை தாமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத்
தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன்
சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
அல்லது
மஃரிபை பிற்படுத்தி, இஷாவுடைய நேரத்தில்
மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுது கொள்ளலாம். அதாவது இஷாவுடைய
நேரத்தில் முதலில் மஃரிப் தொழுது விட்டு அதைத் தொடர்ந்து இஷாவையும்
சேர்த்து தொழுது கொள்ளலாம்.
உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். (ஆதாரம் :புகாரி)
இவ்வாறு லுஹருடைய தொழுகையை பிற்படுத்தி அஸருடன் சேர்த்தோ அல்லது மஃரிபுடைய தொழுகையை பிற்படுத்தி இஷாவுடன் சேர்த்தோ தொழுவதற்கு “ஜம்வு தஃகீர் – சேர்த்து பிற்படுத்தி தொழுதல்” என்று பெயர்.
பிரயாணத்தில் இல்லாமல் ஊரில் இருப்பவர்கள் ஜம்வு செய்யலாமா?
ஊரில் இருப்பவர்கள், மழை, கடும் குளிர்
அல்லது கடும் காற்று அடிக்கக் கூடிய நேரத்தில் பள்ளிக்கு வருவது சிரமமாக
இருந்தால் அவர்கள் ஜம்வு செய்து கொள்ளலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவில் மஃரிபையும், இஷாவையும் சேர்த்து தொழுதுள்ளார்கள். (ஆதாரம் :புகாரி, முஸலிம்)
சுருக்கி தொழுதல் (கஸர்): -
பிரயாணத்தில் இருப்பவர்கள், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத் தொழுகைகளாக சுருக்கித் தொழுவதற்கு “கஸர்”
என்று பெயர்.இவ்வாறு சுருக்கித் தொழுவது பிரயாணிகளுக்கு மட்டும் உரிய
சலுகையாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த பிரயாணத்தை
மேற்கொண்டாலும் இவ்வாறு சுருக்கித் தொழுவார்கள். எனவே பிரயாணம் செய்யும்
ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் இந்த நடைமுறையைப் பின்பற்றுவது
அவருக்கு சுன்னத்தாகும்.
நீங்கள்
பூமியில் பிரயாணம் செய்யும்போது (மற்றும்) காஃபிர்கள் உங்களுக்கு விஷமம்
செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச்
சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது….(அல்குர்ஆன் 4:101)
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: -
அல்லாஹ்
தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும்
இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு
ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை
அதிகரிக்கப்பட்டது. (ஆதாரம் :புகாரி)
“ஜம்வு” மற்றும் “கஸர்” செய்பவர்களின் கவனத்திற்கு: -
1) நான்கு ரக்அத் தொழுகைகளான லுஹர், அஸர்
மற்றும் இஷா தொழுகைகளைத் தான் சுருக்கி இரண்டு ரக்அத்களாக தொழலாம்.
ஆனால் மஃரிப் மற்றும் பஜ்ரு தொழுகைகளைச் சுருக்கித் தொழக் கூடாது.
2) நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு
ரக்அத்களாக “கஸர்” செய்யும் போது ஒவ்வொரு ரக்அத்திலும் வழமைப் போல்
சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி முறைப்படி
தொழவேண்டும்.
3) கஸர் செய்யக் கூடிய இச்சலுகை ஊரின்
எல்லையைத் தாண்டியதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. அவர் ஊர் திரும்பும் வரை
தொடர்ந்து கஸர் செய்யலாம். ஆனால் எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால்
அல்லது எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸர் செய்யலாம் என்பதில் மார்க்க
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
4) பிரயாணத்தில் சுன்னத் தொழுகைகள்
இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நான் நபி
صلى الله عليه وسلم அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில்
உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம்
உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான். (ஆதாரம் : புகாரி)
5) பிரயாணம் செய்பவர் பஜ்ரு மற்றும் வித்ருடைய சுன்னத்தான தொழுகைகளை விடாமல் தொழுவது விரும்பத்தக்கது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஊரில்
இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய
தொழுகையை, பஜ்ருடைய தொழுகை – இவ்விரண்டையும் விடாமல் தொழுது
வந்திருக்கிறார்கள்.
6) பிரயாணி ஜம்வு செய்வதுடன் கஸரும் செய்யலாம்.
7) பிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு
செய்யும் போது இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு,
ஒவ்வொரு தொழுகைக்கும் தனித் தனியே இகாமத் சொல்ல வேண்டும்.
ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
‘ஒரு
பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم
அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு
மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
8.) பிரயாணம் செய்பவர் விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
‘நான் நபி
صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா
செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது
தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர்
செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு
நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்டபோது ‘ஆயிஷாவே!
சரியாகச் செய்தீர்’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை!’ (ஆதாரம் : நஸயீ)
9) மழை, கடும் குளிர் அல்லது கடும் காற்று
அடிக்கக் கூடிய நேரத்தில் ஊரில் தங்கியிருப்பவர்கள் “ஜம்வு” செய்யும்
போது “கஸர்” செய்யக் கூடாது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
No comments:
Post a Comment