பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என நம்ப முடியவில்லை என்று அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
ஏனெனில், ஏராளமான இந்தியர்களிடையே அச்சத்தையும் விரோதத்தையும் மோடி ஏற்படுத்தி உள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் சமாளித்து பணியாற்றும் திறன் மோடியிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். மோடி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமற்றவர் என்பதாலேயே அக்கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான மக்களிடையே அச்ச உணர்வையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தியுள்ள மோடியால் அந்த நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்தும் அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக பாராட்டும் வகையில் இல்லை. குஜராத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் பிற மாநிலங்களைவிட குறைவாகவே இருப்பினும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைவிட அந்த மாநில முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக 13.8 கோடி முஸ்லிம்களுக்கும் மற்றும் பிற சிறுபான்மையினருக்கும் பிரச்னையே என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment