அல்லாஹ்வுடைய தனித்தன்மையைப் பெரியார்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும்
விதமாகவும், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தில் மற்றவர்களையும்
பங்காளிகளாக்கும் விதமாகவும் பலவேறு கப்ஸாக்களை தப்லீகின் தஃலீம்
தொகுப்பில் நாம் காணமுடிகின்றது. இந்த வகையில் அமைந்த கப்ஸா ஒன்றைக்
காணுங்கள்!
ஹஜ்ரத் ஷகீக் பல்கீ (ரஹ்) என்பவர்கள் பிரபலமான சூபியும் பெரியாருமாவார்கள்.
அவர்கள் கூறியதாவது; நாம் ஐந்து விஷயங்களைத் தேடினோம். அவற்றை ஐந்து
இடங்களில் பெற்றுக் கொண்டோம்.
1. இரணத்தில் பரக்கத்து, லுஹாத் தொழுகையில் கிடைத்தது.
2. கப்ருக்கு ஒளி, தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது.
3. முன்கர் நகீரின் கேள்விக்கு பதில், கிராஅத்தில் கிடைத்தது.
4. சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக்கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது.
5. அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தொழுகையின் சிறப்புகள் பகுதியில் பக்கம் 37 ல் இந்தத் தத்துவம் (?) இடம்
பெற்றுள்ளது. பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப்
படிக்கப்பட்டு வருகின்றன். இதைப் பல கோணங்களில் நாம் அலசுவோம்.
ஐந்து விஷயங்களை பல இடங்களில் தேடியதாகவும் அவற்றை ஐந்து இடங்களில்
பெற்றுக் கொண்டதாகவும் ஷகீக் பல்கீ என்பவர் கூறியதாக ஸகரிய்யா சாஹிப்
கூறுகிறார்.
இரணத்தில் பரக்கத் லுஹாத் தொழுகையில் கிடைத்தது என்பது முதல் விஷயம்.
அவருக்கு இரணத்தில் பரக்கத் கிடைத்திருக்கலாம். அது லுஹாத் தொழுகையினால்
தான் கிடைத்தது என்று அவருக்கு எப்படி தெரிந்தது? அவர் செய்த வேறு நல்ல
அமல்களுக்காக அது கிடைத்திருக்க முடியாதா? அல்லது வேறு எந்த நல் அமலும்
அவர் செய்ததேயில்லையா?
இந்த அமல் செய்தால் இது கிடைக்கும் என்று அறிவிப்பது அல்லாஹ்வின் முடிவில்
உள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் வழியாக தவிர வேறு எவரும் அறிய முடியாது.
லுஹாத் தொழுகையினால் இரணத்தில் பரக்கத் கிடைக்கும் என்று இவருக்கு வஹீ
ஏதேனும் வந்ததா? ஸகரிய்யா சாஹிபுக்கே வெளிச்சம். இதையாவது அனுபவத்தின்
வாயிலாக அறிந்ததாகக் கூறி சமாளிக்கலாம். ஏனைய நான்கு விஷயங்களை இவர்
தெரிந்து கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சரியம்!
கப்ருக்கு ஒளி தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது என்கிறார் ஸகரிய்யா சாஹிப்,
கப்ரில் ஒளி கிடைக்கும் என்றுகூட இவர் சொல்லவில்லை. கிடைத்தது என்கிறார்.
கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக்
கூறினாரா? கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்?
தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்களா?
முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்தில் கிடைத்தது என்கிறார்.
அப்படியானால் முன்கர் நகீரின் கேள்விகளை இவர் சந்தித்த பிறகு இதை கூறினாரா?
அதாவது இறந்த பிறகு உயிர்த்தெழுந்தாரா? அல்லது இறப்பதற்கு முன்பே முன்கர்
நகீரைச் சந்தித்து விட்டாரா? இதையும் அவர்கள் விளக்கட்டும்!
சிராதுல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் சதகாவிலும்
கிடைத்தது என்று கூறுகிறார். சிராதுல் முஸ்தகீம் என்ற பெயரில் பாலம்
எதுவும் உண்டா என்பது தனியாக இருக்கட்டும்! இவர் எப்போது அந்தப் பாலத்தைக்
கடந்தார்? பாலத்தைக் கடந்து விட்டால் உடனே சுவர்க்கத்தில்
நுழைந்திருப்பாரே! ஒருவேளை சுவர்க்கத்திலிருந்து கொண்டு தான் ஷகீக் பல்கீ
இதைக் கூறினாரா?
ஏட்டில் எழுதப்பட்டு விட்டால் நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை
மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை.
குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசுபறக்கிறது என்று கூறினாலும் ஆமாம்
என்று தலைளாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக்
கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.
லுஹா, தஹஜ்ஜுத், கிராஅத், நோன்பு, ஸதகா ஆகிய நல்லறங்களை வலியுறுத்தி
எத்தனையோ ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இது போன்ற பொய்கள் மூலம் அதற்கு
சிறப்பு சேர்க்க என்ன அவசியம்? என்பதை தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க
வேண்டும். பெரியார்கள் என்பவர்கள் கப்ரில் நடப்பதை எல்லாம் அறியும்
திறனுள்ளவர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்வதே
இக்கதையின் நோக்கம் என்பதை இனியாவது உணர வேண்டும்.
மேற்கூறிய நான்கு விஷயங்களாவது செய்யத்தக்க நல்லறங்களாகவே உள்ளன. அவற்றின்
பலன்கள் பற்றி மட்டுமே பொய் புனையப்பட்டுள்ளது. இவர் கடைசியாகக்
குறிப்பிடும் விஷயம் மார்க்கத்துடன் எந்த விதத்திலும்
சம்மந்தமில்லாததாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைகளுடன் நேரடியாக மோதக்
கூடியதுமாகும்.
அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்கிறார். அர்ஷுடைய நிழலில்
அமர்ந்து கொண்டு தான் இதைக் கூறினாரா? இதை எப்படி கண்டு பிடித்தார்? என்பது
போன்ற கேள்விகளை விட்டு விடுவோம்.
தனிமையில் இருப்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அல்லது வரவேற்கப்பட்ட
அல்லது அனுமதிக்கப்பட்ட காரியமாக நிச்சயமாக இல்லை. இது இஸ்லாத்தில்
முழுமையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும்
தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு
ஆச்சரியமாக உள்ளது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில்
கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
தப்லீகின் ஸ்தாபகர் மரியாதைக்குரிய முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் தனிமையை
நாடிச்சென்றிருந்தால் தப்லீக் இயக்கமே தோன்றியிருக்க முடியாது. தனிமையின்
மூலம் அர்ஷுடைய நிழலை அடையமுடியும் என்பது உண்மையானால் தப்லீக் ஜமாஅத்தினர்
ஏன் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து தொழுகைக்கு அழைக்க வேண்டும்?
பல்வேறு பகுதிகளில் கல்விக்கூடங்களை ஏன் அவர்கள் துவக்க வேண்டும்? தப்லீக்
ஜமாஅத்துடைய அடிப்படையையே தகர்க்கும் நோக்கில் தான் ஸகரிய்யா சாஹிப்
அவர்கள் இவ்வாறு கதைக்கட்டி விட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கல்வத் என்று கூறப்படும் இந்தத் தனிமைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன என்பதைக் காணுவோம்.
நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருத்தல்,
முஸ்லிம்களின் தேவைகளில் உதவி செய்தல், அவர்களுக்கிடையே சமரசம் செய்தல்,
மனைவி, மக்கள், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஜமாஅத்
ஜும்ஆ,பெருநாள் தொழுகையில் பங்கெடுத்தல், தனது வயிற்றுக்காக உழைத்தல்,
அமானிதம் பேணுதல், வாக்குறுதியை நிறைவேற்றல், ஸலாம் கூறுதல், நோயுற்றவர்களை
விசாரிக்கச் செல்லுதல், மரணித்தவரை அடக்கம் செய்தல், ஜனாஸா தொழுகையில்
கலந்து கொள்ளுதல், அறப்போரில் பங்கெடுத்தல் மற்றும் பல்லாயிரம் கடமைகள்
முஸ்லிம்கள் மீது உள்ளன.
இந்தத் தனிமை, மேற்கண்ட கடமைகள் அனைத்தை விட்டும் ஒரு முஸ்லிமை
அப்புறப்படுத்தி விடுகின்றன. இவ்வளவு கடமைகளை முஸ்லிம்கள் மீது
சுமத்தியுள்ள இஸ்லாம் தனிமையை ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை
சம்பந்தப்பட்டவர்கள் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.
ஒரு நபித்தோழர், சுவை மிகுந்த நீரூற்று அமைந்த ஒரு கணவாயைக் கடந்து
சென்றார். அது அவரை மிகவும் கவர்ந்தது. நான் மக்களை விட்டு விலகி இந்தக்
கணவாயிலேயே தங்கி விடலாமே என்று தனக்குள் அவர் கூறிக்கொண்டார். இது பற்றி
அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது அவ்வாறு செய்யாதே! ஒருவர்
அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுவது 70 ஆண்டுகள் அவர் தொழுததை விட மேலானது.
அல்லாஹ் உங்களை மன்னித்து உங்களை சுவர்க்கத்தில் சேர்ப்பதை நீங்கள்
விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! ஒரு
ஒட்டகத்தின் பால் கறக்கும் நேரம் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்
புரிந்தால் சுவர்க்கம் அவருக்கு கடமையாகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சிறு படையாக புறப்பட்டோம். எங்களில் ஒருவர்
தண்ணீரும் தாவரங்களும் நிறைந்த குகைக்கருகே சென்றார். அந்த இடத்தில்
தங்கிக் கொண்டு உலகை விட்டும் தனிமைப்பட அவர் மனம்விரும்பியது. இது
சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் அவர் அனுமதி கேட்டார். அப்ப்போது நபி
(ஸல்) அவர்கள் “நான் யூத மார்க்கத்தையும் கிறித்தவ மார்க்கத்தையும் கொண்டு
அனுப்பப்படவில்லை. தெளிவான நேரான மார்க்கத்தைக்கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன்.
யாருடைய கையில் இந்த முஹம்மதுவின் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக
அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிதுநேரம் அல்லது மாலையில் சிறிதுநேரம்
செலவிடுவது இவ்வுலகை விடவும், அதில் உள்ளவற்றை விடவும் மிகவும்
மேலானதாகும். (போர்) அணியில் ஒருவர் சற்று நேரம் நிற்பது அவர் அறுபது
ஆண்டுகள் தொழுததை விட சிறந்ததாகும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அஹ்மத்
கல்வத் என்ற தனிமைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது யூத,
கிறித்தவ மார்க்கத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தாந்தமாகும் என்பதை
மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இந்த இறக்குமதி சரக்குக்குத் தான்
இஸ்லாமிய முத்திரை குத்த முயல்கிறார் ஸகரிய்யா சாஹிப்.
அர்ஷுடைய நிழல் தனிமையில் இருப்பதில் கிடைத்தது என்ற வாசகம் இஸ்லாத்தின்
அடிப்படையைத் தகர்க்கும் மாற்று மதச்சித்தாந்தம் என்பதை இனியேனும் தப்லீக்
ஜமாஅத்தினர் உணர்வார்களா?
“தனது நிழலைத் தவிர வேறு நிழலேதும் இல்லாத அந்நாளில் ஏழு நபர்களுக்கு
அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவர்களை
வரிசைப்படுத்தினார்கள்.
1. நீதியாக நடந்த தலைவன்:
சமுதாயத்தில் கலந்து அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களிடையே நீதியுடன்
நடந்து கொண்ட தலைவனுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் என்று நபி (ஸல்)
உத்தரவாதம் தருகிறார்கள். ஸகரிய்யா சாஹிபோ தனிமையில் நிழலைத் தேடுகிறார்.
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஊறித் திளைத்த இளைஞன்:
இளம் வயதிலேயே வணக்க வழிபாடுகளில் பேணுதலாக நடந்து கொண்ட இளைஞனுக்கும் அர்ஷின் நிழல் உண்டு என நபி (ஸல்) உறுதியளிக்கிறார்கள்.
வணக்கத்தில் ஊறித் திளைப்பது என்றால் அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களையும் பேணி நடப்பதுதான்.
3, 4. அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசித்து அல்லாஹ்வுக்காகவே பகைத்துக் கொண்ட இருவர்:
சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
5. அழகும், குணமும் உடைய பெண்மணி அழைக்கும் போது “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறி (தன்னைக்) காத்துக்கொண்ட மனிதன்:
சமூகத்தில் கலந்து வாழும் போதே இந்த நிலையை ஒருவன் அடைய முடியும்.
6. வலது கையால் கொடுப்பதை இடது கை அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவன்:
தர்மம் செய்வதென்றால் காடோ, செடியோ என்று மக்களை விட்டு விலகிவிட்டால் அது சாத்தியமாகாது.
7. தனித்திருக்கும்போது அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவன்:
இது கூட காடோ, செடியோ என்று போவதைக் குறிப்பிடவில்லை. சமூகத்தில் கலந்து
வாழும் போது சிறிதளவு தனிமையைப் பெறும் போது அப்போதும் அல்லாஹ்வை நினைத்து
அஞ்சுவதையே குறிப்பிடுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணக் கிடைக்கின்றது.
அர்ஷுடைய நிழலைத் தேடும் வழிகளை அல்லாஹ்வின் தூதர் மிகத் தெளிவாக அறிவித்த
பிறகு ஷகீக் பல்கி என்பவர் யூத மார்க்கத்திலும் கிறித்தவ மார்க்கத்திலும்
அந்த நிழலைத் தேடினார் என்பதை அறிவுடையவர்கள் நம்ப முடியுமா?
இது போன்ற போதனைகள் நாளடைவில் மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்ததால்
நாளைக்கு தப்லீக் இயக்கமும் அழிந்து விடும். தொழுகைக்கு அழைப்பதை விட்டு
விட்டு தனிமையை நோக்கி அவர்கள் ஓடி விடக் கூடும். இதை உணர்ந்தாவது இந்த
தஃலீம் தொகுப்பைத் தூக்கி எறிவார்களா
No comments:
Post a Comment