Social Icons

Sunday, 19 January 2014

காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி?

காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில தடவினால் போதுமா? அல்லது மேல், கீழ் பாகத்தில் தடவினால் போதுமா?
தொழுகைக்காக உளூச் செய்யும்போது தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்த வேண்டிய உறுப்புகளில், இரு கால்களையும் கரண்டைவரை கழுவவேண்டும் என இறைமறை வசனம் (005:006) கூறுகின்றது. 

கால்களைக் கழுவித் தூய்மைப்படுத்தியபின் காலுறைகள் அணிந்திருந்து பின்னர் உளூ முறிந்து மீண்டும் உளூச் செய்யும்போது, காலுறைகளைக் கழட்டி கால்களைக் கழுவாமல், ஈரக் கையால் காலுறைகள் மீது தடவிக்கொண்டால் போதும் ஒளு நிறைவு பெற்றுவிடும் என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறைச் சட்டமாகவுள்ளது.

உளூச் செய்யும்போது கால்களைக் கழுவிக் கொள்ளாமல் காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொள்வதற்கான கால வரம்பு, பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகள் ஆக மூன்று நாட்களும், உள்ளூரில் இருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவு ஆக ஒரு நாள் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கால வரம்பு நிர்ணயித்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள்" என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், "பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 465, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

உள்ளூரில் இருப்பவர் உளூச் செய்யும்போது காலுறைகள் மீது ஈரக் கையால் மஸ்ஹுச் செய்வதற்கான கால வரையறை ஒரு நாள் என்றும்  பயணத்திலிருப்பவருக்கு மூன்று நாள் சலுகை என்றும் மேற்காணும் அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக்கொள்வது

நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்! (இருக்கிறது)" என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அப்போது அவர்கள், "அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்)இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்" என்று சொல்லி, (ஈரக் கையால்)அவற்றைத் தடவிக் கொண்டார்கள். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: புகாரி 363, முஸ்லிம் 459, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம்(இது குறித்து), "இவ்வாறு செய்யலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்(செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் உளூச் செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி(மஸ்ஹு செய்திடலா)னார்கள்" என்று பதிலளித்தார்கள்.(அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) நூல்கள்: புகாரி 387, முஸ்லிம் 452, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).

இந்த அறிவிப்புகளிலிருந்து, காலுறைகள் அணிந்திருந்தால் உளுச் செய்யும்போது காலுறைகளைக் களைந்துவிட்டு  கால்களைக் கட்டாயம் கழுவவேண்டும் என்கிற சட்டம் இல்லை. மாறாக, காலுறைகள் மீது ஈரக் கையால் தடவிக் கொண்டாலே போதுமானது என்று விளங்குகிறோம்.

காலுறையின் எந்தப் பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது?

பொதுவாக, அனைத்து அறிவிப்புகளிலும், நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த காலுறைகள் மீது ''ஈரக் கையால் தடவினார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. திர்மிதீ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ''கால்களின் மேற்புறமும், கீழ்ப்புறமும் தடவிக் கொண்டார்கள்'' என்று பதிவாகியுள்ள அறிவிப்பில் இடம்பெறும் வலீத் பின் முஸ்லிம் என்பவர் நபிமொழி அறிவிப்புகளில் அதிகம் தவறிழைப்பவர் என்றும் இது குறைபாடுள்ள அறிவிப்பாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் (உளூச் செய்யும்போது தம் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். (அறிவிப்பாளர்: முஃகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்: திர்மிதீ 98).

இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸாகும் என இமாம் திர்மிதீ குறிப்பிடுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும், அப்துர்ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் என்பவரைக் குறித்து மாலிக் (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளதாக இமாம் புகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆயினும், இந்த அறிவிப்பை வலுப்படுத்தும் வகையில் நபித்தோழர் அலீ (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் உள்ளதால் இவ்வறிவிப்பு 'ஹஸன்-ஸஹீஹ்' என்கிற நிலைக்கு உயர்கிறது.

மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்பாகத்தைவிட மஸ்ஹுச் செய்வதற்குத் தகுதியானதாகும். ஆனால், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தின் மீது மஸ்ஹுச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்'' என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்து கைர் (ரஹ்) நூல்: அபூதாவூத் 162).

செயல் முறை

கால்கள் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறைகளை அணிந்திருந்தால் உளூ முறிந்து விட்டாலும் காலுறைகள் அணிவிக்கப்பட்டக் கால்களின் தூய்மை நிலை மாறுவதில்லை. அதனால் மறு உளூவின் நிபந்தனைகளிலிருந்து காலுறைகள் அணிந்த கால்கள் கழுவப்பட வேண்டியதில்லை எனும் விதிவிலக்குப் பெறுகின்றன. எனினும், ஈரக் கையால் காலுறைகளின் மேற்புறத்தைத் தடவ வேண்டும்.

காலுறைகள் அணிந்து ஷூ அணிந்த நிலையில் உளூச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது காலுறைகளின் மேற்பகுதி மட்டுமே வெளிப்படும். எனவே, கால்களின் மேற்பகுதியை ஈரக் கையால் தடவிக் கொள்ள வேண்டும். அல்லது ஷூவிலிருந்து கால்களை உருவி வெளியிலெடுத்து காலுறையின் மேற்புறத்தில் தடவிக் கொள்ளலாம்.  இதுவே ''நபி (ஸல்) அவர்கள் காலுறைகளின் மீது ஈரக் கையால் தடவினார்கள்'' என்பதற்குப் பொருத்தமாகவுள்ளது.

காலுறையின் மேற்புறத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொண்டால் போதுமானது. இது தவிர நாமறிந்து, காலுறைகள் அணிந்து உளூச் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை வேறொன்றும் இல்லை!

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்